PUBLISHED ON : நவ 21, 2016

கரடி (Sloth Bear - ஸ்லோத் பியர்)
விலங்கியல் பெயர்: 'மெலுர்சஸ் அர்சினஸ்' (Melursus Ursinus)
வெளிறிய முகம், வெண்ணிற வளைந்த கூரிய நகங்கள், அடர்த்தியான முடி உடையவை. மற்ற வகைக் கரடிகளோடு ஒப்பிடுகையில் இவை மந்தமானவை. சிறிய கண்களும், பெரிய காதுகளும், நீண்ட மூக்கும் உடையவை. நெஞ்சுப் பகுதியில் கோதுமை நிறத்தில் Y அல்லது U வடித்தில் மிருதுவான ரோமம் இருக்கும். கால்கள் ஒவ்வொன்றிலும் ஐந்து கூரிய விரல்கள் உடையவை. வேட்டையாடவும் எதிரிகளைத் தாக்கவும் நீண்டு வளைந்த கூரான நகங்களைப் பயன்படுத்துகின்றன.
இந்த நகங்களில் சேர்ந்திருக்கும் சகதி அழுக்கு ஆகியவற்றில் பாக்டீரியாக்கள் மிகுந்திருக்கும். இவற்றால் தாக்கப்படுபவரின் காயங்கள் எளிதில் குணமடையாது. வால் 7 அங்குல நீளம் இருக்கும். கரடி இனங்களில் நீண்ட வால் உடையவை இந்த இனங்களே. தூசு படிந்த கறுப்பு அங்கியை அணிந்த மாதிரியான தோற்றம், ஆசியக் கருங்கரடிகளிலிருந்து இவற்றை வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றன.
கொடுங்கரடி போல ஊனுண்ணியாக இல்லாமல் பனிக்கரடி, அனைத்துண்ணியாக உள்ளது. பனிக்கரடி, தேன், பழங்கள், பறவை முட்டைகள், எறும்புகள், பூக்கள் ஆகியவற்றையும் விரும்பி உண்கிறது.
கரடிகள்,
* குறைந்த பார்வைத் திறன் உடையது.
* நல்ல மோப்ப சக்தியும், கேட்கும் திறனும் கொண்டவை.
* இரண்டு கால்களினால் நிற்க வல்லவை.
* மெது நடை போட்டாலும், உணவுக்காகவும் ஓய்வெடுக்கவும் லாவகமாக மரமேறக் கூடியவை.
* வெகு தொலைவுக்கு கேட்கும் வகையில், வெவ்வேறு சூழல்களில், 25 விதமான ஒலிகளை எழுப்பக் கூடியவை.
* தண்ணீரில் விளையாடவும் நீச்சலடிக்கவும் விரும்பும்.
ஈரப்பதமுள்ள வனங்கள், அடர்ந்த முட் புதர் பகுதிகள், பசுமையான மேய்ச்சல் வெளிகள், சல் மரக் காடுகள் ஆகியன இவற்றின் வாழ்விடங்கள். பாலூட்டி வகை இனம். இந்தியா, இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளிலேயே பெரும்பாலும் காணப்படுகின்றன. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம் பகுதிகளில் அதிகம் தென்படுகின்றன. ஆப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் கரடிகள் வாழ்வதற்கான சூழல் இல்லை. தென் அமெரிக்காவின் வட பகுதியில் மட்டும் சிறு நிலப்பரப்பில் சில வகைக் கரடிகள் வாழ்கின்றன.
உயரம்: 2.5 அடி
நீளம்: 6 அடி
எடை: 140 கிலோ
ஆயுட்காலம்: 40 ஆண்டுகள்
- தகவல், படங்கள் : ராமலக்ஷ்மி

