
தேயிலைச்செடி
தாவரவியல் பெயர்: 'கமீலியா சைனென்சிஸ்'(Camellia Sinensis)
நாம் அன்றாடம் பருகும் பானங்களில் முக்கியமான ஒன்று தேநீர். தேயிலையைக் கொதிக்க வைத்து தயாரிக்கும் தேநீர் பானம் உலகம் முழுவதும் மிகவும் விரும்பப்படுகிறது.
தேயிலை, 'தீயேசியே' (Theaceae) குடும்பதைச் சேர்ந்த சிறு மரம். குட்டையாக இரண்டு மீட்டர் உயரம் வரை வளரும். ஈரப்பதமான பருவநிலை, மழையளவு, மண் வளம் சிறப்பாக உள்ள மலைச்சரிவுகளில் சாகுபடி செய்யப்படுகிறது.
மூன்று இலைகளும், ஒரு இலை மொக்கும் உள்ள 'ஃப்ளஷ்' (Flush) எனப்படும் செடியின் மேற்பகுதியில் வளரும் இலைகள் மட்டுமே பறிக்கப்படும்.
தேயிலை வகைகளில் சைனா மற்றும் இந்திய அஸ்ஸாம் தேயிலை என இரண்டு வகைகளே பயிரிடப்படுகின்றன. தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட தேயிலை தற்போது உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது.
உலகில் மிகப் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், நுகர்வு நாடாகவும் இந்தியா விளங்குகிறது. இந்தியாவின் வாணிகப் பயிர்களில் முக்கியமான தேயிலை, 180 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிடப்படுகிறது.
தேயிலையின் வகைகள்
* கறுப்புத் தேயிலை (Black Tea - பிளாக் டீ): நூறு சதவீத பிராண வாயு ஏற்றத்தின் பின் தயாரிக்கப்படும். உலகின் பெரும்பாலானவர்கள் அருந்தும் தேயிலைபானம் இதிலிருந்துதான் தயாரிக்கப் படுகிறது. இது சைனாவின் சிவப்புத்தேயிலை எனப்படும்.
* ஊலாங் தேயிலை (Oolang Tea - ஊலாங் டீ): கடும் வெயிலில் உலர்த்தப்பட்டு, பதனிடப்பட்டு சுருட்டப்படும் முன்பு பிராண வாயு ஏற்றம் செய்யும் சிறப்பு முறையில் தயாரிக்கப்படும். இது கடும்பச்சைத் தேயிலை எனப்படும்.
* வெள்ளைத்தேயிலை (White Tea - ஓயிட் டீ): இலை மொக்குகளை உலர வைத்து நேரடியாக பொடி செய்யப்படும். இவை சைனாவில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
* பியூவர் தேயிலை (Puer Tea - பியூவர் டீ): சைனாவின் 'பியூவர்' (puer) நகரத்தில் முதலில் தயாரிக்கப்பட்டது. இத்தேயிலை நுண்ணுயிரி நொதித்தல், பிராண வாயு ஏற்றம் செய்யப்பட்ட பின் உலர்த்திச் சுருட்டும் முறையில் தயாரிக்கப்படுகிறது.
* மஞ்சள் தேயிலை (Yellow Tea - யெல்லோ டீ): பிராண வாயு ஏற்றத்திற்குப் பின் (Oxidation - ஆக்சிடேஷன்) ஈரத் துணியினால் மூடப்பட்டு நீராவியில் வேகவைத்து லேசான மஞ்சள் நிறம் பெறும். இந்த வகையே உலகின் மிக உயர்தரமான தேயிலை.
* பச்சை தேயிலை (Green Tea - கிரீன் டீ): பதனிடப்படுகையில் குறைந்தபட்ச பிராணவாயு ஏற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டு தயாரிக்கப்படும். இவ்வகை, நிழலில் வளர்க்கப்படும் செடிகளில் இருந்தே தயாரிக்கப்படும்.
* குச்சித் தேயிலை (Kukicha Tea- குக்கிச்சா டீ): ஜப்பானில் தேயிலைச் செடியின் சிறு குச்சிகளை பதனிட்டு தயாரிக்கப்படுவது, இது லேசான இனிப்புச்சுவை உடையது.
- அ.லோகமாதேவி,
பேராசிரியை.
காடுகளைக் காப்போம்!
ஒரு நாட்டின் இயற்கை அரணாகவும், தட்ப வெப்பநிலையைச் சீர்செய்யும் சக்தியாகவும் இருப்பது காடுகளே. ஒரு நாட்டின் பொருளாதாரம் நிலைத்திருக்க, அந்த நாட்டின் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பல்லுயிரிய (Biodiversity) உறைவிடமாகத் திகழும் காடுகள் முறையாகப் பேணப்பட வேண்டும். மண் அரிப்பு, மண் சரிவைத் தடுத்து மண் வளத்தைப் பாதுகாப்பதுடன், நீர் சுழற்சியையும் பராமரித்து, சூழலியலின் தரத்தைக் காப்பாற்றும் காடுகளை அழிக்காமல் காப்பாற்றுவது நம் கடமை.
காடுகளைப் பாதுகாக்க, ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ம் தேதியை, 'உலக காடு' நாளாகக் கொண்டாடுகிறது.

