தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!


PUBLISHED ON : நவ 21, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 21, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி

விமானம் எப்படி கீழிருந்து மேல் எழும்புகிறது? ஏதேனும் வாயுக்களா, அல்லது விமான இறக்கைகள் வளைந்து இருப்பது காரணமா?

R. சஜீவ் கிருஷ்ணா, மகாத்மா சி.பி.எஸ்.இ. பள்ளி, மதுரை.


சிறிய பரிசோதனை வழியாக இதனை உணர்ந்துகொள்ளலாம். நோட்டுப் புத்தகத்திலிருந்து ஒரு வெள்ளைத்தாளை எடுத்து, பட்டத்தின் வால் போல சிறிதாக கிழித்துக் கொள்ளுங்கள். அதன் ஒரு முனையை இரண்டு விரல்களுக்கு நடுவே பிடித்து, வாயின் தாடைக்குக் கீழே ஊதுவதற்கு ஏதுவாக வைத்துக் கொள்ளுங்கள். கிடைமட்டமாக தாளின் மேலே காற்றை ஊதுங்கள். என்னவாகும்? மேலே காற்று ஊதப்படுவதால் தாள் கீழே வளையும் என நாம் எதிர்பார்ப்பதற்கு மாறாக, தாளானது மேலே எழும்பி சடசடவென பறப்பதைக் காணலாம்.

கீழே தொங்கிக் கொண்டிருந்த தாள் எப்படி மேலே எழுகிறது? இதன் விடை பெர்னோலி விதியில் உள்ளது. எங்கு ஒரு வாயு அல்லது திரவத்தின் திசைவேகம் அதிகமாக இருக்கிறதோ, அங்கு அழுத்தம் குறையும். இதுதான், பெர்னோலி தத்துவம்.

தாளுக்கு மேலே கிடைமட்டமாகக் காற்றை வேகமாக ஊதும்போது, பெர்னோலி விதியின்படி தாளின் மேல் பகுதியில் காற்றழுத்தம் குறைகிறது. அழுத்தம் குறைவான அந்த பகுதியை நோக்கி தாள் செல்கிறது. இதனால்தான், தாள் மேலே எழுகிறது.

ஆகாயவிமானத்தில் ஜெட் இன்ஜின் அல்லது விசிறி சுழலும்போது விமான இறக்கையின் மேல் வந்து மோதும் காற்று இரண்டாகப் பிரிகிறது. அதில், ஒருபகுதி இறக்கையின் மேலேயும், ஒருபகுதி கீழேயும் பாய்ந்து செல்லும். இறக்கை வடிவமைப்பின் காரணமாக மேல் செல்லும் காற்று வேகமாகச் செல்லும். எனவே, அழுத்தம் குறையும், கீழ் செல்லும் காற்று மெதுவாகச் செல்வதால் அழுத்தம் அதிகம் இருக்கும். இதன் காரணமாக மிதப்பு விசை ஏற்பட்டு விமானத்தால் மேலே எழும்ப முடிகிறது.

கணினி, ஸ்மார்ட்போன் ஆகியவற்றில் இருக்கும் தொடுதிரை எவ்வாறு செயல்படுகிறது?

லலித், 8ம் வகுப்பு, ஜி.கே.டி. மெட்ரிக் பள்ளி, கோவை.


தொடுதிரையின் பின்னே மின்னேற்றத்தை (Charging - சார்ஜிங்) ஏந்தி இருக்கும்படியான பொருள், ஃபிலிம் போன்ற அளவில் பரவி இருக்கும். எல்லா இடத்திலயும் ஒரே அளவு மின்னேற்றம் இருக்கும். அந்த ஃபிலிம்மை கண்ணாடியால் மூடியிருப்பார்கள். நமது உடலிலும் சிறிதளவு மின் ஆற்றல் இருக்கிறது. விரலால் தொடுதிரையைத் தொடும்போது அந்தப் பகுதியில் மாற்றம் ஏற்பட்டு மின்னழுத்தம் (Voltage - வோல்டேஜ்) குறையும். அதை உணர்ந்து கணினி செயல்படும். விரலைச் சுற்றி, சற்றே தடிமனான பருத்தி துணியைச் சுற்றியபடி தொடுதிரையைத் தொட்டுப் பாருங்கள்; கணினி இயங்காது. ஏன் எனில் பருத்தித் துணி வழியாக மின்சாரம் எளிதில் கடக்க முடியாது.

சாப்பிடாமல் இருக்கும்போது, மயக்கமோ, தலைசுற்றலோ வருவது ஏன்?

K. கிருபாகரன், 9ம் வகுப்பு, பாரதி மெட்ரிக் பள்ளி, மேலூர்.


ரத்தத்தில் இயல்பில் இருக்கவேண்டிய குளுக்கோஸ் அளவு குறைந்து போனாலும், சேமித்து வைத்துள்ள கொழுப்பைப் பயன்படுத்தி ஆற்றலை உடலின் திசுக்கள் தானாக ஏற்படுத்திக்கொள்ளும். ஆனால், மூளையில் கொழுப்பு இல்லை. எனவே, அங்கே ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை நம்பித்தான் மூளை செயல்படும். வெகுநேரம் சாப்பிடாமல் இருக்கும்போது, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு வெகுவாகக் குறைந்து போகும். அந்த நிலையில் சரியாக மூளை செயல்பட முடியாது. எனவே, மயக்கமோ, தலைசுற்றலோ நமக்கு ஏற்படுகிறது.

மின்னலை நேரடியாகப் பார்ப்பதால் கண்பார்வை பாதிக்கப்படுமா?

R. கௌசிகா, 10ம் வகுப்பு, இந்து சீனியர் பள்ளி, இந்திரா நகர், சென்னை.


மின்னலை மட்டுமல்ல, அதி பிரகாசமான ஒளியை நேரடியாகப் பார்க்கும்போது கூட பாதிப்பு ஏற்படலாம். செறிவான வெளிச்சத்தைப் பார்க்கும்போது, கண்களின் விழித்திரையில் உள்ள, 'ஒளி உணர்வி செல்கள்' பழுதுபட்டு, அதனுடைய செயல் மங்கும் வாய்ப்பு உள்ளது. இதன் தொடர்ச்சியாக, கண்பார்வை பாதிக்கப்படலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us