PUBLISHED ON : ஜூலை 03, 2017

அறிவுக்கண்ணைத் திறந்து வைப்பதில், நூல்களின் பங்கு மகத்தானது. பாடப்புத்தகங்களைத் தாண்டியும் வெளியே படிக்க கோடிக்கணக்கான நூல்கள் உள்ளன. வாசித்தவற்றில் பிடித்த புத்தகம் பற்றியும், அதன் ஆசிரியர் பற்றியும் சென்னை அரும்பாக்கம்
கோலப்பெருமாள் செட்டி மேல்நிலைப் பள்ளியின் மாணவியர் சிலரிடம் கேட்டோம்...
வர்ஷினி:
பாரதியாரின் கவிதைகளைப் பற்றியே பலரும் பேசுவார்கள். எனக்கு கூடுதலாக அவரது சிறுகதைகளையும் மிகவும் பிடிக்கும். நவ தந்திரக் கதைகள், மிளகாய்ப்பழச் சாமியார் போன்ற கதைகள், பாரதியாரின் புதிய முகத்தை நமக்கு அறிமுகப்படுத்தும். கவிதைகளில் எந்த அளவுக்கு மொழி விளையாட்டு செய்திருப்பாரோ, அதே போல கதைகளிலும் புதிய உத்திகளைச் செய்திருப்பார். தமிழ்ச் சிறுகதைகளின் தந்தை என்று போற்றப்படும் வ.வே.சு ஐயருக்கு முன்பே, பாரதியார் கதைகளை எழுதி இருக்கிறார் என்பதுதான் வியப்பு.
சுபிக்ஷா:
கம்பர் எழுதிய கம்பராமாயணம் என்னைக் கவர்ந்தது. அதில் இருக்கும் அனைத்துப் பாடல்களையும் முழுமையாகப் படித்து முடிக்கவில்லை. படித்த அளவில், தமிழில் இத்தனை சுவை உள்ளதா என வியக்கும் அளவுக்கு, மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. ஆசிரியரின் உதவியுடன் அந்தச் செய்யுட்களைப் படித்து வருகிறேன். ராமாயணத்தின் மூலத்தை அப்படியே மொழிபெயர்க்காமல், அதனைத் தழுவி எழுதியுள்ள இக்காவியத்தை முழுமையாகப் படித்து, தமிழின் சுவையை மற்றவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்பதே எனது ஆசை.
வர்ஷா:
என்னைக் கவர்ந்த கதை, 'பொன்னியின் செல்வன்'. கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய கதை. கல்கி வார இதழில்தான் படிக்கத் தொடங்கினேன். வாராவாரம் பொன்னியின் செல்வனை தொடர்கதையாகப் படிப்பது, சுகமான அனுபவம். அடுத்த வாரம் எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருப்பேன். படித்து முடித்ததும், குறைந்தது அரை மணி நேரமாவது இக்கதையைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு இருப்பேன். தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன் என்று அழைக்கப்படும் அருள்மொழி வர்மனை மையமாக வைத்து இயற்றப்பட்ட புனைவு இது. அவரேதான் இந்தப் பொன்னியின் செல்வர். மேலும் இந்த நாவலில், பெண்களை முக்கிய பாத்திரங்களாக உருவாக்கி இருப்பது, எனைக்கவர்ந்த விஷயங்களில் ஒன்றாகும்.
பிரியதர்ஷினி:
பாரதிதாசன் தமிழின் சிறப்பு பற்றி பாடியதைப்போன்றே, சமூக கருத்துகளையும் பாடி உள்ளார். குறிப்பாகப் பெண்கள் கல்வி கற்கவேண்டும் என்பதைக் குறித்தும் சிறப்பாகப் பாடியுள்ளார். ஒரு குடும்பம் எப்படி வாழவேண்டும் என்பதை, குடும்ப விளக்கில் சொல்லிய பாரதிதாசன், எப்படி இருக்கக்கூடாது என்பதை, இருண்ட விளக்கில் சொல்லி இருப்பார். நிறைய புரட்சிகர கருத்துகளைப் பாடி, காலத்தால் அழியாப்புகழ்பெற்று விளங்கும் பாரதிதாசனின் படைப்புகளே என்னைக் கவர்ந்தவை.