
பரிதிமாற் கலைஞர் - 6.7.1870 - 2.11.1903 - விளாச்சேரி, மதுரை.
முக்கியமான படைப்புகள்:
நாடகங்கள் : ரூபாவதி, கலாவதி
நாவல் : மதிவாணன்
கவிதை நூல்கள் : சித்திரக்கவி , தனிப்பாசுரத் தொகை, பாவலர் விருந்து.
தமிழ் மொழி, தத்துவப் பாடங்களில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். இதனால் அவர் படித்த கல்லூரியில் இருந்தே தத்துவத் துறை ஆசிரியராகப் பணியாற்ற அழைப்பு வந்தது. அதை ஏற்காமல் குறைந்த சம்பளமாக இருந்தாலும் பரவாயில்லை என, தமிழ்த் துறை ஆசிரியராகப் பணி ஏற்றார். தமிழ் மீது கொண்ட பற்றால், 'சூரிய நாராயண சாஸ்திரி' என்ற வடமொழிப் பெயரை, தனித் தமிழ்ப் பெயராக்கிக் கொண்ட அவர் 'பரிதிமாற் கலைஞர்'.
பள்ளிக் காலத்தில் தந்தையிடம் சமஸ்கிருதமும், மதுரை சபாபதி முதலியாரிடம் தமிழும் பயின்றார். பின்னர் மதுரையில் கல்லூரித் தமிழாசிரியர் மூலம், தமிழ் இலக்கணம் கற்க வாய்ப்புக் கிடைத்தது. சென்னை
கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் சேர, ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் உதவித் தொகையும் கிடைத்தது. கல்லூரியில் படிக்கும்போதே 'விவேக சிந்தாமணி' என்னும் இதழில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார்.
கல்லூரியில், செந்தமிழ் நடையில் சுவைபட இவர் பாடம் நடத்துவதால் பிற துறை மாணவர்களும் இவரது வகுப்புக்கு வந்து ஆர்வத்துடன் பாடம் கேட்பார்கள். தமிழ் அறிவும், ஆர்வமும் கொண்ட மாணவர்களைத் தன் இல்லத்துக்கு அழைத்துச் சென்று, தொல்காப்பியம், நன்னூல், சைவ சமய சாத்திர நூல்களைக் கற்பித்தார். வேறு துறை மாணவர்களும் பரிதிமாற் கலைஞரின் சீரிய முயற்சியால் தமிழில் சிறந்து விளங்கினார்கள்.
சென்னை செந்தமிழிசைச் சங்கத்தை நிறுவி, கல்லூரித் தமிழ்ப் பாடங்களுக்கு உரை எழுதினார். 1902ம் ஆண்டு கல்லூரிப் பாடத் திட்டத்திலிருந்து தமிழை விலக்குவதற்கு, சென்னைப் பல்கலைக்கழகம் முடிவெடுத்தது. அதை எதிர்த்த பரிதிமாற் கலைஞர், தமிழ்ப் பாடத்தை கல்லூரிகளில் தொடரச் செய்து வரலாற்றில் இடம் பெற்றார்.
மதுரையில் 4ம் தமிழ்ச்சங்கம் நிறுவ முயற்சி மேற்கொண்டதுடன், தமிழ்ச் சங்கம் ஆற்ற வேண்டிய பணிகளையும் விவரித்தார். தமிழைச் செம்மொழி என்று, முதன் முதலில் மெய்ப்பித்து நிறுவியவரும் இவர்தான். குழந்தைகள் பன்னிரண்டு வயது வரை தமிழ் மொழியிலேயே கல்வி கற்க வேண்டுமென்று ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே கூறினார்.
தன்னால் தமிழ் வாழ வேண்டும் என்ற உணர்வுடன், தமிழ்-, தமிழர் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார். வெறும் 33 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும், இயல், இசை, நாடகமெனத் தமிழுக்குப் பெருமை சேர்த்த இவரின் புகழ், தமிழ் மொழி உள்ளவரை நிலைத்து நிற்கும்!