
ஜூலை 3, 1883 - ஃப்ரான்ஸ் காஃப்கா பிறந்த நாள்
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளர்களுள் ஒருவர். இவருடைய புதினங்கள், அதிகார உலகில் துயரங்களைச் சந்திக்கும் தனிமனிதர்கள் பற்றிப் பேசின. இவரது படைப்புகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன.
ஜூலை 3, 1980 - ஹர்பஜன் சிங் பிறந்த நாள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர். டெஸ்ட் போட்டிகளில், ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையும் இவருக்கே.
ஜூலை 6 - உலக ஜூனோசிஸ் நாள்
ஜூனோசிஸ் என்பது, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோயைக் குறிக்கிறது. வீட்டில் வளர்க்கும் பூனை, நாய், எலி, பறவைகள் போன்றவை மூலம் நோய் பரவுகிறது. இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே, இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
ஜூலை 6, 1946 - ஜார்ஜ் டபிள்யூ. புஷ் பிறந்த நாள்
அமெரிக்காவின் 43வது அதிபர் 2001 முதல் 2009 வரை பதவியில் இருந்தார். அதிபராகப் பதவியேற்பதற்கு முன், இவர் டெக்சாஸ் மாநிலத்தின் ஆளுநராக இருந்தார். இவருடைய தந்தை ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ், அமெரிக்காவின் 41வது அதிபர்.
ஜூலை 7, 1981 - மகேந்திர சிங் தோனி பிறந்த நாள்
இந்திய கிரிக்கெட் வீரர். ஐ.சி.சி. உலகக் கோப்பை, ஐ.சி.சி. சாம்பியன் டிராபி, ஐ.சி.சி. டி20 என, மூன்று கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன்.
ஜூலை 8, 1972 - சௌரவ் கங்குலி பிறந்த நாள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன். உலகின் மிகச்சிறந்த, அணித் தலைவர்களுள் ஒருவர். அறிமுகப் போட்டியிலேயே 131 ரன்கள் குவித்து அசத்தினார். 'பெங்கால் டைகர்', 'தாதா' என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். 2004ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.