PUBLISHED ON : ஜூன் 13, 2016

ரசம், குழம்பு போன்ற உணவுப் பொருட்களில் வாசனைக்காகவும் சுவைக்காகவும் பயன்படுவது பூண்டு. ஒரு நாடு, தேசிய பூண்டு தினம் என்று ஒரு நாளைக் கொண்டாடுகிறது!
அது எந்த நாடு என்பதற்கு ஒரு சஸ்பென்ஸ் வைத்துவிட்டு, பூண்டு பற்றிய சில தகவல்களைத் தெரிந்துக்கொள்வோம்...
பூண்டு கிட்டத்தட்ட 7,000 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளது. இது, மத்திய ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. பண்டைய எகிப்து மக்கள் உணவு, மருந்துப் பொருளாகப் பூண்டை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
பூண்டுச் செடி, சுமார் 1.2 மீட்டர் உயரம்வரை வளரக் கூடியது. இதில் நூற்றுக்கணக்கான வகைகள் உண்டு. வெள்ளை, சிவப்பு, ஊதா, இளஞ்சிவப்பு(rose) நிறங்களில் விளைகிறது. மிதமான வெப்ப நிலையில் ஆண்டு முழுவதும் பயிரிடக்கூடியது. வெங்காயத்தைப் போன்றே இதன் தாள், பூ ஆகியவற்றையும் சில நாடுகளில் உண்ணப் பயன்படுத்துகிறார்கள்.
வயிற்றுப் புற்று, மார்புப் புற்று, குடல் புற்று, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் தடுக்க பூண்டு உதவுகிறது. காய்ச்சல், தலைவலி, மூக்கடைப்பு போன்ற நோய்களைக் குணமாக்குகிறது.
பூண்டு விளைச்சலில் சீனா, இந்தியா, கொரியா, எகிப்து, ரஷ்யா ஆகிய நாடுகள் முன்னணியில் இருக்கின்றன. பிளேக் (plague)நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள ஐரோப்பிய மக்கள் பூண்டை உணவில் சேர்த்துக்கொண்டார்கள்.
முதல் பத்திக்கான விடையைப் பார்க்கலாமா?
பிரான்ஸ் நாடுதான் ஏப்ரல் 19 ஆம் தேதி 'தேசிய பூண்டு தின(ம்)' மாகக் கொண்டாடுகிறது!
