PUBLISHED ON : ஜூன் 13, 2016

ஒரு நதி ஓடினாலே ஊருக்குச் சிறப்பு. இரண்டு நதிகள் ஓடினால்? இன்னும் செழிப்புதானே! அப்படி இரு நதிகள் ஓடிய செழிப்பான பகுதி மெசபடோமியா (Mesopotamia).
அந்த இரு நதிகள் யூப்ரட்டீஸ் (Euphrates), டைகிரீஸ் (Tigris).
மெசபடோமியா என்று அழைக்கப்பட்ட பகுதி இன்றைய ஈராக். நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்பட்டது. கி.மு. 3500 ஆண்டுக்கு முன்னரே அங்கு வாழ்ந்த மக்கள் விவசாயம், கலை, அறிவியல், கணிதம், எழுத்து, ஆடை, நாகரிகம் போன்றவற்றில் சிறப்புற்று இருந்தார்கள். ஆடு மாடுகளைத் தனியாகப் பிரித்து மந்தைகளை உருவாக்கினார்கள். வீட்டின் முன் மரம், செடி, கொடிகள் வளர்த்தனர். சக்கரம் உட்பட பல பொருட்களை கண்டு பிடித்தனர். இந்த நிலப்பகுதியில் வாழ்ந்தவர்கள் சுமேரியர்கள். மன்னர்களும் மக்களும் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர். உலகம் தட்டையானது என்று நம்பினர்.
மெசபடோமியாவின் ஒரு பகுதி பாபிலோன். பாபிலோனை ஆட்சி செய்த அரசர்களில் புகழ் மிக்கவர் இரண்டாம் நெபுகாத்நெஸார் (Nebuchadnezzar II).
கி. மு. 605 முதல் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தவர். பழைய உலக அதிசயங்களில் ஒன்றான தொங்கும் தோட்டத்தை உருவாக்கியவர். யூப்ரட்டீஸ் நதியின் நீரை சங்கிலிக் குழாய் (Chain Pump) வழியாக மாடியில் இருக்கும் செடிகளுக்கு எடுத்துச்சென்று பாய்ச்சியவர். அந்த அதிசயத் தோட்டம் பிறகு பூகம்பத்தால் அழிந்து போனது.
நாகரிகத்தைப் போய் யாராவது தொட்டில் என்று அழைப்பார்களா? யாருக்காவது தோன்றினால் அதற்கான பதில், குழந்தைகள் தொட்டிலில் உறங்கி, பின் பெரிய மனிதர்களாய் வளர்வது போல் நாகரிகங்கள் அனைத்துக்கும் காரணம் மெசபடோமியா என்பதால் அவ்வாறு சொல்லப்படுகிறது.
