PUBLISHED ON : ஜூன் 13, 2016

பாலு பரபரப்பாக கையில் ஒரு பேப்பரோடு வந்தான். அவன் அப்படி வந்தாலே எனக்குத் தெரிந்துவிடும், இன்னொரு ஒப்பந்தம் போட வந்திருக்கிறான் என்று. பாலுவுக்கு இப்படி அடிக்கடி ஒப்பந்தம் போடப் பிடிக்கும்.
“மாலு, புது அக்ரிமென்ட் படி, நீ எனக்குத் தரவேண்டிய பாக்கி பட்டியல் இதில் இருக்கிறது. நான் உனக்குத் தரவேண்டிய பாக்கிக்கான பட்டியலும் இருக்கிறது. யார் எப்போது என்றைக்குள் தரவேண்டும் என்று தேதி குறித்திருக்கிறேன். உனக்கு ஏதாவது மாற்றவேண்டுமானால் சொல்லு” என்று காகிதத்தை நீட்டினான். பாக்கி என்றால் பண பாக்கி கிடையாது. என்றைக்கோ அவனிடம் ஒரு பெட் கட்டித் தோற்றபோது நட்ஸ்மேனியா ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாக சொல்லியிருப்பேன். அவன் என்னிடம் ஏதாவது கதைப் புத்தகம் படிக்க வாங்கிப் போயிருப்பான். இதெல்லாம்தான் பாக்கிக் கணக்கு. பாலுவுக்கு எல்லாவற்றையும் எழுதி ஒப்பந்தமாக்குவது ஒரு பொழுதுபோக்கு.
“என்னுடைய ஆஸ்ட்ரிக்ஸ் காமிக்ஸ் பத்து புக்கையும் இன்னும் நீ கணக்கில் சேர்க்கவில்லையே” என்றேன் காகிதத்தைப் பார்த்தபடி. பாலு உதட்டைக் கடித்துக் கொண்டு “சேர்த்துவிடலாம்” என்றான்.
“என்ன 'மேக்னா கார்ட்டா' கையெழுத்தாகிறதா?” என்று கேட்டுக் கொண்டே வந்தார் ஞாநி மாமா. “அதெல்லாம் சின்ன சமாச்சாரம். இது பெரிய விஷயம்” என்றான் பாலு சிரித்துக்கொண்டே “இது பெரிசுதான். அது இதை விடப் பெரிசு. நீங்க ரெண்டு பேர் மட்டும் ஒப்பந்தம் போடுகிறீர்கள். 'மேக்னா கார்ட்டா'ன்னாலே லத்தீனில் 'பெரிய ஒப்பந்தம்' என்றுதான் அர்த்தம். அதை இரண்டு தரப்புக்கு இடையே போடவைக்க மூன்றாவதாக ஒருத்தர் இருந்தார். பிரபுக்கள் அரசருக்கு எவ்வளவு கப்பம் கட்டவேண்டும் என்பது பற்றி இங்கிலாந்து அரசர் ஜானுக்கும் பிரபுக்களுக்கும் சண்டை. இதில், ராஜகுருவான கேண்ட்டர்பரி ஆர்ச்பிஷப் குறுக்கே நுழைந்தார். இரு தரப்புக்குமான ஒப்பந்தத்தைப் போடவைத்தார். அதில் அவர் சாமர்த்தியமாக அரசர் எந்த அளவு தன் தேவாலய விஷயங்களில் தலையிடலாம் என்பதையும் சேர்த்துக் கொண்டார். இதுதான் மேக்னா கார்ட்டா” என்றார் மாமா.
“அதைப் போட்டு 800 வருடமாகிறதே. இன்னும் அதன்படிதான் இங்கிலாந்தில் நடக்கிறதா?” என்றேன்.
“அதைப் போட்ட சில மாதங்களிலேயே மூன்று தரப்பும் அதை மதிக்கவில்லை. அப்போதே அது காலாவதியாகி அரசருக்கும் பிரபுக்களுக்கும் யுத்தமெல்லாம் ஆரம்பித்துவிட்டது” என்றார் மாமா.
“ஆனால் ஏன் இன்றும் மேக்னா கார்ட்டா என்றால் ஏதோ பெரிய விஷயம் மாதிரி பேசுகிறார்கள்?”
“800 வருடமாக மேக்னா கார்ட்டாவுக்குப் பிறகு உருவான பல அரசியல் சட்ட உரிமை ஒப்பந்தங்களை, சட்டங்களை உருவாக்கிய மேதைகள் அதை முக்கியமாகக் கருதி இருக்கிறார்கள். தனி நபர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே தனி நபர் உரிமை பற்றி போட்ட முதல் ஒப்பந்தம் அது என்பதுதான் அதற்கு முக்கியத்துவம். ஆனால், அந்த முதல் ஒப்பந்தப்படி எதுவுமே நடக்கவில்லை. இதுதான் சரித்திரத்தின் விசித்திரம். ஒன்றுமே இருக்காது. ஆனால் மிக முக்கியமான இடத்தை அடைந்துவிட்டிருக்கும். மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அதற்குப் பெரிய முக்கியத்துவமே இருக்காது. இந்த மாதிரி என்னவெல்லாம் சரித்திர விசித்திரம் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய். சுவாரஸ்யமாக இருக்கும்” என்று சொல்லிவிட்டுப் போனார் மாமா.
நல்ல ஐடியா என்று முதலில் இந்த ஜூன் மாதத்தில் எனக்கு சரித்திர விசித்திரங்கள் என்று பட்டதை தொகுத்திருக்கிறேன்.
தாஜ் மஹாலை யாருக்குப் பிடிக்காது? நான் அப்பாவுடன் டெல்லி போய் பார்த்திருக்கிறேன். மாலை நேரம் நிலவொளியில் பார்த்தபோது அவ்….வளவு அழகு.
தாஜ் மஹாலுக்கு புகழ் அதன் அழகால் மட்டும் இல்லை. அரசர் ஷாஜஹான் தன் மனைவி மும்தாஜ் மீது இருந்த அன்பின் அடையாளமாக அதைக் கட்டினதால்தான் அத்தனை புகழ். மும்தாஜ் இதே ஜூன் மாதம்17ஆம் தேதிதான் 385 வருடங்களுக்கு முன்னால் இறந்துபோனார். அதன்பின் அவருக்காக தாஜ் மஹால் கட்ட 22 வருடமாயிற்று. விசித்திரம் என்னவென்றால், ஷாஜஹானும் மும்தாஜும் ஒன்றாக வாழ்ந்ததே 19 வருடங்கள்தான். இன்னும் பெரிய கொடுமை இந்த 19 வருடத்தில் மும்தாஜ் 14 குழந்தைகளைப் பெற்றிருக்கிறார். 14 ஆவது குழந்தை பிரசவத்தில்தான் அவர் இறந்தார். 14 குழந்தைகளில் ஏழு குழந்தைகள் சிறு வயதிலேயே செத்துப் போய்விட்டன. மும்தாஜ் சாகும்போது அவர் வயது வெறும் 38தான். இப்படி 19 வருடத்தில் 14 குழந்தை பெறச் செய்து ஒரு பெண்ணை பிரசவத்தில் சாகவிட்டதை எப்படி அன்பு என்று அழைப்பது? தாஜ் மஹால் எல்லா அழுக்கையும் நம்மிடமிருந்து மறைத்துவிட்டது. சரித்திர விசித்திரம் இதுதான்.
பாலுவுக்குப் பிடித்த பனியன் சேகுவேரா படம் போட்ட பனியன்தான்.அவனுக்கு அவர் யாரென்று கூடத் தெரியாது. அந்த பனியன் போடுகிற பெரும்பாலானவர்கள் பாலு மாதிரிதான் என்று நினைக்கிறேன். 'சே'வைத் தெரிந்தவர்கள் பலருக்கும் கூட அவரை கியூபா புரட்சியில் போராடிய கெரில்லா தலைவர், லத்தீன் அமெரிக்காவில் இருந்த ஒவ்வொரு அடிமை நாட்டையும் விடுவிக்க அங்கே போய் போராடச் சென்று கடைசியில் எதிரிகளிடம் சிக்கிக் கொல்லப்பட்டவர் என்பது மட்டும் தெரிந்திருக்கும்.
அவரைப் பற்றி அதிகம் தெரியாத விஷயங்கள்தான் சுவாரசியமானவை. அவர் மருத்துவ (டாக்டர்) படிப்பு முடித்தவர். இரண்டு முறை தென் அமெரிக்காவில் மோட்டார் சைக்கிளிலேயே நெடும்பயணம் போனவர். முதல்முறை 4500 கி.மீ. இரண்டாவது முறை 8000 கி.மீ. இந்த அனுபவங்களை டயரியாக எழுதியிருக்கிறார். அதை வைத்து மோட்டார் சைக்கிள் டயரிஸ் என்று சினிமா கூட எடுத்திருக்கிறார்கள்.
'சே' பயங்கரமான படிப்பாளி. அவர் காலத்தின் முக்கியமான இலக்கியங்கள், தத்துவங்கள் எல்லாவற்றையும் படித்திருக்கிறார். அதைப் பற்றி நிறைய நோட்ஸ் எழுதி வைத்திருக்கிறார்.
கியூபாவில் அமைச்சராக இருந்தபோது அமெரிக்க கம்பெனிகள் ஆக்கிரமித்த நிலங்களை எல்லாம் எடுத்து விவசாயிகளுக்கு விநியோகிக்கும் பெரிய வேலையைச் செய்து முடித்திருக்கிறார். ஐ.நா. சபையில் போய் பேசியிருக்கிறார். இந்தியாவுக்கு கூட வந்து அப்போதைய நம் பிரதமர் நேருவைச் சந்தித்திருக்கிறார்.
என்னைப் பொறுத்த மட்டில் அவரை நாம் நினைவு வைத்துக் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் எழுத்தறிவுக்காகத்தான். அவர் அமைச்சரானபோது 1961ல் கியூபாவில் எழுத்தறிவு 60 சதவிகிதம்தான். ஒரு லட்சம் பேரை ஆசிரியர்களாக கிராமங்களுக்கு அனுப்பிப் பள்ளிகள் திறக்கவைத்து ஒரே வருடத்தில் எழுத்தறிவை 96 சதவிகிதமாக்கிக் காட்டியிருக்கிறார் 'சே'. உண்மையில் இதற்காகத்தான் அவரை நாம் நினைவு கூரவேண்டும். ஆனால் போராட்டம் துப்பாக்கி என்றே நினைவு கூர்வதுதான் சரித்திர விசித்திரம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் (1872) ஓட்டு போட்டதற்காக சூசன் ஆண்டனி கைது செய்யப்பட்டார். காரணம் அப்போது அமெரிக்காவில் பெண்களுக்கு ஓட்டுரிமை கிடையாது. இதை மீறி அவரும் 50 பேரும் ஓட்டு போட முயற்சித்ததால் கைதானார்கள். சூசனுக்கு 100 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. கட்ட மறுத்துவிட்டார். அமெரிக்காவில் பெண்களுக்கு 1920ல்தான் வாக்குரிமை தரப்பட்டது. அப்போது சூசன் உயிரோடு இல்லை !
பின்குறிப்பு: இதை எழுதியது வாலு. என் கொள்ளுத்தாத்தாவான கணினி மவுசை எப்போது கண்டுபிடித்தார்கள் என்று சரித்திரத்தில் ஆராய்ந்தேன். அமெரிக்கர் எங்கெல்பர்ட் 1968ல் உருவாக்கியதுதான் என் முதல் மூதாதை வாலு. சரித்திர விசித்திரம் என்னவென்றால் இந்தக் கண்டுபிடிப்பால் எங்கெல்பர்ட்டுக்கு ஒரு பைசா கூட ராயல்டியாகக் கிடைக்கவில்லை. அவர் பேடண்ட் உரிமை கோராமல் விட்டுவிட்டார்!
