
“இந்த வருடமும் டயரி எழுதப் போகிறாயா?” என்றுகேட்டான் பாலு.
“நீ இந்த வருடமாவது டயரி எழுதப் போகிறாயா?”என்றேன். பாலு அவ்வப்போது உணர்ச்சி வேகத்தில் டயரி எழுதப் போவதாக அறிவித்துவிட்டு சிலநாட்களில் நிறுத்திவிடுவான். “தெரியல. எழுதினாலும் எழுதுவேன். எதுவும் நிச்சயமாக சொல்ல முடியாது” என்று சாமர்த்தியமாக பதில் சொன்னான்.
“தொடர்ந்து 50 வாரமாக டயரி எழுதுவது உனக்கு அலுப்பாக இல்லையா?” என்று கேட்டான். “50 வாரம் எல்லாம் ஒன்றுமே இல்லை. 55 வருடம் தினசரி டயரி எழுதியவர் இருந்தார் தெரியுமா?”என்றார் ஞாநி மாமா. பிரிட்டனில் ஜான் எவலின் 1642லிருந்து 1697வரை தினசரி டயரி எழுதியிருக்கிறார்.
“சாமுவேல் பீப்ஸின் டயரிதான் அதிகப் புகழடைந்தது. அவர் ஒன்பதுவருடம்தான்
(1660- - 1669) எழுதியிருக்கிறார். இருவருமே தினமும் சாப்பிட்டது, தூங்கியது, காதலித்தது முதல், நாட்டு நடப்பு, அரசியல், முக்கிய சம்பவங்கள் வரை, விரிவாக எழுதியிருக்கிறார்கள். பழைய தபால் தலைகளுக்கு மவுசு இருக்கிற மாதிரி பழைய டயரிகளுக்கும் பெரும் மதிப்பு  உண்டு.” என்றார் மாமா. காந்தி கூட டயரி எழுதியிருக்கிறார். விட்டு விட்டு எழுதியிருக்கிறார். காந்தியின் செயலாளர்  மகாதேவ் தேசாய்,  உதவியாளர் மனுபென் டயரிகள் முக்கியமானவை.  
“எழுதும்போதே இது எதிர்காலத்தில் மற்றவர்களால் படிக்கப்படும் என்பது தெரியும்தானே?அதற்கு ஏற்ற மாதிரி உண்மைகளை வளைத்துத்தானே எழுதுவார்கள்?” என்று கேட்டான் பாலு.
“அப்படிப் பொதுவாக சொல்லிவிட முடியாது. பெரும்பாலானவர்கள் டயரி எழுத ஆரம்பிக்கும்போது, தனக்காக மட்டுமேதான் என்று எழுத ஆரம்பிக்கிறார்கள். ஒரு வேளை வேறு யாராவது படித்தால் என்ன செய்வது என்ற பயம் சிலருக்குத்தான் இருக்கும். அவர்கள் கூட ஒரு சிக்கலில் தங்கள் நியாயம் என்ன என்று எழுதிவைத்து விட ஆசைப்படுவார்கள். அவ்வளவுதான்” என்றார் மாமா. 
“நமக்காக மட்டுமே என்று எதற்காக டயரி எழுதவேண்டும்?” என்று கேட்டான் பாலு. “சிந்திப்பதை விட எழுதும்போது நம் சிந்தனைகள் இன்னும் தெளிவாகும். கூர்மையாகும். கோவையாகும். முதலில் தோன்றாததெல்லாம் எழுதும்போது தோன்ற ஆரம்பிக்கும். நம் சிந்தனையை நாமே ஒழுங்குபடுத்திக் கொள்ள, எழுதுவது ஒரு முக்கியமான பயிற்சி.” என்றார் மாமா.
“முதன்முதலில் யார் டயரி எழுத ஆரம்பித்தார்கள்?”
என்று கேட்டான் பாலு.  எழுத்து உருவாவதற்கு முன்னாலேயே ஒரு விதமான டயரியை ஆதி மனிதர்கள் எழுதியிருக்கிறார்கள். அதுதான் குகை ஓவியம். தான் பார்த்த காட்சிகள், மிருகங்கள் எல்லாவற்றையும் குகைச் சுவரில் வந்து பதிந்து வைப்பதும் ஒரு டயரிதான். எகிப்தில் 4500 வருடங்களுக்கு முன்னால் சூயஸ் நகரத்துக்கு 74 மைல் தொலைவில் இருக்கும் துறைமுகத்தின் குகைகளில்  இருந்த சுவடிகள் கிடைத்தன.  கிசா என்ற இடத்தில் ஒரு பிரமிடு கட்டுவதற்காக அந்த துறைமுகம் வழியே பெரிய பெரிய கற்களை எடுத்துப் போயிருக்கிறார்கள். அதற்கு வேலை பார்த்தவர்கள் பட்டியல், கொடுத்த சம்பளக் கணக்கு, அவர்கள் சாப்பிடுவதற்காக வாங்கிய ஆடுகளின் எண்ணிக்கை, எல்லாம் எழுதி வைத்திருக்கிறது.
“அப்படியானால் அது வரவு செலவு நோட்டுதானே? அது எப்படி டயரியாகும்?” என்றேன்.
“டயரியில் முதலில் அன்றாட வரவு செலவு கணக்கைத்தான் குறிக்க ஆரம்பிப்பார்கள். அப்புறம் அன்றைய நிகழ்ச்சிகள் பற்றி ஓரிரு வரிகள் எழுத ஆரம்பிப்பார்கள். வரவு செலவைக் குறிக்கும் பழக்கம் நல்லது. மாதக் கடைசியில் திருப்பிப் படித்தால், நாம் ஒழுங்காக செலவுசெய்து வந்திருக்கிறோமா என்பது நமக்கே புரியும்.” என்றார் மாமா.
“ஒழுங்காக செலவு செய்பவர்கள் மட்டுமல்ல. ஒழுங்கான வரவு இல்லாதவர்களும் கூட டயரி எழுதி மாட்டிக் கொள்கிறார்கள்.”என்றது வாலு. மாமா சிரித்தார். “சி.பி.ஐ, வருமான வரி சோதனைகளில் சிக்குகிறவர்கள் பலர் கறுப்புப் பணம், சட்டவிரோதமான பணப் பரிமாற்றம், லஞ்சம் விவரங்களையெல்லாம் டயரியில் குறித்து வைப்பார்கள். ரெய்டில் சிக்கும் டயரியே அவர்களைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது.”என்றார்.
தப்பையெல்லாம் அப்படி அசட்டுத்தனமாக குறித்து வைப்பார்களா என்ன என்று ஆச்சரியமாகக் கேட்டேன்.
“ஏராளமான ஊழல் நடக்கும்போது, யாரிடம் எவ்வளவு வாங்கினோம், எவ்வளவு பாக்கி என்பதெல்லாம் குழப்பமாகிவிடும். அதனால் குறித்து வைத்திருப்பார்கள். தவிர அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எப்போதுமே தான் மாட்டவே மாட்டோம் என்று ஒரு அசட்டு நம்பிக்கை இருக்கும். அதுதான் வீழ்ச்சியின் ஆரம்பம்.” என்றார் மாமா. 
“டயரி ஒரு டைம் பாம். எப்போது யார் கையில் கிடைத்து எப்படி வெடிக்கும் என்பதே தெரியாது. எழுதாமல் இருப்பதுதான் நல்லது என்று தோன்றுகிறது.” என்றான் பாலு.
“அப்படி இல்லை. நல்லவர்கள் டயரி எழுதினால் நேர்மையாக எழுதுவார்கள். அது பின்னால் மற்றவர்களுக்கு பயன்படும். கெட்டவர்கள் தங்கள் கெட்ட காரியங்களை டயரியில் குறித்திருக்கலாம். அதுவும் சிக்கும்போது நன்மையைத்தான் உருவாக்கும். எப்படிப் பார்த்தாலும் டயரி எழுதுவது நல்லது” என்றார் மாமா.
“பாலு நீ நல்லவனா, கெட்டவனா?” என்றது வாலு.
“தெரியலியே” என்று விஷமமாக சிரித்தான் பாலு.
வாலுபீடியா 1
ஹிட்லர் டைரி எழுதியிருந்தால் என்ன எழுதியிருப்பார்? அதுவும் ஹிட்லரின் அறுபது டைரிகள் கிடைத்தால் எப்படி இருக்கும்? 1983ல் ஜெர்மன் பத்திரிகை ஸ்டெர்ன் அந்த 60 டைரிகளையும் சுமார் 19 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. விபத்துக்குள்ளான போர் விமானத்தில் இவை கிடைத்ததாக அந்த டயரிகளைக் கொடுத்த குஜாவ் என்பவர் தெரிவித்தார். ஸ்டெர்ன் பத்திரிகையின் நிருபர் ஹைட்மன் தொடர்ந்து குஜாவுடன் பேசி ஒவ்வொரு டயரியாக வாங்க ஏற்பாடு செய்தார். மொத்த பேரமும் ரகசியமாக இரு வருடங்கள் நடந்தன. எல்லாவற்றையும் வாங்கி முடித்ததும் அவற்றை வெளியிடும் உரிமையை பல்வேறு சர்வதேச பத்திரிகைகளுக்கு ஸ்டெர்ன் விற்பனை செய்தது. வெளியீட்டு நாளன்றுதான் தெரிந்தது - எல்லாமே போலி டயரிகள் !
இரு வருடமாக அந்த டயரியின் மாதிரி பக்கத்தை ஆய்வு செய்த வரலாற்று அறிஞர்கள் பலர், அது உண்மையானது என்றே சொல்லியிருந்தார்கள்.  கடைசியில் ரசாயனப் பரிசோதனைக்கு அனுப்பியதும் சாயம் வெளுத்துவிட்டது. 
எல்லா டயரிகளையும் எழுதித் தயாரித்தவர் குஜாவ்.  ஹிட்லர் பற்றி வந்திருந்த பல்வேறு புத்தகங்களிலிருந்து தகவல் திரட்டி அதையெல்லாம் டயரிக் குறிப்புகளாக அவர் எழுதியிருக்கிறார். ஹிட்லர் போலவே கையெழுத்து. பழைய பேப்பர் மாதிரி நோட்புக் தெரிவதற்கு தேநீரை ஊற்றிப் பழுப்பாக்கியிருக்கிறார். இந்த மோசடியை கண்டுபிடிக்க இரு வருடமும் கோடிக்கணக்கான பணமும் வீணாகியிருக்கிறது. கடைசியில் குஜாவிடமும் ஹெட்மனிடமும் முடிந்தவரை பணத்தை மீட்டு இருவரையும் ஐந்து வருடம் சிறைக்கு அனுப்பினார்கள்.
வாலுபீடியா 2
நான்: யாருடைய டயரியைப் படிக்க உங்களுக்கு ஆர்வம் என்று கேட்டேன்.
மாலு: சிவகார்த்திகேயன் 
பாலு: மாலுவோட நிஜமான டயரி!
மாமா: சசிகலா
நான்: எந்த நிஜமான டயரியும் உங்களுக்குக் கிடைக்கவே கிடைக்காது!
வாலுபீடியா 3
பத்தாம் நூற்றாண்டில் இருந்த அரபி அறிஞர் இபின் பன்னாவின் டயரிதான், முதன்முதலில் இப்போதுள்ளது போல, தேதி வாரியாக எழுதும் முறையைப் பின்பற்றி எழுதப்பட்டது. 

