PUBLISHED ON : ஜன 02, 2017

புள்ளிச் சில்லை
ஆங்கிலப் பெயர்: 'ஸ்பாட்டட் முனியா' (Spotted Munia)
வேறு பெயர்கள்: சில்லை, திணைக்குருவி, ராட்டினக் குருவி
உயிரியல் பெயர்: 'லோன்சுரா பங்க்சுலடா' (Lonchura Punctulata)
திணைக்குருவி வகையைச் சார்ந்த, சிட்டுக்குருவி அளவிலான சிறு பறவை. 'எஸ்ட்ரில்டிடா' (Estrildidae) குடும்பத்தைச் சேர்ந்தது. ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. உடலின் மேற்புறம் பழுப்பு நிறத்தில் இருக்கும். மார்பு, வயிற்றுப்புறம் செதில் போன்ற புள்ளிகளுடன் காணப்படும். அலகு பெரிதாக, கூம்பு வடிவத்தில் இருக்கும். சில்வண்டு போன்று சத்தம் எழுப்பும். கூட்டமாக வாழும். சிறு புற்கள், பூச்சிகள், பழங்கள் போன்றவற்றை உண்ணும். புற்களின் சிறு கிழங்குகளையும் கொத்தி உண்ணும். இதன் அலகு திணை உண்ண ஏற்ற வகையில் அமைந்திருக்கிறது. இதனால் திணைக்குருவி என்றும் குறிப்பிடப்படுகிறது.
தோற்றத்தில் ஒரே மாதிரி தெரிந்தாலும், ஆண் பறவைகளுக்கு புள்ளிகள் அழுத்தமான வண்ணத்திலும், தொண்டைப் பாகம் ஆழ்ந்த பழுப்பிலுமாக இருக்கும். பனை, தென்னை மரங்களில் காய்ந்து தொங்கும் சல்லடை போன்ற நார்கள் சில்லாட்டை என்பர். மென்மையான இந்த சில்லாட்டைகளைக் கொண்டு கூடுகளைத் தயார் செய்வதால், இவற்றுக்குச் சில்லைகள் என்றும் பெயர் உண்டு. புற்கள், வாழைநார்கள், இலைகள், பறவைகளின் இறகுகள் போன்றவற்றைக்கொண்டும் கூடு கட்டும். கூடு அமைக்கும் பொழுது, மிகவும் சுறுசுறுப்பாக ராட்டினம் போல் சுற்றிச் சுற்றி வரும். இருபாலினங்களும் இணைந்தே கூடு கட்டும். ஆறு முட்டைகள் வரை இடும்.
முட்டைகளை ஆண், பெண் பறவைகள் அடை காக்கும். பதினைந்து நாட்களில் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளியில் வரும். குஞ்சுகள் வெளிவரும் பருவ காலத்தைப் பொறுத்து 7 முதல் 18 மாதங்களில் வளர்ந்து இனப்பெருக்கத்துக்குத் தயாராகும். இவை பல வண்ணங்களில் உள்ளன. தமிழகத்தில் பெரும்பாலும் காணப்படுகிறது. அழகிய தோற்றத்தால், இவை செல்லப் பறவைகளாகவும் வளர்க்கப்படுகின்றன.
வகைகள்
* சிவப்புச் சில்லை (Red Munia - ரெட் முனியா)
* வெண் தொண்டை சில்லை (White Throated Munia - ஒயிட் த்ரோட்டட் முனியா)
* கருந்தொண்டை சில்லை (Scaly Breasted Munia - ஸ்காலி பிரெஸ்ட்டட் முனியா)
* மூவண்ண சில்லை (Tricoloured Munia - டிரைகலர்டு முனியா)
நீளம்: 12 செ.மீ.
எடை: 16 கிராம்
ஆயுள்: 8 ஆண்டுகள்
-ராமலக்ஷ்மி

