
நீரால் சூழப்பட்ட, உடைபடாத மிகப்பெரும் நிலப்பரப்பை கண்டம் (Continent - கான்டினென்ட்) என்கிறோம். கண்டங்களை இணைக்கும் பாலங்களாக நிலப்பரப்புகள் காணப்படுகின்றன. பூமி ஏழு கண்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.
கண்ட பகுதிகள்
1 மலை (Mountain - மவுண்டெய்ன்): சுற்றுப்புற நிலப்பரப்பைக் காட்டிலும் உயர்ந்து இருப்பவை மலைகள். நிலவியல் பலகைகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது, அவற்றில் எல்லைப் பகுதிகளை ஒட்டிய பாறைகள் நெளிந்து உயர்வதால் மலைகள் உருவாகின்றன.
பாறை, மண் அரிப்பு காரணங்களால், மலைகளில் முகடு, பள்ளத்தாக்கு போன்றவை ஏற்படுகின்றன.
2 பீடபூமி (Plateau - பிளாட்டியூ): கண்டப் பரப்பின் மீது காணப்படும் மற்றொரு தோற்றம் பீடபூமி. இவை, அதன் சுற்றுப்புறத்தைக் காட்டிலும் உயரமான, அகண்ட நிலப்பரப்புகள். நிலவியல் பலகைகள் இழுக்கப்படும்போது, அதை ஒட்டியுள்ள நிலவியல் பலகைகளின் எல்லைப்பகுதி பாறைகள் கீழே நழுவுவதால் இவை உருவாகின்றன. தீபெத் பீடபூமி, கொலராடோ பீடபூமி, தக்காண பீடபூமி, கொலம்பியா பீடபூமி, கிழக்கு ஆப்பிரிக்க பீடபூமி போன்றவை உலகின் உயரமான பீடபூமிகள்.
3 சமவெளி(Plain - பிளெய்ன்): கண்டப்பரப்பில் உள்ள பரந்த, மிகத் தாழ்வான நிலப்பரப்பு சமவெளி எனப்படும். இவை பல்வேறு வகைகளில் உருவாகின்றன.
4 ஆற்றுச் சமவெளி (River Alluvial Plain - ரிவர் அல்லுவியல் பிளெய்ன்): ஆறுகள் கொண்டு வரும் வண்டல் மண் படிவினால், ஆற்றுச் சமவெளி உருவாகிறது. கங்கை, பிரம்மபுத்திரா சமவெளிகள் போன்றவை மிகப்பெரிய ஆற்றுச் சமவெளிகள்.
5 காற்றடி வண்டல் சமவெளி (Wind Sedimentation Plain - விண்ட் செடிமெண்டேஷன் பிளெய்ன்): காற்றுப் படிவுகளால் இவை உருவாகின்றன. சீனாவில் உள்ள மஞ்சள் ஆறு பாயும் பகுதி, காற்றடி சமவெளிப் பகுதி.
6 கடற்கரை சமவெளி (Coastal Plain - கோஸ்டல் பிளெய்ன்): கடல் அலைகளால் உருவாகும் சமவெளிப் பகுதி, கடற்கரை சமவெளிப் பகுதி எனப்படும். இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் சமவெளிப் பகுதி அமைந்துள்ளது.
மலைகள், பீடபூமிகள், சமவெளிகள் ஆகிய அனைத்தும் பாறைக் கோளத்தின் (Lithosphere - லித்தோஸ்பயர்) ஒரு பகுதிதான். பாறைக் கோளம் பல வகைப் பாறைகளால் ஆனது. பாறைகள் பல தாதுப்பொருட்களைக் கொண்டிருப்பவை.
இவற்றில், சிலிகா, இரும்பு, மக்னீஷியம், அலுமினியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இந்த தாதுக்களே இவற்றின் உடையும் தன்மையை நிர்ணயிக்கின்றன. இவை உடையும் தன்மையும், கடினத் தன்மையும் உடையவை.
கறுப்பு, வெள்ளை போன்ற பல வண்ணங்களால் ஆனவை. நீர் உறிஞ்சும் தன்மை, நீர் உறிஞ்சா தன்மை உடைய பாறை வகைகளும் உள்ளன.
29% புவி பரப்பில் கண்டங்களின் பரப்பளவு
கண்டங்கள்
1. வட அமெரிக்கா
2. தென் அமெரிக்கா
3. ஐரோப்பா
4. ஆசியா
5. ஆப்பிரிக்கா
6. ஆஸ்திரேலியா
7. அண்டார்டிகா
கண்டங்களுக்கு அடியில் உள்ள நிலவியல் பலகைகள் நகரும் தன்மை உடையவை. இவை நகர்வதால், பூகம்பம், ஆழிப்பேரலை, எரிமலை போன்றவை உருவாகின்றன.
- ப.கோபாலகிருஷ்ணன்

