PUBLISHED ON : ஜன 13, 2020

வேளாண் துறை சார்ந்த அரசின் செயற்பாடுகள் மற்றும் தகவல்ககளை 'உழவன்' எனும் அலைபேசி செயலியின் வழியாக விவசாயிகள் தெரிந்துகொள்ளலாம். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் பயன்படுத்தும் வகையில், இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொடக்கத்தில் தகவல்களை மட்டுமே அளிக்கக்கூடியதாக இருந்து, தற்போது முழுமையாகப் பயன்பெறும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
செயலியில் உள்ள சேவைகள்
மானியத் திட்டங்கள்: தமிழக அரசின் வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை மூலம் செயற்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்கள், மானிய சதவீதம் பற்றிய விவரங்கள் மற்றும் பயனாளிகளின் தகுதிகளை அறிந்து கொள்ளலாம்.
இடுபொருள் முன்பதிவு: இடுபொருட்கள், வேளாண் இயந்திரங்கள், தோட்டக்கலை சார்ந்த திட்டப் பயன்களை மானியத்தில் பெறுதல் போன்றவற்றை இச்சேவை மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பயிர் காப்பீடு விவரம்: இழப்பீடு கிடைக்கும் வரை பயிர் காப்பீடு செய்த நிலையை இதன் மூலம் எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.
உரம் இருப்பு நிலை: கூட்டுறவு மற்றும் தனியார் உரக்கடைகளில் உரங்களின் இருப்பு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
விதை இருப்பு நிலை: விவசாயிகள் தங்கள் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கடைகளில் உள்ள விதை இருப்பை நிகழ்நிலை முறையில், இச்சேவையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வேளாண் இயந்திரம் வாடகை மையம்: வேளாண் இயந்திரங்களை வாடகைக்குப் பயன்படுத்திக் கொள்ள, அரசு மற்றும் தனியார் மையங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
சந்தை விலை நிலவரம்: ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மற்றும் ஏலத்தில் விற்பனையாகும் பொருட்களின் விலையைத் தெரிந்து, நம் விளை பொருட்களுக்கு தகுதியான விலை பெறலாம்.
வானிலை முன் அறிவிப்பு: வானிலை நிலவரங்கள், மழை, தட்பவெப்ப அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய அறிவுரைகளை அறிந்து கொள்ளலாம்.
அதிகாரிகள் வருகை: கிராம அளவிலான வேளாண் விரிவாக்கப் பணியாளர்கள், உதவி வேளாண்மை அலுவலரின் பெயர், கைப்பேசி எண், அலுவலரின் கிராம வருகை இடம் மற்றும் தேதியைத் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதனுடன் பண்ணை வழிகாட்டி, இயற்கை பண்ணையப் பொருட்கள், அணை நீர்மட்டம், வேளாண் செய்திகள் தொடர்பான தகவல்களும் இருக்கின்றன.
இத்தகைய செயலிகள் சரியான தகவலுடன், தேவைக்கேற்ற நிலவரங்களைத் தவறாமல் வழங்கினால், விவசாயிகளின் உற்ற நண்பன்தான்.

