
நெல் ரகங்களிலும், பலன்களிலும் வேறுபாடுகள் உண்டா?
“உலக அளவில் மூன்று லட்சம் நெல் ரகங்கள் இருந்துள்ளன. தமிழ்நாட்டில் தற்போது, நமது பாரம்பரிய நெல் ரகங்களில் சுமார் ஆயிரம் ரகங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகை நெல்லுக்கும் ஒவ்வொரு வகையான பலன், குணம் உண்டு. உதாரணமாக, கல்லுருண்டைச் சம்பா அரிசியை உண்டால், மல்யுத்த வீரருக்கான வலு கிடைக்கும். பால்குடவாளை அரிசிக்கு, தாய்ப்பால் அதிகம் சுரக்கும். மாப்பிள்ளைச் சம்பா அரிசி, ஆண்மை விருத்தி மற்றும் ஆண்மை பலம் அதிகரிக்கக் கூடியது. சிவப்பு, கறுப்பு கவுனி அரிசி, கர்ப்பிணிப் பெண்களின் சுகப் பிரவசத்துக்குத் துணை செய்யக் கூடியது. சீரகச் சம்பா அரிசி, பிரியாணி வகைகளுக்கு அதிகம் பயன்படுகிறது. இலுப்பைப்பூ சம்பா அரிசி, சமைக்கும் போதே வாசனைவரும். ஆத்தூர் கிச்சலிச் சம்பா அரிசியைச் சமைக்கும்போது, பதநீர் வாசனை வரும்.”
திருந்திய நெல் சாகுபடி என்றால் என்ன?
“ஒற்றை நாற்று நடவு முறை தான் திருந்திய நெல் சாகுபடி. அதற்கு முன்னர், கொத்தாக நாற்று நடுவது புழக்கத்தில் இருந்தது. மடகாஸ்கர் தீவில் வசித்து வந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார், முதன்முதலாக ஒற்றை நாற்று நடவு முறையை அறிமுகப்படுத்தினார். அதேநேரத்தில் தமிழ்நாட்டில் ஈரோடு, அரச்சலூர் கிராம விவசாயி செல்வத்தின் பண்ணையில் 1990களில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் குழுவினர் களஆய்வு செய்து கொண்டிருந்தனர். ஒற்றை நாற்று நடவு முறையை, அங்கேயே செயற்படுத்தி அதிக விளைச்சல் கண்டுள்ளனர். ஓர் ஏக்கரில் ஆறு டன் நெல் உற்பத்தியானது. நாற்று நடவு முறை, நெல் சாகுபடியில் ஓர் ஏக்கருக்கு 30 முதல் 50 கிலோ விதை நெல் தேவை. ஒற்றை நாற்று நடவு நெல் சாகுபடிக்கு ஓர் ஏக்கருக்கு இரண்டு கிலோ விதை நெல் போதும். இதில் செலவு குறைவு, விளைச்சல் அதிகம்.”
ஏங்கெல்ஸ் ராஜா
இயற்கை விவசாயி.
நேரடியாக நெல் விதைத்தால் வளராதா? நாற்று நட்டுத்தான் விவசாயம் செய்ய வேண்டுமா?
'நாற்று நடுதல் மூலமாகவும் நேரடி நெல் விதைப்பு மூலமாகவும் சாகுபடி செய்யலாம். நேரடி நெல் விதைப்பைக் காட்டிலும் நாற்று நடும் நெல் சாகுபடி தான் இங்கு அதிகம். வறட்சியான பகுதிகளில் மானாவாரி நிலங்களில் நேரடி நெல் விதைப்பு நடைபெறுகிறது. தண்ணீர் வசதி உள்ள பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு தேவையற்றது.
அங்கு நாற்று நடும் முறைதான் சிறந்தது. நாற்று நடும் சாகுபடியில் செலவு அதிகம். அதே நேரத்தில் விளைச்சலும் அதிகம். நேரடி நெல் விதைப்பில் செலவும் விளைச்சலும் குறைவு. அதாவது, ஓர் ஏக்கருக்கு ஐந்து மூட்டை நெல் விளைச்சல் குறையும்.”
மணி
பாலாறு படுகை விவசாயிகள் சங்கத்தின் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் தலைவர்.
பல்வேறு நெல் ரகங்களில், சந்தைக்கு சில ரகங்கள் மட்டுமே அதிக அளவில் வரக் காரணம் என்ன?
“உணவு தானிய உற்பத்தியில் இரசாயன உரங்கள் பயன்பாட்டுக்கு வந்தது. அதன் பின்னர் நமது உணவு முறையே மாறிப் போனது. ஆனால், கேரளத்தில் இப்போதும் மோட்டா ரக சிவப்பு அரிசி உணவு தான் சாப்பிடுகின்றனர். தற்போதும் பாரம்பரிய நெல் அரிசி வகைகள் விளைந்தாலும், சந்தையில் பொதுமக்களால் சில குறிப்பிட்ட வகை நெல் அரிசி ரகங்கள் தான் விலைக்கு வாங்கப்படுகின்றன. சன்ன ரக அரிசிச் சோற்றுக்கும், வெள்ளை நிறத்துக்கும் அடிமையாகிப் போனதே இதற்குக் காரணம்.”
தங்க. சண்முகசுந்தரம்
அரியலூர், கீழக்காவட்டாங்குறிச்சி
கிராம விவசாயி.
நெல் சாகுபடிக்குத் தகுந்த மண் வகைகள் எவை?
“நெல் சாகுபடிக்கு, வண்டல் மண் தான் பெரும்பாலும் உகந்தது. வண்டல் மண் அதிகமாகப் படிந்திருக்கும் ஆறு, வாய்க்கால் பகுதிகளில் நெல் சாகுபடி அதிகம் செய்யப்படும். நிலத்தடி நீரை நம்பியிருக்கும் வேறு மண் வகை நிலங்களிலும் தற்போது விரிவாகவே நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஏரி, குளங்களை நம்பியிருக்கும் செம்மண் நிலங்களிலும் நெல் சாகுபடி ஆகிறது. செம்மண் நிலத்தில் உள்ள பொட்டாசியம், நெற்பயிர்கள் செழிப்பாக வளர உதவும். வண்டல் குறைவாக இருக்கும் மணற்பாங்கான நிலங்களிலும் நெல் விளையும். மண்ணில், கார அமிலத்தன்மை அதிகமாக இருக்கும் நிலங்களில் நெல் சாகுபடி செய்ய இயலாது.”
ஒரே வயலில் வெவ்வேறு வகை நெல் ரகங்களைப் பயிரிட முடியுமா?
“இந்த ஆண்டு நான் பயிரிட்டிருக்கிறேன். நன்கு பயிர் விளைந்துள்ளது. மூன்று வகையான வெவ்வேறு நெல் ரகங்களைப் பயிரிட்டுள்ளேன். கால் ஏக்கரில் ஆந்திரா பொன்னி. இந்த நெல்லை அறுவடை செய்ய நூற்றி முப்பத்தைந்து நாட்கள் ஆகும். அடுத்த கால் ஏக்கரில் அறுபதாங்குறுவை. எண்ணி அறுபது நாட்களில் அறுவடைக்கு நிற்கும். அடுத்து கால் ஏக்கரில் கோ ஆர் ஐம்பது நெல் ரகம். நூற்றி முப்பது நாட்களில் இது அறுவடை ஆகிவிடும். மேலும், குறுவை சாகுபடிக்கு என்று வெவ்வேறு வகை நெல் ரகங்கள் உள்ளன. அது போல சம்பா சாகுபடிக்கு என்று வெவ்வேறு வகை நெல் ரகங்கள் நெறைய உள்ளன. அவற்றின் பட்டியல் மிக நீளமானது.”
பொன்னுராமன்
திருக்காட்டுப்பள்ளி, பவனமங்கலம் கிராம விவசாயி.

