
இந்தக் கதையின் சில வரிகளை மட்டும் எடுத்து கீழே கலைத்துக் கொடுத்துள்ளோம். தகுந்த இடத்தில் எடுத்துப் பொருத்தவும்.
ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார் ஒருவர். அவர் வலையில் ஒரே ஒரு குட்டி மீன் மட்டும் மாட்டியது.
(_____) அது மீன் பிடிப்பவரிடம்,
''அண்ணா உங்கள் வீட்டில் மொத்தம் எத்தனை பேர் இருக்கிறீர்கள்?'' என்றது.
''எதுக்கு கேட்கிறே? நான், என் மனைவி, என் மகன் என மூணு பேர் இருக்கோம்''
''நானோ குட்டி மீன். உங்க மூணு பேருக்கும் நான் போதுமா?''
(_____ )
''என்னை விட்ருங்களேன். நான் போய் எங்க அம்மா, அப்பாவை அழைச்சிட்டு வர்றேன்.''
''நீ தப்பிக்க தந்திரம் செய்கிறாய் . அது கூடத் தெரியாதா எனக்கு?''
மீன் பிடிப்பவர் புத்திக் கூர்மையுடன் பேசினார்.
பொய் சொல்லி இவரிடம் இருந்து தப்பிக்க முடியாது என்பதை மீன் குட்டி உணர்ந்தது. ஆனாலும் தப்பித்தாக வேண்டுமே? என்ன செய்வது என்று யோசித்தது மீன் குட்டி.
(_____)
''ஒன்பதாவது பரீட்சை எழுதிட்டு லீவ்ல இருக்கான்'' என்றார் மீன் பிடிப்பவர்.
''சரி, நான் உங்களுடன் வருகிறேன். என்னைக் கொண்டு போய் உங்க வீட்டுத் தொட்டியில் வளருங்கள். பிறகு நான் பெரியதானதும் சாப்பிடுங்கள்'' என்றது வருத்தம் தோய்ந்த குரலில். அவருக்கு மீன் சொல்வது சரி என்று பட்டது.
(_____)
மீனை எடுத்துச் சென்று தொட்டியில் வளர்த்தார். அவரது மகன் கோகுல், அதற்கு உணவிடுவதும், பேசுவதுமாக மகிழ்ச்சியாக இருந்தான்.
ஒரு நாள் மீன் அவனுடன் பேசாமல் சோகமாக இருந்தது. (_____)
''நீ உங்க அப்பா, அம்மா கூட சந்தோஷமா இருக்கிறதைப் பார்த்து, எனக்கு எங்க அம்மா ஞாபகம் வந்துடுச்சி அதான்'' என்றது மீன்.
கோகுலுக்கு மீனின் வருத்தம் புரிந்தது.
ஒரு டிபன் பாக்ஸில் அந்த மீனை தண்ணீருடன் எடுத்துப்போய் ஆற்றில் விட்டான்.
(_____) ஆனந்தமாய் ஆற்றில் நீந்திச் சென்றது.
கோகுலின் செயலை மறைவாக நின்று பார்த்துக்கொண்டிருந்த அவனது தந்தையும் மகிழ்ந்தார்.
- லலிதா
விடைகள்
1. ''உங்கள் மகனுக்கு என்ன வயசு?'' என்றது மீன் குட்டி.
2. மீன் தன் குட்டி வாலை ஆட்டி, கோகுலுக்கு நன்றி சொல்லியது.
3. மாட்டிக்கொண்ட மீன் எப்படித் தப்பிப்பது என்று யோசித்தது.
4. ''போதாது அதுக்காக என்ன செய்ய முடியும்?''
5. வந்ததுக்கு இதாவது கிடைத்ததே என்று வீட்டை நோக்கிப் புறப்பட்டார் மீனவர்.
6. ''ஏன் சோகமாக இருக்கே? என்னாச்சு? பசிக்கிறதா?'' என்றான் கோகுல் அக்கறையாய்.

