PUBLISHED ON : ஏப் 29, 2019

கதையைக் கவனமாகப் படியுங்கள். சில சொற்கள் வித்தியாசமாகத் தரப்பட்டுள்ளன. அவற்றைச் சரி செய்து, தனியே எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அந்தச் சொற்களை, சரியாக வரிசைப்படுத்தினால் பழமொழி ஒன்று கிடைக்கும். அதைக் கண்டுபிடியுங்கள். அதன் பொருளைப் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
அந்த வீட்டின் வாசலைப் ஒரு ஜீப் வந்து நின்றது. உள்ளிருந்து திமுதிமு என்று நான்கு பேர் இறங்கினார்கள்.
“என்னய்யா, கிரெடிட் கார்டுக்கு ஒழுங்காப் பணம் கட்ட மாட்டியா?” என்று கத்திக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார்கள். வீட்டில் இருந்த ரவிக்கு, சூடான ஈயத்தை, காதில் ஊற்றியது போல் அந்த வார்த்தைகள் சுட்டன.
“சத்தம் போடாதீங்க சார்… இந்த மாசக் கடைசிக்குள்ள கட்ட வேண்டிய மொத்தப் பணத்தையும் கட்டிடுறேன்” என்றார் ரவி.
“ஏதோ பேங்க் கடன்தானே, ஏமாத்திடலாம்னு நினைக்காதே. அதை வசூல் பண்ற பொறுப்பை வெளியாட்கள் கிட்ட குடுத்திருக்கு. நாங்க கொஞ்சம்கூடப் பாவம் பாக்கவே மாட்டோம்” என்று எச்சரித்துவிட்டு அவர்கள் போனார்கள்.
ரவி, தொங்கிப்போன முகத்தோடு உட்கார்ந்திருந்தார். அவர் மனைவி அருகில் வந்து அவரது தோளில் கையை வைத்தார். “என்னங்க, எந்தப் பொருளா இருந்தாலும் நம்ம கையிருப்புல இருந்து வாங்கலாம்னு சொன்னேன். நீங்கதான் கிரெடிட் கார்டு இருக்கிற தைரியத்துல, தங்கம், பித்தளை, டிவி, ஸ்பீக்கர்னு தேவை இல்லாததை எல்லாம் வாங்கினீங்க. இப்பிடி ஆயிடுச்சு” என்று சொன்னார்.
'ஒருவன் செய்ய வேண்டிய காரியத்தைச் செய்யவில்லை; அதே நேரம் செய்யக் கூடாததைச் செய்யவும் செய்தானாம். அதைப் பார்த்து அவனுடைய விதி அவனைப் பார்த்து இளித்ததாம்' என்று விரக்தியாகச் சொன்னார் ரவி.
இனி அவர் தேவை இன்றிக் கடன் வாங்க மாட்டார்.
- ஜி.ஆர்.

