PUBLISHED ON : ஜன 06, 2020

நூடுல்ஸ் என்றதும் நினைவிற்கு வரும் முக்கிய விஷயம் முள்கரண்டி என்று அழைக்கப்படும் 'ஃபோர்க்' தான். ஃபோர்க்கில் நூடுல்ஸ் சாப்பிடுவதே ஒரு தனிக்கலை.
பழங்கால ஃபோர்க் என்பது, இரு கூரிய முள் போன்ற முனைகளையுடைய குச்சி அல்லது கல்லையே குறித்தது. சமைக்கவும், பரிமாறவுமே அவை பயன்பட்டன.
பண்டைக் கால ஃபோர்க்குகள் எகிப்திலேயே காணப்பட்டன. கி.மு. 2400 - 1900 ஆண்டுகளில் தற்போதைய சீனாவில் தென்பட்ட க்யுஜியா (Qijia culture) நாகரிகத்தில் ஃபோர்க்குகளின் புழக்கம் இருந்தது. சீனாவில் இருந்து பட்டு வணிகம் மேலைநாடுகளுக்கு வந்தபோது, கூடவே ஃபோர்க்கும் நுழைந்துவிட்டது.
பதினோராம் நூற்றாண்டில் வெனிஸில் ஃபோர்க் அறிமுகமானபோது, பலரும் 'கடவுளின் படைப்பான விரலுக்கு மாறானது இது' என்று ஃபோர்க்கை அச்சத்துடன் விலக்கிவைத்தனர்.
16ஆம் நூற்றாண்டில் கேத்தரின் டி மெடிசி என்ற இத்தாலியப் பிரபு குடும்பப் பெண்மணி, பிரான்ஸ் மன்னரான இரண்டாம் ஹென்றியைத் திருமணம் செய்துகொண்டார். அப்போது இத்தாலிய உணவுகளான பாஸ்தா போன்றவற்றுடன் ஃபோர்க்கும் பிரான்சில் பிரபலப்படுத்தப்பட்டது.
கைகளால் உணவு சாப்பிடுவதைவிட, ஃபோர்க்கைப் பயன்படுத்துவது நல்லது என்ற எண்ணம் பலருக்கும் இருந்தது. அதன் விளைவாகவே, ஃபோர்க் பிரபலமடைந்தது.
இதில் இன்னும் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஃபோர்க் என்பது பெண் தன்மை வாய்ந்தது என, ஆரம்ப காலத்தில் ஆண்கள் அதைப் பயன்படுத்தத் தயங்கினராம். அனைவரும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக வடிவமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
18ஆம் நூற்றாண்டில் கூரிய முனைகள் கொண்ட வளைவான ஃபோர்க்குகள் நடைமுறைக்கு வந்தன. தொழிற்புரட்சிக் காலத்துக்குப் பின்னரே, உலகின் அனைத்து தரப்பு மக்களும் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல், ஃபோர்க்கைப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
தற்போது வரை, ஃபோர்க்கின் வடிவில் பெரிய அளவிலான மாற்றங்கள் வரவில்லை. உலகின் அனைத்து நாடுகளுமே ஓரளவுக்கு ஃபோர்க்கை பயன்படுத்தக் கற்றுக்கொண்டு விட்டன.
அடுத்தமுறை நூடுல்ஸ் சாப்பிடும்போது, நீங்களும் ஃபோர்க்கை பயன்படுத்திப் பாருங்கள்.
- இனியன்
