
சீனிவாச ராமானுஜன்
22.12.1887 - 26.4.1920
கும்பகோணம், தமிழ்நாடு.
மருத்துவமனையில் இருந்த ராமானுஜத்தைப் பார்க்க டாக்சியில் வந்து இறங்கினார் அவருடைய ஆய்வுத் துணைவர் ஜி.எச்.ஹார்டி. தான் வந்த டாக்சியின் எண்ணை வைத்து ராமானுஜத்துடன் விளையாட எண்ணி, எண்களைப் பற்றி பேசத் தொடங்கினார். 'நான் வந்த டாக்சி நம்பர் 1729; இதுல சுவாரஸ்யம் இருக்கிற மாதிரி தெரியல. அது ஒரு மந்தமான நம்பர்' என்று எண்களைப் பற்றி ஹார்டி பேசியதும், சுறுசுறுப்பான ராமானுஜம் 1729 எண்ணின் தனித்தன்மைகளைப் பேசத் தொடங்கினார். 'இரண்டு எண்களின் முப்படிப்பெருக்கத்தின்(cube) கூட்டுத் தொகையாக வரும் விடையில், 1729 தான் மிகவும் சிறிய நிறை முழு எண்ணாகும் (smallest positive integers). இந்த எண்ணை இரண்டு வழிகளில் அடையமுடியும்' என்று ராமானுஜன் கூறியதும், ஹார்டி அசந்துபோனார். அவர் நினைத்த அந்த சமன்பாடு, 1729 = 103 + 93 = 123 + 13 இப்படியும் இருக்கலாம். இந்தப் பண்பு உள்ள எண்ணை 'ராமானுஜன் எண்' என கணித உலகில் அழைக்கிறார்கள்.
எண்கள் நம்பர்களாகக் கருதாமல் நண்பர்களாகக் கருதி, ஒவ்வொரு எண்ணின் தனித்தன்மையையும் அறிந்து வைத்திருந்தார் ராமானுஜன். பள்ளி செல்லும் வயதில், அவர்கள் வீட்டில் குடியிருந்த கல்லூரி மாணவர்களின் கோணவியல் புத்தகத்தை வாங்கிப் படித்து, 13 வயதிலேயே அவற்றைக் கற்றுத் தேர்ச்சியடைந்தார்.
16 வயதில், தான் படித்த கணிதப் புத்தகத்தின் பல கணித முடிவுகளை ஆய்வுசெய்து பல முக்கியமான தகவல்களை வெளிக்கொண்டு வந்தார். தொடர்ச்சியான அவரது ஆய்வுகளையும், ஆர்வத்தையும் பார்த்து, கும்பகோணம் அரசுக் கல்லூரி, அவருக்கு உதவித்தொகை வழங்கியது. ஆனால், கணிதத்தின் மீதிருந்த ஆர்வம், மற்ற பாடங்களில் இல்லாமல் போனதால், தேர்வில் தோல்வியுற்று கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார்.
பிறகு, சென்னை துறைமுகத்தில் குமாஸ்தா வேலை கிடைத்தது. 1910இல் வெளியான 'முடிவிலியின் வகைமுறை' (Orders Of Infinity) புத்தகத்தின் நகலை, ஜி.ஹெச். ஹார்டி என்பவருக்கு, ராமானுஜன் அனுப்பி வைத்தார். 1914இல் கேம்பிரிட்ஜ், டிரினிட்டி கல்லூரியில் ஹார்டி, ராமானுஜன் கூட்டணி, பல முக்கியமான ஆய்வுகளுக்கு வழிவகுத்தது.
அடிப்படைக் கணித சூத்திரங்கள், எண்ணியல் கோட்பாடுகள், தொடர்விரிவுகள், தோராய மற்றும் ஈற்றணுகி விரிவாக்கங்கள், தொகை சூத்திரங்கள், காமா மற்றும் தனித்தன்மை வாய்ந்த சார்புகள், மிகைப்பெருக்கு குறித்தொடர் சார்புகள், தொடர்ச்சி பின்னங்கள், q- தொடர்கள், ஒரே வகை மாறா இயல்பு பண்புகள் போன்றவற்றில் கிட்டத்தட்ட நான்காயிரம் தேற்றங்களையும், சூத்திரங்களையும் வழங்கியிருக்கிறார், இந்த எண்களின் நண்பன்.