PUBLISHED ON : ஜூலை 16, 2018

ஹரியாணா மாநிலம் ஹிசார் என்ற ஊரைச் சேர்ந்தவர் ஏக்தா பயான் (Ekta Bhyan). 2003இல் ஒரு விபத்தில் சிக்கினார். முதுகெலும்பில் பலத்த அடி. அவரது உடல் இடுப்புக்குக் கீழே செயலிழந்தது.
9 மாதங்களை மருத்துவமனையில் கழித்த ஏக்தாவுக்கு, இரண்டு அறுவைச் சிகிச்சைகள் நடந்தன.
மருத்துவமனையில் இருந்தபோது அறிமுகமானார் அமித். இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவர். அவர் அளித்த உத்வேகத்தால் ஏக்தாவும் விளையாட்டுத் துறையில் சாதிக்க விரும்பினார்.
கிளப் எறிதல் (Club throw), வட்டெறிதல் (Discus throw) போட்டிகளில் பயிற்சி பெற்றார். கிளப் எறிதல் என்பது மரம் மற்றும் உலோகத்தாலான சிறு கட்டை ஒன்றை வீசியெறியும் விளையாட்டு. இது முழுக்க மாற்றுத்திறனாளிகளுக்காகவே வடிவமைக்கப்பட்ட விளையாட்டு.
கடந்த 2016ஆம் ஆண்டில் ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய பாரா ஒலிம்பிக் போட்டிகளில் சாதனை படைத்ததன் மூலம், இந்தியா சார்பில் உலகப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார் ஏக்தா. அதே ஆண்டு பெர்லினில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
கடந்த மாதம் துனீசியாவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில், கிளப் எறிதலில் தங்கமும், வட்டெறிதலில் வெண்கலப் பதக்கமும் பெற்று, இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்துள்ளார் ஏக்தா.
மருத்துவராகும் கனவில் இருந்தவரை, ஒரு விபத்து, வீல் சேரில் முடக்கியது. நடக்க முடியாத சூழலிலும், சக்கர நாற்காலி உதவியுடன் உத்வேகத்துடன் சாதிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஏக்தா.
