
கதிர் அன்று கையோடு அவனது பாடப் புத்தகத்தை எடுத்துவந்தான். உமா மிஸ் நேற்றே இதனை ஞாபகப்படுத்தியிருந்தார். வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள் நடக்கத் தொடங்கியவுடனே, வேறு உலகம் தெரிந்தது. மரங்களும் ஆழமான புதர்ப்பகுதிகளும் முற்றிலும் வித்தியாசமான வாசனையும் அவனை ஈர்த்தன.
தூரத்தில் கொக்குகள் உயரமான ஹீல்களோடு நிற்பது தெரிந்தது.
“புத்தகத்துல இருக்கற மாதிரியே இருக்கு மிஸ்!” கதிர் ஆச்சரியத்தில் வெடித்தான். உமா மிஸ் சிரித்துக்கொண்டார்.
“அன்னம் இருக்குமா மிஸ்?” என்று கேட்டாள் ஓவியா.
“இங்கே இல்ல. ஆனால், வாத்துகள் இருக்கும். வேறு பல பறவைகள் இருக்கும்.”
“இதையெல்லாம் இங்கே வந்தாதான் பார்க்க முடியுமா மிஸ்?”
“இப்போதைக்கு அப்படித்தான் இருக்கு. பல பறவைகளோட பேர் கூட நமக்குத் தெரியாது. பல ஊர்கள்ல பலவிதமான பறவைகள் இன்னும் வாழ்ந்துக்கிட்டுத்தான் இருக்கு. ஆனால், அது எப்போ வரும், எப்போ போகும்னு கூடத் தெரியாது.” என்று வருந்தினார் உமா மிஸ்.
அன்றைய உயிரியல் பூங்கா பயணமே இத்தகைய பறவைகளையும் விலங்குகளையும் கண்களில் காண்பிப்பதற்குத்தான்.
“இயற்கையிலேருந்து நாம் ரொம்ப தூரம் தள்ளி வந்துட்டோம்ங்கறதுதான் காரணம்” என்ற மிஸ், கூடவே “நியூசிலாந்துல இதுக்குத்தான் முற்றிலும் வித்தியாசமான பள்ளிகளை நடத்தறாங்க.” என்றார்.
அதற்கு பசுமைப் புதர் பள்ளிகள் என்று பெயர். அமெரிக்காவில் மசாசூசெட்ஸில் உள்ள சட்பர்ரி வேலி ஸ்கூல் மாதிரியைப் பின்பற்றி நடத்தப்படும் பள்ளி இது. இதன் அடிப்படையே வித்தியாசமானது. மாணவர்கள் தாங்கள் எதைக் கற்றுக்கொள்ள வேண்டுமோ, அதைக் கற்றுக்கொள்ள வேண்டும். இதைத்தான் தெரிந்துகொள்ள வேண்டும், இது வேண்டாம் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது.
பள்ளியே பசுமையான புதர்க்காடுகளுக்குள் இருக்கும். அங்கே மாணவர்கள் தங்கள் இஷ்டம்போல் வேலைகள் செய்யலாம். சுள்ளியில் இருந்து நெருப்பு பற்றவைக்கலாம், களிமண்ணில் இருந்து பொம்மைகள் செய்யலாம், வேட்டையாடுவதற்கான கருவிகளைச் செய்யலாம்.
“இதனை வன மீட்புக் கல்வி முறை என்று சொல்கிறார்கள். அதாவது, ஃபாரஸ்ட் ஸ்கூல் மாதிரியில் இருந்து இது இன்னும் ஒரு படி மேலே. காடு என்ன சொல்லிக் கொடுக்கப்படுகிறதோ அதைக் கற்றுக்கொள்வது ஒரு கல்வி முறை. ஆனால், காட்டுடனேயே ஐக்கியமாகிவிடுவது தான் இந்த வனமீட்புக் கல்வி முறை.” என்றார் உமா மிஸ்.
அதாவது நாம் காட்டின் ஒரு பகுதி. இயற்கையின் ஒரு பகுதி. அல்லது காடும் இயற்கையும் நம்முடைய தொடர்ச்சி என்பதைப் புரிந்துகொள்ள வைப்பதற்கான கல்வி முறை இது.
“இங்கே என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்ல, எப்படிக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் மாணவர்களே முடிவு செய்வார்கள்.” என்றார் உமா மிஸ்.
“அப்படிக் கத்துக்க முடியுமா மிஸ்?” ஓவியா கேட்டாள்.
“முடியும்னு நிரூபிச்சு இருக்காங்க ஓவியா. மனிதர்கள் அடிப்படையில் வேட்டைக்காரர்களாகவும் காடுகளில் உள்ள பொருட்களைச் சேகரிப்பவர்களாகவும் இருந்தார்கள். அதிலிருந்துதான் படிப்படியாக வளர்ச்சி அடைஞ்சாங்க. அப்படியானால், வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியமான பண்புகளை காட்டில் இருந்துதானே கத்துக்க முடியும்னு சொல்றாங்க.”
கதிருக்கு இந்த யோசனையே பிடிச்சு இருந்தது. இன்றைக்கு இருக்கும் வாழ்க்கை முறை, உணவு முறை எதுவும் இந்தப் பள்ளியில் இருக்காது. எல்லாவற்றையும் மாணவர்களே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தங்குவதற்கு இடம், சாப்பிடும் உணவு, எல்லாவற்றையும் குறைந்தபட்ச வசதிகளில் இருந்து செய்துகொள்ள வேண்டும்.
“சாப்பாடு கூட அங்கிருந்தே எப்படி மிஸ் செஞ்சுக்க முடியும்?”
“காட்டுல என்ன கிடைக்குதோ அதைச் சாப்பிடணும், விலங்குகளை வேட்டையாடிச் சுட்டுச் சாப்பிடக் கத்துக்கணும்…”
“ஓ!” ஆச்சரியப்பட்டுப் போனாள் ஓவியா.
இதனால் கிடைக்கும் பலன்கள் தான் பிரமாதமானது. தன்னிச்சையா, சுயமா வாழ்வதற்கான பயிற்சி கிடைக்கும். பெற்றோரோ, ஆசிரியரோ எவருடைய சார்பும் இல்லாமல், சுதந்திரமா வளர்கிறார்கள். தோல்வியையோ, சவாலையோ கண்டு பயப்படுவது இல்லை. எல்லாவற்றையும் எப்படித் துணிச்சலோடு அணுகுவது என்ற யோசனை இருக்கும்.
“காடு என்பது உறுதி, பிணைப்பு, வலிமை ஆகியவற்றோடு சின்னம். மாணவர்களோட உடம்புலேயும் மனசுலேயும் ரொம்ப மென்மையாக இருக்காங்க. அதனால, வாழ்க்கையோட சவால்களை, உணர்வுகளை அவர்களால் எதிர்கொள்ள முடியாமல் போகுது. தாங்க நினைக்கறா மாதிரி தான் எல்லாம் நடக்கணும்னு எதிர்பார்ப்பாங்க. பிடிவாதம் முக்கியமான குணமா மாறிடுது. இதெல்லாம் காட்டுக்குள்ளே போனால், மாறிவிடும். உடல் வலிமை மட்டுமல்ல, மன வலிமையையும் சேர்த்து சொல்லித்தருவதுதான் பசுமைப் புதர்ப் பள்ளிகள்.” என்றார் உமா மிஸ்.
தகவல் பெட்டகம்
* இந்த வகைப் பள்ளிகளில் 'ஆசிரியர்கள்' கிடையாது. உதவி செய்யும் 'பெரியவர்கள்' மட்டுமே உண்டு.
* இங்கே 'ஆசிரியர் தேர்வு' முறை சுவாரசியமானது. கல்வித் தகுதி மட்டும் முக்கியமல்ல. மாணவர்கள் உள்பட, எல்லோரும் ஓட்டுப் போட்டே ஒரு நபரைத் தம்முடைய பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமா, தொடர அனுமதிக்க வேண்டுமா என்று முடிவு செய்வார்கள். அதற்கு, அந்த ஆசிரியர்கள், தொடர்ச்சியாக இத்தகைய பள்ளிகளில் பணியாற்றி, அனைவர் மனங்களையும் கவர வேண்டும்.