PUBLISHED ON : பிப் 05, 2018
புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம், போதிய அளவு மழை இல்லாமை போன்ற காரணங்களால் தாவரங்களின் வளர்ச்சியில் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. புறச்சூழலில் கடுமையான தட்பவெப்பநிலையில் பயிர்கள் சூழல் அழுத்தத்திற்கு உள்ளாகி வளர்ச்சி பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைகிறது.
தாவரங்களில் முதல்நிலை வளர்சிதை மாற்றம் (Primary Metabolic Activities - பிரைமரி மெட்டாபோலிக் அக்டிவிட்டிஸ்) செடிகளின் சுயவளர்ச்சிக்கும் இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றம் அதன் உற்பத்திக்கும் தேவையானதாகும்.
பயிர்கள் தட்பவெப்பநிலை மாற்றம் காரணமாக அழுத்தத்திற்கு ஆளாகும்போது, அதன் இரண்டாம் வளர்சிதை நிலை பாதித்து உற்பத்தி குறையும். இதைத் தடுக்க பசுமைக் குடில்கள் (Green House) ஏற்படுத்தப்படுகின்றன. இது 'போலி ஹவுஸ்' (Poly House) என்றும் குறிப்பிடப்படுகிறது.
பசுமைக் குடில்கள்
பசுமைக் குடில்கள் தாவரங்களின் சூழல் அழுத்தத்தைக் குறைத்து, தாவரங்களைச் சமநிலைப்படுத்துகின்றன. தாவர வளர்ச்சியை சீராக்குகின்றன. பசுமைக் குடில்களில் தாவரங்களின் தன்மைக்கேற்ப ஓரளவு தட்பவெப்ப நிலைகளைக் கட்டுப்படுத்தலாம்.
பசுமைக் குடில்களில் ஒளி, ஈரப்பதம், வெப்பம், தட்பம் (குளிர்), காற்று, மழை, பனி, களை, நோய், பூச்சித் தாக்குதல் போன்ற பெளதிகக் காரணங்களை நிர்வாகம் செய்யலாம்.
அமைக்கும் முறை
பசுமைக் குடில்கள் இரும்புப் பொருட்களான 'ஸிங்க் பைப்ஸ்' (Zinc Pipes) எனப்படும் அடிப்படைப் பகுதியையும், பாலித்தீன் பொருளாலான போர்வை போன்ற பகுதியையும் கொண்டது. பாலித்தீன் போர்வை அகச்சிவப்புக் கதிர்களை (UV Rays) பசுமைக் குடிலினுள் அனுப்பாத தன்மையோடு இருக்க வேண்டும். இதனால் பயிர் தட்பவெப்ப நிலை அழுத்தத்திற்கு உள்ளாகாது. காற்று அதிகம் வீசாத மிதமான காற்றோட்டமுள்ள பகுதிகளே பசுமைக் குடில் அமைக்க ஏற்ற பகுதிகள்.
குறைந்தபட்சம் 1,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பகுதியில் பசுமைக் குடில் அமைப்பது நல்லது. முறையாகத் தொழுவுரம் இட்டுப் பராமரித்தால், நூற்புழு போன்ற பூச்சிக்கொல்லிகளின் தாக்குதலைத் தவிர்க்கலாம். நீரில் கரையும் ரசாயனங்களைப் பயன்படுத்தாமல் பசுந்தாள் உரம் போன்ற இயற்கையான உரங்களைப் பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து ஒரே பயிரைச் சாகுபடி செய்யாமல், வேறு வேறு பயிர்களை விளைவிப்பதன் மூலம், மண் வளம் பெருகும். பசுமைக் குடில் அமைக்க அரசு மான்யமும் வழங்கப்படுகிறது.
தேவைகள்
இன்றைய காலகட்டத்தில் வேளாண்மையை வணிக வேளாண்மையாக்கத் தேவைப்படும் காரணிகளில் பசுமைக் குடில்களும் ஒன்று. இயற்கையான முறையில் தாவர உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம், நாம் வாழும் சூழலையும் பாதுகாக்க முடியும். காய்கறிகள், மலர்கள், பழங்கள், மூலிகைகள் போன்ற அதிக பொருளாதார முக்கியத்துவம் கொண்ட பயிர்களைப் பசுமைக் குடில்களில் வளர்க்கலாம்.
- ப.கோபாலகிருஷ்ணன்