PUBLISHED ON : நவ 14, 2016

மிக வேகமாக பறக்கும் பாலூட்டியை, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்க மற்றும் ஜெர்மனி ஆய்வாளர்கள், பறக்கும் பாலூட்டிகள் குறித்து, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பிரேசில் நாட்டில், வால் இல்லாத ஏழு வௌவால்களை தேர்ந்தெடுத்து, அவற்றை கண்காணித்தனர். அவை மணிக்கு, 160 கி.மீ., வேகத்தில் பறப்பதை கண்டனர். இது விஞ்ஞானிகளை ஆச்சரியப்பட வைத்தது. இதுவரை கண்டறியப்பட்டுள்ளவற்றில், மிக வேகமாக பறக்கும் பாலூட்டி விலங்கு இது என்ற பெருமையை பெற்றுள்ளது. பாலூட்டிகளில் மிக வேகமாக ஓடக்கூடியது சிறுத்தை. இது மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் ஓடும் ஆற்றல் பெற்றது. தற்போது, அதிவேகமாக பறக்கும் வெளவால்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வகை வௌவால்கள், வித்தியாசமான இறக்கைகளைக் கொண்டவை. அவற்றின் உடல் அமைப்பே, அதிவேகமாக பறக்க முடிவதற்கு காரணம் என்று, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

