வீட்டுக்கோர் அரசு அதிகாரி சிறு கிராமத்தின் அற்புதம்
வீட்டுக்கோர் அரசு அதிகாரி சிறு கிராமத்தின் அற்புதம்
PUBLISHED ON : செப் 17, 2018

உத்தரப்பிரதேச மாநிலம், சித்திரகூட் வட்டாரத்தைச் சேர்ந்த சிறு கிராமம் ராய்புரா. சின்னஞ்சிறு கிராமமாக இருந்தாலும், இங்கிருந்து 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப்பணித்துறை அதிகாரிகள் உருவாகியுள்ளனர். இந்த அசாத்திய சாதனைக்குக் காரணமாக, ஓய்வுபெற்ற பள்ளி முதல்வர், மகேந்திர பிரசாத் சிங்கை (Mahendra Prasad Singh) கைகாட்டுகின்றனர் இவ்வூர் மக்கள்.
ஜலாலுன் அரசு மேனிலைப் பள்ளியில் (Inter college), வரலாற்று ஆசிரியராகவும், பின்னர் முதல்வராகவும் பாணியாற்றிய மகேந்திர பிரசாத், தன் ஓய்வுக் காலத்தை ராய்புராவில் கழிக்க முடிவு செய்தார். தன் திறமையையும் உழைப்பையும் அச்சிற்றூரில் உள்ள மாணவர்களின் முன்னேற்றத்திற்காகச் செலவிட முடிவு செய்தார். முதல் கட்டமாக மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, வரலாற்றைப் போதித்தார்.
பின்னர் கல்விப் பணிகளுக்காக ஓர் அறக்கட்டளையை நிறுவினார். பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு பரிசளிப்பது, பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சியளிப்பது, தேர்வுக் கட்டணத்திற்கு சிரமப்படும் மாணவர்களுக்கு நிதி உதவி என இவரது பணிகள் தொடர்ந்தன.
ஆண்டுதோறும் தசரா பண்டிகையின்போது, இந்த பரிசளிப்புகள் நடைபெறுவது வழக்கம். இவ்வூரில் இருந்து படித்து முன்னேறி அரசுப் பணியில் அமர்ந்திருக்கும் எல்லா முன்னாள் மாணவர்களும், இந்த பரிசளிப்பு விழாவில் முக்கிய பங்காற்றுகின்றனர்.
மகேந்திர பிரசாத்தின் உத்வேகத்தால், ஏராளமான மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வென்று, அரசு அதிகாரிகளாகப் பணிபுரிகின்றனர்.
தன் கிராமத்தைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகளின் விவரங்கள் அடங்கிய புத்தகத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார் மகேந்திர பிரசாத். “இந்தப் புத்தகத்தால், இளைய தலைமுறையினர் உத்வேகம் பெறுவார்கள்” என்கிறார் அவர்.
