PUBLISHED ON : அக் 09, 2017

டில்லிக்கு அருகே உள்ள மனேசர் நகரத்தில் மாருதி சுசுகி கார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய தொழிற்சாலையான இங்கு, ஆண்டுக்கு பத்து லட்சத்திற்கும் மேலான கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த வியாழனன்று ஒரு சிறுத்தை இத்தொழிற்சாலையில் உள்ள சிசிடிவி கேமராவில் தென்பட்டது. அதன் பின்பு, தொழிற்சாலைக்குள் பல இடங்களில் ஊழியர்கள் சிறுத்தையைப் பார்த்தனர். அதைத் தொடர்ந்து இங்கு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது. ஊழியர்களை பத்திரமாக வெளியேற்றிய பின்னர், 12 வனத்துறை ஊழியர்களும், 50 காவல்துறையினரும் சேர்ந்து நடத்திய 36 மணி தேடுதலுக்குப் பின் சிறுத்தை பிடிபட்டது. வனத் துறை ஊழியர்கள் மயக்க மருந்து செலுத்திப் பிடித்தனர். பின்னர் அச்சிறுத்தை மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. பரிசோதனை முடிந்தவுடன் வனப்பகுதியில் விடப்பட்டது என்று டில்லி குர்கான் புறநகரின் வனத்துறை துணைப் பாதுகாப்பாளர் தெரிவித்துள்ளார். நல்வாய்ப்பாக தொழிற்சாலைக்குள் சுற்றித்திரிந்த சிறுத்தை எவரையும் தாக்கவில்லை.

