தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கும் நூலகம்

ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கும் நூலகம்

ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கும் நூலகம்


PUBLISHED ON : மே 07, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 07, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காகிதங்களும் கணினிகளும் வருவதற்கு முன்னர் ஓலைச்சுவடிகள்தான் நமது முக்கியமான ஆவணப்படுத்தும் முறை. ஆனால், ஓலைச்சுவடிகள் நிரந்தரமானவை அல்ல. தாவரப் பொருட்களால் ஆன அவை, அதிகபட்சம் இரு நூற்றாண்டுகள் தாக்குப்பிடிக்கும். அதற்குப் பின்னர் அவற்றைப் படியெடுக்க வேண்டும். மேலும், பூச்சிகள், வெப்பம், ஈரப்பதம் ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும். மன்னராட்சிக் காலத்தில் அரசே இந்தப் பணிகளை எடுத்து நடத்தும். அதன்மூலமே பல அரிய இலக்கண, இலக்கியங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. அப்படி ஓலைச்சுவடிகள் அறிவியல்பூர்வமாகப் பேணப்படும் இடம்தான் சென்னை அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம் (Government Oriental Manuscripts Library and Research Centre, Chennai).

சுவடிகளைப் பாதுகாப்பதற்கென்று தனி இடம் வேண்டும் என்பதற்காக 1869ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு, சுவடிகள் காப்பகத்தை உருவாக்கியது. உரிய நிதி ஒதுக்கப்பட்டு, சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளே சுவடிகள் காப்பகம் செயல்படத் தொடங்கியது. சுவடிகளைச் சேகரித்து அவற்றை ஆய்வதில் பெரும் ஈடுபாடு காட்டிய ஆங்கிலேய அதிகாரிகளான, காலின் மெக்கன்ஸி (Colin Mackenzie), லெய்டன் (Leydon) ஆகியவர்கள் சேகரித்த சுவடிகள் இந்நூலகத்தில் உண்டு.

சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளின் ஓலைச்சுவடிகள், பாரசீகம், அரபி, ஆங்கிலம், வங்காளம், மராத்தி உள்ளிட்ட மொழிகளின் காகித ஆவணங்களும் இந்த நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், கணிதம், வானியல், சித்தா-, ஆயுர்வேதம்- யுனானி, சிற்ப சாத்திரம், இசை, கட்டடக்கலை, வரலாறு, நுண்கலைகள், இலக்கணம் போன்ற பலதுறை சார்ந்த சுவடிகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. பல மொழிகளில் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களும் இங்குண்டு.

இங்கு, 50,180 ஓலைச்சுவடிகளும், 22,134 காகித ஆவணங்களும், 26,556 புத்தகங்களும் உள்ளன. சிவலிங்க வடிவில் அமைந்துள்ள திருவாசக ஓலைச்சுவடி, உருத்திராட்ச வடிவில் அமைந்துள்ள திருமுருகாற்றுப்படை ஓலைச்சுவடி என பல அரிய சுவடிகள் இந்நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

ஓலைச்சுவடிகளின் ஆயுட்காலம் கருதியும், ஆய்வு மேற்கொள்பவர்கள் ஓலைச்சுவடிகளுக்காகக் காத்திருக்க வேண்டியதைக் கருதியும், அரசு நிதி ஒதுக்கி இந்த நூலகத்தை கணினி மற்றும் இணைய மயம் ஆக்கியது. ஓலைச்சுவடிகள் கச்சிதமாக ஸ்கேன் செய்யப்பட்டு, படக்கோப்புகளாக மாற்றப்பட்டு தமிழக அரசின் தொல்லியல் துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அரிய சுவடிகளை புத்தகங்களாக மாற்றி அச்சேற்றும் திட்டத்தின் மூலம் இதுவரை 500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஓலைச்சுவடிகளை வேதிப்பொருட்கள் கொண்டு பாதுகாக்கும் பணியும் செவ்வனே நடைபெறுகிறது.

சென்னைப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இயங்கும் இச்சுவடிகள் காப்பகத்தில் ஆய்வாளர்களுக்கு அனுமதி இலவசம்.

- ஹாலாஸ்யன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us