PUBLISHED ON : மே 06, 2019

கோடைக் காலத்தில், காட்டில் கடுமையான வறட்சி. விலங்குகள் குடிநீர் கிடைக்காமல் இங்கும் அங்குமாக அலைந்தன. செடி, கொடிகள் எல்லாம் கோடை வெயிலின் வெம்மையால் காய்ந்து சுருண்டன. சில மரங்கள் மட்டும் இலையை உதிர்த்து, தங்கள் உயிரைத் தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டன.
இனி வருணபகவானாகப் பார்த்து கருணை காட்டினால்தான் உண்டு என்ற கதியில் காட்டுயிர்கள் காத்துக்கிடந்தன. இந்நிலையில் ஆணும் பெண்ணுமாக இரு மான்கள், நீர் தேடி காட்டைச் சுற்றி வலம் வந்தன. நீர் இருந்த இடங்கள் எல்லாம் காய்ந்துக் கிடந்தன. சுனைகள் வற்றி, கால் பட்டாலே பாதங்களில் கொப்புளம் வரும் அளவிற்கு அக்னி வெயில் கொளுத்தியது.
ஒரு குன்றின் மறைவில் இருந்த, சிறிய நீர்நிலையில் மட்டும் கொஞ்சமாக நீர் இருந்தது. அதுவும் மற்ற விலங்குகள் கண்ணில் தென்படாததால் இருந்தது. இந்நிலையில், இரு மான்கள் அந்த நீரைப் பார்த்து விட்டன.
யாராவது ஒருவரின் தாகத்தை மட்டும்தான் அந்த நீர் போக்கும். என்ன செய்வது என்று யோசித்தன இரு மான்களும்.
''நீ போய் குடி ''என்று ஆண் மான் வழிவிட்டு ஒதுங்கி நின்றது.
''இல்லை வேண்டாம். நீ போய் குடி, நான் தாக்குப்பிடித்துக் கொள்வேன்'' என்றது பெண் மான்.
''சொன்னால் கேளு. நீதான் தாகத்தைத் தாங்க மாட்டாய். நான் தாங்கிக் கொள்வேன்'' என்றது ஆண் மான்.
''நீ குடிக்காத நீரை நானும் குடிக்க மாட்டேன்'' அடம் பிடித்து நின்றது பெண் மான்.
கடைசிவரை இவள் குடிக்க மாட்டாள் என்றுணர்ந்த ஆண் மான், ''சரி வா, இருவரும் சேர்ந்து பருகுவோம்'' என்று அந்த நீரில் வாய் வைத்து, குடிப்பது போல் பாவனை செய்தது. உடனே பெண் மான், அந்த நீரைப் பருகி, தன் தாகத்தைத் தணித்துக்கொண்டது.
இந்தக் காட்சி 'ஐந்திணை ஐம்பது' என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. அகப்பொருளில் பாடப்பட்டது. பாடியவர் மாறன் பொறையனார்.
'சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி.'
(பாடல் -38)
அன்பில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை இந்த ஐந்திணை ஐம்பது பாடல் விளக்குகிறது.

