
'என்னடா இது பால் நிறத்தில்தானே புறாக்கள் இருக்கின்றன? மாற்றி பால் புகட்டும் புறா'என்று தலைப்பு வைத்து விட்டார்களோ' என்று நினைக்க வேண்டாம். உண்மையிலேயே புறாக்கள் தங்கள் குஞ்சுகளுக்கு பால் கொடுக்கின்றன. புறாக்களின் கழுத்தில் ஒரு சுரப்பி இருக்கிறது. அந்தச் சுரப்பியில்தான் பால் போன்ற திரவம் சுரக்கிறது. திரவத்தை வெளியில் இருந்து தராமல் வாய் வழியாக அப்படியே (எதுக்களித்து) அலகுக்கு கொண்டு வந்து குஞ்சுகளுக்கு ஊட்டுகிறது புறா. இன்னொரு ஆச்சரியம், ஆண் புறாக்களுக்கும் இந்த சுரப்பி இருப்பதால் இரண்டுமே குஞ்சுகளுக்குப் பால் புகட்டுகின்றன.
புறாவைப் போல் பறவை இனங்களில் இப்படி பால் புகட்டுபவை பிளமிங்கோ (Flamingos) என்கிற பூநாரை, எம்பரர் பென்குயின் (Emperor penguin) ஆகியவை. இந்த பால் போன்ற திரவத்தில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக் கூடிய காரணிகள் (antioxidants) நிறைய இருக்கின்றன. குஞ்சுகளின் வளர்ச்சிக்கு இது மிகவும் உதவுகிறது. புரதம், கொழுப்பு மற்றும் கனிமங்கள் இந்தப் பாலில் நிரம்பி இருக்கின்றன.
தோலின் வெளிப்புறம் கெரட்டினோசைட்ஸ் (keratinocytes) என்ற செல்கள் அமைந்துள்ளன. இந்த செல்கள்தான் புறாக்கள் பால் சுரக்க உதவி புரிகின்றன.
புறா உலக அளவில் அமைதிக்கான சின்னமாகப் பார்க்கப்படுகிறது. இயற்கையிலேயே மனிதர்களுடன் இயல்பாகப் பழகக் கூடிய பறவை இனங்களில் ஒன்று புறா.
சாதுவான பறவை: புறாக்கள் எழுப்பும் ஒலி வித்தியாசமானதாக இருக்கும். ஆண் புறாக்கள்தான் பெரும்பாலும் ஒலி எழுப்புகின்றன. புறா கத்தும் என்று சொல்வது தவறு. குனுகும் என்பதுதான் சரி.
இவை காடுகளிலும் வெப்ப மண்டலப் பகுதிகளிலும் வசிக்கின்றன. வேட்டையாடுவதன் காரணமாக புறாக்கள் உலகில் வெகுவாக குறைந்து வருகின்றன.
தமிழ்நாட்டின் மாநிலப் பறவை, உடலில் பச்சை நிறம் கொண்ட மரகதப் புறா.

