PUBLISHED ON : மே 23, 2016

அமெரிக்கா, கலிஃபோர்னியாவில் கலிசோட்டா என்கிற கற்பனை மாகாணத்தில் இருக்கிறது மவுஸ் டவுன். அங்குதான் மனித குணாதிசயங்களுடன் வாழ்ந்து வருகிறது ஒரு எலி. அதுதான் இன்றுவரை சிறுவர்களின் நம்பர் 1 ஹீரோவாக இருக்கும் 'மிக்கி மவுஸ்'.
ஓர் எலியை நாயகனாக்கி வால்ட் டிஸ்னி மற்றும் ஓவியர் ஐவர்க்ஸ் உருவாக்கிய கதாபாத்திரம் இது. முதலில் இந்த எலிக்கு 'மார்டிமர் மவுஸ்' என்றுதான் டிஸ்னி பெயரிட்டார். ஆனால், அவரது மனைவி பிடிக்கவில்லை என்று சொன்னதால் 'மிக்கி மவுஸ்' என்று பெயரை மாற்றினார். மிக்கிக்கு உருவம் தந்த டிஸ்னி, மிக்கி அனிமேஷனாக மாறும்போது அதற்குக் குரலும் கொடுத்தார்!
மிக்கி மவுஸ் ஒரு சேட்டைக்காரன். ஒரு வட்டம், இரு நீள்வட்டங்கள் (அதாவது முகமும் காதுகளும்) என மூன்று வட்டங்களால் உருவாகி இன்று வரை உலகையே வட்டமடித்து வருகிறது மிக்கி. கறுப்பு மேல்சட்டை, சிவப்பு கால்சட்டை, வெள்ளைக் கையுறை, மஞ்சள் காலணி ஆகியவைதான் இவன் அடையாளங்கள். ஆரம்பத்தில் சேட்டைகள் செய்து, போகப்போக சாகச நாயகனாக மாறினான் மிக்கி. இவனுக்கு நண்பர்கள் ஏராளம்!
யாரெல்லாம்?
மின்னி மவுஸ்: மிக்கியின் தோழியும் கதாநாயகியும் இவள்தான். முதல் திரைப்படத்தில் இருந்து உடனிருக்கும் இவளை மிக்கி மவுஸ் திருமணம் செய்துகொண்டான்.
டொனால்ட் டக்: கடும் கோபக்கார வாத்து இவன். மிக்கியின் உயிர் நண்பன். அதிர்ஷ்டமில்லாத டொனால்டுக்கு ஏற்படும் விபத்துகள், அவனுக்கு ரணகளம், நமக்கு சிரிப்பு.
கூஃபி: சுறுசுறுப்பில்லாத ஆனால், நல்ல எண்ணம் கொண்ட நாய். எதையும் உருப்படியாகச் செய்து முடிக்காத இவன்தான் இங்கே நகைச்சுவை நா'ய்'கன்!
புளுட்டோ: இது, மிக்கியின் வளர்ப்பு நாய். மற்றவர்களைப் போலப் பேசும் திறன் இல்லாத விலங்கு. இதுவும் நிறைய சேட்டைகள் செய்யும்.
பீட்: நண்பர்கள் இருந்தால் எதிரி இருப்பது நியாயம்தானே! அவன்தான் பீட் என்கிற பீட்டர். இந்தப் பூனைதான் மிக்கியின் எதிரி. மிக்கியைப் போலவே புத்திசாலி! அதனால்தான் எல்லாக் கதைகளின் முடிவிலும் எளிதாகத் தப்பித்துவிடுகிறான்.
இவர்கள் மட்டுமல்ல, இன்னும் நிறைய பேர் இவனுடன் வருவார்கள்.
டிஸ்னிலேண்ட்: 'திரையில் மட்டும்தான் அந்தக் கற்பனை உலகத்தைப் பார்க்க முடியுமா? நிஜத்தில் நான் காட்டுகிறேன்' என்றார் டிஸ்னி. அதனால், 1955ஆம் ஆண்டு 17 மில்லியன் டாலர் செலவில் மிகப் பிரமாண்டமான 'டிஸ்னி லேண்ட்' என்கிற பொழுதுபோக்குப் பூங்காவை அமெரிக்காவின் ஆக்லேண்ட் நகரில் உருவாக்கினார். ஒவ்வொரு குழந்தையும் பார்க்க விரும்பும் கனவு உலகம் அது.
பூங்காவைச் சுற்றிப் பார்க்க வந்தவர்கள் டிஸ்னி லேண்டின் அழகை ரசித்து 'பூலோக சொர்க்கம்' என்று வர்ணித்தார்கள். ஆரம்பித்த முதல் 25 ஆண்டுகளில் பல உலகத் தலைவர்கள் உள்பட 200 மில்லியன் மக்கள் இங்கே சுற்றிப் பார்த்து விட்டார்கள். இப்போது, வருபவர்கள் யாரும் மிக்கி மவுஸ் உடன் செல்ஃபி எடுக்காமல் செல்வதில்லை!
மிக்கி போஸ்டர் ஏலம்: மிக்கி மவுஸ் படத்தின் கலர் போஸ்டர் ஒன்றை அமெரிக்காவில் வசித்த ஒருவர் பாதுகாத்து வந்தார். அவர் மரணம் அடைந்த பின்பு அது ஏலத்திற்கு வந்து 1,01,575 அமெரிக்க டாலருக்கு விற்றது. இதை இப்போதைய இந்தியப் பண மதிப்பில் சொல்வதென்றால் 68.5 லட்ச ரூபாய் என்று சொல்லலாம்.
மிக்கி கிராஃப்ட்: ஒரு சார்ட் பேப்பரில் மிக்கி மவுஸின் உருவத்தை வரைந்து, அதன் வடிவத்தை வெட்டி எடுத்துக்கொள்ளவும். இன்னொரு அட்டையின் மேல் பைண்டிங் பசை தடவி வெட்டி வைத்திருக்கும் மிக்கி மவுஸ் படத்தை ஒட்டவும். இதுபோல வித விதமாக விருப்பப்பட்ட வடிவங்களில் மிக்கி மவுஸை நீங்களே செய்து மகிழலாம்!
மிக்கி இட்லி!: மிக்கி மவுஸ் வடிவிலான இட்லித் தட்டுகள் கடைகளில் கிடைக்கின்றன. இதில், இட்லி மாவை ஊற்றி சாக்லேட் பொடி தூவி வழக்கம் போல வேக வைத்தால் மிக்கி மவுஸ் இட்லி ரெடி.
மிக்கி மவுஸ் படங்களின் வரிசையில், ஒன்பதாவது படமாக மே 23, 1929ல் வெளிவந்தது 'கார்னிவல் கிட்'. இதில்தான் மிக்கி மவுஸ் முதன்முதலாகப் பேசியது.
மிக்கி மவுஸ் முதன்முதலில் திரையில் தோன்றியது நவம்பர் 18, 1928. (முதல் படம்: 'ஸ்டீம்போட் வில்லீ' (Steamboat Willie))

