PUBLISHED ON : ஜூலை 02, 2018

ஸ்கூல் திறந்தவுடனே, இரண்டு வாரத்துக்கு ஒருமுறை வாராந்திர டெஸ்டுகள் ஆரம்பித்துவிட்டன. இப்போதான் லீவு விட்ட மாதிரி இருந்தது. மீண்டும் பள்ளி, மீண்டும் பாடங்கள், மீண்டும் தேர்வு என்ற ஓட்டம். வரிசையாக ஒவ்வொரு நாளும் ஒரு பாடத்தில் பதினைந்து மதிப்பெண்ணுக்குத் தேர்வு.
உடனே விடைத்தாள்களைத் திருத்தி மறுநாளே மதிப்பெண்களைக் கொடுத்துவிட்டார்கள். கணிதத்தில் 8, ஆங்கிலத்தில் 10, தமிழில் 13, அறிவியலில் 9, சமூக அறிவியலில் 7. அம்மாவும் அப்பாவும் பயங்கர டோஸ். பொறுப்புணர்வோடு படிக்கவில்லை என்று பிடிபிடி என்று பிடித்துக்கொண்டார்கள்.
பதிலே சொல்ல முடியவில்லை. இப்போதானே பள்ளி ஆரம்பித்தது என்று கொஞ்சம், கவனக்குறைவாக இருந்தது தப்பு என்று புரிந்தது. எடுத்தவுடனே முழுவேகத்தில் ஓடியிருக்க வேண்டும். கொஞ்சம் அசமந்தமாக இருந்துவிட்டதில், மதிப்பெண்ணில் கோட்டை விட்டுவிட்டேன். ஆனால், எதற்கு இப்படி ஓடவேண்டும்? எதற்கு இவ்வளவு மதிப்பெண்களை வாங்க வேண்டும்? என்ற எரிச்சல் ஏற்படாமல் இல்லை.
மற்ற நாடுகளில் எல்லாம் எவ்வளவு நிதானமாகப் பாடம் நடத்துகிறார்கள். உமா மிஸ்ஸே பல சமயங்களில் சொல்லியிருக்கிறார்களே.
“ஆனால், எல்லா நாடும் அப்படி இல்லை கதிர். தென் கொரியா முற்றிலும் வித்தியாசமான ஒரு நாடு. நம்ம நாட்டைப் போன்றதுதான் தென் கொரியாவும்.” என்று உமா மிஸ் பேச ஆரம்பித்தபோது, ஆச்சரியமாக இருந்தது. சமீபத்தில்கூட, தென் கொரியத் தலைவரும் வட கொரிய அதிபரும் சந்தித்துக்கொண்ட செய்திகள் வெளியாயின. பின்னர், அமெரிக்க அதிபரும்கூட சிங்கப்பூர் வந்தாரே!
“பொருளாதாரத் தேக்கம், பல போர்களுக்குப் பின்னாடி, தென் கொரிய மக்கள், கல்விக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சாங்க. சொல்லப் போனால், அங்கே நூறு சதவீதம் கல்வியறிவு ஏற்பட்டிருக்கு. நல்லா படிச்சாத்தான், நல்ல வேலைவாய்ப்புக் கிடைக்கும், நல்ல வேலை கிடைக்கும், முன்னேற முடியும், திருமணம் நடக்கும்னு நாம இங்கே சொல்றதையெல்லாம் தென் கொரியாவுலேயும் சொல்றாங்க.
படிக்காதவங்களுக்கு, குறிப்பா மேற்படிப்பு படிக்காதவங்களுக்கு அங்கே மரியாதையே இல்லை. கல்வித் திறன் ஒன்றே தங்களை மேம்படுத்தும் என்று நினைக்கிற மக்கள் அவங்க. அதற்கேற்ப அங்கே பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுக்கிட்டு இருக்கு.
நாமும் அதே பாணியில தான் வாழறோம். இங்கே இருக்கக்கூடிய மக்கள்தொகை அதிகம். வாய்ப்புகள் குறைவு. அப்படியிருக்கும்போது, கல்வித் திறனை மேம்படுத்திக் கொண்டு, போட்டி போட்டுக்கொண்டு முன்னேற வேண்டிய அவசியம் இருக்கு. இதை பெற்றோர்களோ ஆசிரியர்களோ விருப்பப்பட்டுத்தான் செய்யறாங்கனு நினைக்கவேண்டும். வேறு வழியில்லை. இந்தப் போட்டிக்குத் தயாராகாமல் போய்விட்டால், எதிர்காலம் எப்படி இருக்குமோன்னு அச்சம் ஏற்படத்தானே செய்யும்.
அதனால், உங்க அப்பா, அம்மாவை நினைச்சு சலிச்சுக்காதே. அவங்க தங்களோட கடமையைத்தான் செய்யறாங்க…” என்று நீண்ட விளக்கம் கொடுத்து என்னை சமாதானப்படுத்தத் தொடங்கினார்.
“எத்தனை பெற்றோர் இப்படி இருப்பாங்க? எத்தனை பெற்றோர் வேறு மாதிரி யோசிப்பாங்க? இந்த முறையே வேண்டாம்னு நினைக்கிற பெற்றோரே கிடையாதா மிஸ்?”
“நல்ல கேள்வியா இருக்கே. ஏன் நீயே இதைப் பத்தியெல்லாம் தகவல் திரட்டமுடியுமா பாரேன்?”
“என்ன தகவல்கள் மிஸ்?”
“எத்தனை பெற்றோர்கள் இன்றைய கல்விமுறையை விரும்புகிறார்கள், எத்தனை பேர் மாற்றுக் கல்வி முறையை விரும்புகிறார்கள், எத்தனை பேர், தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்ப விரும்புகிறார்கள் என்றெல்லாம் தேடிப் பாரேன்.”
“எங்கே இந்த விவரங்கள் கிடைக்கும்?”
“அரசாங்க வலைத்தளங்களில் தேடிப் பார். நிறைய டேட்டா கிடைக்கும். அதையெல்லாம் தொகுத்தா, நம் இந்திய பெற்றோர்களோட மனநிலை என்னன்னு உனக்கே தெரிஞ்சுடும்.”
“ஓ, இது டேட்டா அனாலிடிக்ஸா?”
“கரெக்டா சொன்னே கதிர். டேட்டா சயின்ஸ் பத்தி படிச்சிருக்கியா?”
“இல்லை மிஸ். அந்த வார்த்தை மட்டும் தெரியும்.”
“குட். இன்னிக்கு பள்ளிக்கூடங்களிலேயே டேட்டா அனாலிடிக்ஸ் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுப் போயிடுச்சு. எல்லா இடத்திலும் 'பிக் டேட்டா'ன்னு சொல்லப்படற ஏராளமான தகவல்கள் கொட்டிக்கிடக்கு. அதையெல்லாம் எப்படி சேகரிக்கணும், தொகுத்து, பகுத்து, விரிவா அலசி, ஆய்வு செஞ்சு பார்க்கணும்னு சொல்லித்தர வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கு.”
“அதனால் பயன் என்ன மிஸ்?”
“பயன்ங்கறது பின்னாடி வருவது. ஆனால், இன்னிக்கு ஒவ்வொரு இடத்திலும் அவ்வளவு தகவல்கள் கொட்டிக்கிடக்கு. இத்தனை நாளா அது என்ன சொல்லுதுன்னு தெரியாமல் இருந்தோம். அதன் மூலம் கிடைக்கும் புரிதல்களையோ, பாடங்களையோ புரிஞ்சுக்க வாய்ப்பில்லாமல் இருந்தோம். இப்போ அப்படி இல்லையே. அதையும் சின்ன வயசுலேருந்தே கத்துக்கறது ரொம்ப நல்லது…” என்றார் உமா மிஸ்.
ஏற்கெனவே நான் படிக்க வேண்டிய பாடங்களை நினைத்துப் பார்த்தேன். அதோடு சேர்ந்து இன்னொரு கூடுதல் பாடமா என்று நினைக்கவே மலைப்பாகத்தான் இருந்தது. ஆனால், டேட்டா என்றவுடன் ஒரு மயக்கம் வரவே செய்தது. அதைத் தெரிந்துகொள்ளாமல் விடக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.
அட ஆச்சரியப் பள்ளி: முதல் நிலவறைப் பள்ளி
அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோவில், அபோ எலிமென்டரி பள்ளி உள்ளது. இதுதான் நிலத்தினடியில் கட்டப்பட்ட உலகில் முதல் பள்ளி. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்ற காலத்தில் 1962இல் கட்டப்பட்ட இந்த நிலவறைப் பள்ளியில், எத்தகைய தாக்குதல் நிகழ்ந்தாலும் தாங்கக்கூடிய சக்தி இருந்தது. இதில் 2,160 பேருக்குத் தேவையான உணவு தானியங்களைச் சேமித்து வைக்க முடியும். பிற்காலத்தில் இந்தப் பள்ளிக்குத் தேவையில்லாமல் போனது. அதில் பள்ளி நடத்துவது கடும் செலவு பிடிப்பதாக மாறியது. 1999 முதல் இது அமெரிக்க வரலாற்றின் சிறப்புமிக்க இடமாக அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகிறது.
