PUBLISHED ON : டிச 02, 2019

மாணவப் பருவத்தில் பாடங்களைப் படிக்க விடியற்காலையே சிறந்தது என்று கூறப்பட்டு வருகிறது. ஆனாலும், இரவில் படிப்பதை விரும்புகிறவர்களும் இருக்கவே செய்கின்றனர். இன்றைய மாணவர்களின் மனமறிய, விடியற்காலையில் படித்தால்தான் பாடங்கள் மனத்தில் பதியுமா? எனகேட்டிருந்தோம்.கோவை, கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்தோம். அவர்களின் கருத்துகள் இங்கே:
ஜெயஹரிபாலன், 10ஆம் வகுப்பு
காலையில் படிப்பதே சிறந்தது. நானும் அப்படித்தான் படிக்கிறேன். எங்க வீட்டில் இரவு அதிக நேரம் கண்விழித்து இருக்க அனுமதி கிடையாது. அதனால காலையில் படிக்கப் பழகிவிட்டேன். அதுவே நன்றாக உள்ளது.
நந்தினி, 10ஆம் வகுப்பு
முதல்நாள் மாலையில் படித்ததை மறந்து விடாமல் இருப்பதற்காகத்தான், காலையில் எழுந்து படிக்கின்றனர். அப்படியெனில், இரவில் படிப்பதுதானே சிறந்தது? இரவில் தூங்காமலோ, தூக்கம் வரும் வரையோ படிக்கலாம். ஆனால், திட்டமிட்டபடி காலையில் 4மணிக்கு எழுந்திருக்க முடியாமல் லேட் ஆகிடுச்சுன்னா அன்னைக்குப் பூராவும் பதற்றமாகவே இருக்கும்.
அபிராமி, 8ஆம் வகுப்பு
இரவில் ஊரே அமைதியாக இருக்கும்போது படித்தால், அப்படியே மனசுல பதியும். நைட்டு படிச்சதை பகலில் ரிவிஷன் செய்தும் பார்க்கலாம். அப்புறம் பள்ளிக்குப் போவது, விளையாடுவது, வீட்டுப்பாடம் எழுதுவதுன்னு நாள் முழுக்க பரபரன்னு ஓடிடும். உண்மையைச் சொல்லணும்னா படிக்க அமைதியான சூழலே அவசியம்.
விக்னேஷ், 7ஆம் வகுப்பு
விடியற்காலையே சிறந்தது. ஏன்னா, அந்தச் சமயத்துல எந்தவொரு தொந்தரவும் இருக்காது. வண்டி ஹார்ன், டி.வி.,ரேடியோ, மத்தவங்க பேச்சுன்னு எந்த சத்தமும் இருக்காது. படிக்கிறப்ப கவனமும் சிதறாது. இந்தச் சூழலில் படிக்கும்போது, அப்படியே மனசுல பதியும்.
மதன்குமார், 9ஆம் வகுப்பு
அதிகாலை எழுந்திருப்பதே உடலுக்கும் மனத்திற்கும் நல்லது. அப்படி காலையில் எழுந்து படித்தால், பாடங்கள் மனத்தில் பதியும். சோர்வாக இருந்தால் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு, சிறிது நேரம் உடற்பயிற்சி செய்யலாம். இதனால், மனமும், உடலும் புத்துணர்ச்சி பெறும்.
பாவனா, 9ஆம் வகுப்பு
இரவு நேரம் தான் சிறந்தது. காலையில தூக்கக் கலக்கமா இருக்கும். சோம்பலில் அரைமணி நேரத்துக்கும் மேல வீணாகும். ஊரும் அமைதியாக இருக்கும். நிம்மதியா படிக்கலாம். கிளாஸுல சொல்லிக்கொடுக்கும் பாடங்களை, அன்னிக்கு நைட்டே படிச்சுட்டா ஈஸியா மனசுல பதிஞ்சுடும்.
