sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/கற்றுக்கொடுக்கக் காத்திருக்கும் 'இடம்'

கற்றுக்கொடுக்கக் காத்திருக்கும் 'இடம்'

கற்றுக்கொடுக்கக் காத்திருக்கும் 'இடம்'


PUBLISHED ON : செப் 03, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 03, 2018


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எனக்கே என்னை நினைத்து வெட்கமாக இருந்தது. நேற்று வீட்டுக்கு வந்த உறவினர் மாமாவினால் அவமானமாகப் போய்விட்டது. வீட்டுக்கு வருகிறவர்கள் வழக்கம்போல் கேட்கும் மொக்கையான கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டே வந்தேன். 'வகுப்பு என்ன? மார்க் என்ன? உங்க ஸ்கூல்ல 'நீட்' கோச்சிங் உண்டா? மேலே என்ன படிக்கப் போறே?' என எல்லாவற்றுக்கும் சரியாகப் பதில் சொல்லி, நல்ல பிள்ளை என்ற பெயரை வாங்கிக்கொண்டு இருந்தேன்.

என் போதாத காலம். அவர் எந்த ஊரில் இருந்து வருகிறார் என்று ஏன் கேட்கத் தோன்றவேண்டும்? தோன்றியது. கேட்டும் விட்டேன். “ஆரணி” என்றார் மாமா. “அது எங்க இருக்கு? கர்நாடகாவா?” என்றேன். அவ்வளவுதான், அவர் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். இதுகூடத் தெரியலையே என்பதுபோல் இருந்தது அவரது சிரிப்பு.

எனக்கு அந்த ஊர் பெயரே புதுசு. இதுவரை கேள்விப்பட்டதில்லை. “வேலூர் பக்கத்தில இருக்கு” என்றார் அடுத்து. வேலூர் என்ற ஊர் பெயரையும் நான் கேள்விப்பட்டதில்லை. மேலும் கேட்டு அவமானப்பட வேண்டாம் என்பதுபோல் சும்மா இருந்துவிட்டேன்.

ஆனால், மனசெல்லாம் புழுக்கம், இரவுமுழுக்க. நான் கேட்டதில் தவறா? அவரது சிரிப்பு என்னை இம்சைப்படுத்தியது. உமா மிஸ்ஸிடம் சொன்னேன். பொறுமையாகக் கேட்டுக்கொண்டவர்,

“இது உன் தப்பு இல்ல. அது எங்க இருக்குன்னு உங்க மாமா சிரிக்காமல் எடுத்துச் சொல்லியிருக்கலாம். பரவாயில்லை. ஆனால், நான் வேற சில கேள்விகள் கேக்கறேன். பதில் சொல்லுவியா?”

“கேளுங்க மிஸ்.”

“ஹைப்பர் லூப்பை உருவாக்குனது யார்?”

“எலன் மஸ்க்.”

“அவரோட கம்பெனி பேரு என்ன?”

“டெஸ்லா.”

“ஹைப்பர்லூப்பைப் பார்த்திருக்கியா?”

“போட்டோவுலதான் பார்த்திருக்கேன் மிஸ்.”

“கோதுமை, உருளைக்கிழங்கு எல்லாம் எங்கே விளையுது தெரியுமா?”

“தெரியலை மிஸ்.”

“நீ நடந்து வர ரோடு பேரு என்ன?”

“டி.எம். நாயர் சாலை மிஸ்.”

“டி.எம். நாயர் யாருன்னு தெரியுமா?”

ஒரு நிமிடம் நின்றுவிட்டேன். உண்மையில் எனக்குக் குழப்பமாக இருந்தது. உமா மிஸ் என் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தார். அதில் தெரிந்த அக்கறை எனக்கு இன்னும் வருத்தம் தந்தது. இதையெல்லாம் கண்டிப்பாகத் தெரிந்துகொண்டு இருக்கவேண்டும். ஆனால், உறுதியாகத் தெரியாமல் இருக்கிறது. உண்மையைச் சொல்லிவிடுவதே சரியென்று தோன்றியது.

“சரியா தெரியல மிஸ்.”

மெல்லப் புன்னகைத்தார் உமா மிஸ். அவரது அக்கறை இன்னும் உயர்ந்தது போலிருந்தது.

“இதுக்குத்தான் இடம் சார்ந்த கல்விமுறை அவசியம்னு வெளிநாடுகள்ல சொல்றாங்க.”

“அப்படின்னா என்ன மிஸ்?”

உமா மிஸ் விளக்கம் தர ஆரம்பித்தார். எனக்கு என் குறை புரியத் தொடங்கியது.

வகுப்பறை தனியாகவும் யதார்த்த உலகம் வேறாகவும் இருக்கிறது. குறிப்பாக, வகுப்பறையில் சொல்லித்தரப்படும் வரலாறுகூட, நேரடியாகத் தொடர்பு இல்லாமல் இருக்கிறது. ஆறாம் வகுப்பில் எடுத்தவுடனே கற்காலம் தொடங்கி, வரலாற்றுப் பாடம் ஆரம்பிக்கிறது. பத்தாம் வகுப்பு வரும்போதுதான், தற்கால வரலாறு பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆறாம் வகுப்பு மாணவனால் எப்படி ஒரு கற்காலத்தைக் கற்பனை செய்து பார்க்க முடியும்? அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அருகில் இருக்கும் பள்ளி, அவன் நடந்துபோகும் சாலை, வீடு இருக்கும் தெரு, பக்கத்தில் இருக்கும் முக்கியமான கட்டடங்கள் ஆகியவைதான். அவையெல்லாம் எப்படித் தோன்றின, எப்போது தோன்றின, யார் யாரெல்லாம் அவற்றில் இருந்தார்கள் என்பதை மாணவனால் உடனடியாகப் பார்த்துப் புரிந்துகொள்ள முடியும். அவனது கற்பனைக்குள் எட்டிய விஷயங்கள் அவை.

இதுதான் இடம் சார்ந்த கல்வி. ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. ஓர் அறிவியல் இருக்கிறது. புவியியல் இருக்கிறது. தோட்டங்களும் மரங்களும், செடிகளும் கொடிகளும் அங்கேயுள்ள தாவரவியலைப் பேசும். கிளிகளும் குயில்களும் இன்னபிற பூச்சியினங்களும் அங்கேயுள்ள விலங்கியலைப் பேசும்.

இவையெல்லாம் கண்ணெதிரே தெரிபவை. கற்றுக்கொடுக்கக் காத்திருப்பவை. என்னைப் புரிந்துகொள், நான் உனக்கு ஒரு செய்தி வைத்திருக்கிறேன் என்று கதறிக் கொண்டிருப்பவை. அவற்றின் குரல்கள் நம் காதுகளில் விழுவதில்லை. அவற்றை ஒரு பாடமாகவே நாம் கருதுவதில்லை.

“முதல்ல நீ இருக்கிற வீடு, படிக்கிற ஸ்கூல், வாழ்ற பகுதி… ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். இதையெல்லாம் தெரிந்துகொண்டால், இதனுடைய தொடர்ச்சியாகத்தான் மற்ற விஷயங்கள் உன்கிட்டே வரும். அடிப்படையே தவறா இருக்கு. நாம கீழே இருந்து, இடம் சார்ந்து கல்வியை ஆரம்பிக்கறதுக்குப் பதில், மேலேயிருந்து, அதாவது புத்தகத்துல இருந்து பாடத்தை ஆரம்பிக்கிறோம். அதனால்தான், உனக்கு டி.என். நாயரையும் தெரியலை, கோதுமை மரத்துல விளையுதா, பூமியில விளையுதான்னும் தெரியலை.” என்று முடித்தார் உமா மிஸ்.

நான் அமைதியாக இருந்தேன். இடத்துக்கு உயிர் இருக்கிறது. ஜீவன் இருக்கிறது. அது தன்னிடம் வைத்துக்கொண்டுள்ள ரகசியங்களைத் தெரிந்துகொள்ளாமலேயே, மேலே மேலே படிக்கிறோம் என்பது உறைத்தது.

முதலில் நான் படித்துக் கொண்டிருக்கும் பள்ளியைப் பற்றிக் கேட்கத் தொடங்கினேன். உமா மிஸ், பள்ளிக் கட்டடத்தை நோக்கிக் கைநீட்டி, ஒவ்வொரு விஷயமாகச் சொல்லத் தொடங்கினார். அடுத்த சில நிமிடங்களில் எனக்கு ஆச்சரியமே மிஞ்சியது. நான் படிக்கும் பள்ளிக்கு இத்தனை சிறப்பா? பள்ளிக் கட்டடத்தையே அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருந்தேன்.

அந்த இடம் என்முன்னே தன் எழிலை வரித்துக் காண்பிக்கத் தொடங்கியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us