PUBLISHED ON : செப் 03, 2018

''ஒவ்வொரு அரசுப் பள்ளி ஆசிரியரும் தங்களால் இயன்ற அளவில் பள்ளி மேம்பாட்டுக்கு உரிய முயற்சிகளைச் செய்ய வேண்டும்; அரசு வேலையை எதிர்பார்க்கும் நாம், அதை முன்னேற்றவும் வேண்டும்''” என்கிறார் ஆசிரியை ஸதி. இவர் இந்த ஆண்டு, குடியரசுத் தலைவர் கையால், 'நல்லாசிரியர் விருது' பெறவிருக்கிறார்.
தமிழகத்திலிருந்து, அந்த விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே ஆசிரியை ஸதி.
கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராக உள்ளார். அவரிடம் பேசியதிலிருந்து...
கடந்த 1995-இல் ஆசிரியர் பணியைத் தொடங்கினேன். மலுமிச்சம்பட்டி பள்ளிக்கு 2012இல் வந்தேன். எங்கள் பள்ளியில் மாணவர்கள் படிப்பைப் பாதியிலேயே கைவிடுவது அதிகமாக இருந்தது. பாழடைந்த பள்ளிச்சூழல், போதிய அடிப்படை வசதிகள் இல்லாதது என பல காரணங்கள். இவ்வளவு பெரிய கிராமத்தில், 140 பிள்ளைகள் மட்டுமே பள்ளிக்கு வருவது கவலையை ஏற்படுத்தியது. நேரடியாகக் களத்தில் இறங்கினோம்.
பெற்றோர்களால் பென்சில், நோட்டு, சீருடை வாங்கித் தரமுடியாத சூழலில், அதுபோன்ற குழந்தைகளுக்கு, நாங்களே வாங்கிக் கொடுத்தோம். அதேபோல், வடநாட்டுத் தொழிலாளர் குடும்பங்களுக்குச் சென்று, அவர்களது குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தோம். அவர்கள் 3 கி.மீ. நடந்து வர வேண்டி இருந்ததால், எங்கள் செலவிலேயே ஆட்டோ ஏற்பாடு செய்துகொடுத்தோம். இப்படி, சிறுகச் சிறுகப் பிள்ளைகளின் எண்ணிக்கையைக் கூட்டினோம்.
பள்ளிக்கு வரும் பிள்ளைகள், கழிப்பறை வசதி இன்றிக் கஷ்டப்பட்டனர். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் சென்று பேசினோம்.
பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு, ஒரு கழிப்பறையைக் கட்டினோம். அதன்பிறகு, எல். அண்ட் டி. நிறுவனத்தை அணுகினோம். முதலில் ரூ. 5 லட்சம் அளித்தனர். அதைக்கொண்டு மேலும் 7 கழிப்பறைகளைக் கட்டினோம். தொடர்ந்து, ஹேண்ட்வாஷ் பைப், குடிநீருக்காக ஆர்.ஓ. வசதி, தண்ணீர்த் தொட்டி என ஒவ்வொன்றாக அமைத்தோம்.
50 ஆண்டுகள் பழமையான தரையை ரூ.27 லட்சம் செலவில் சீரமைத்தோம். அதற்கும் எல். அண்ட் டி. நிறுவனம் கைகொடுத்தது. வகுப்பறைகளில் கிரீன் போர்ட், ஸ்மார்ட்கிளாஸ் அமைத்தோம். மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்புகளைச் சொல்லித்தர, 15 ஸ்மார்ட் டேப்லெட்டுகளை வாங்கினோம். எங்களது ஆர்வத்தைக்கண்ட எல். அண்ட் டி. நிறுவனம் பள்ளியைத் தத்தெடுத்து, ரூ. 75 லட்சம் மதிப்பில் கட்டடம் கட்டிக் கொடுத்தது.
அதேபோல், வி.கே.சி. நிறுவனம் எல்லா குழந்தைகளுக்கும் ஷூ, பெல்ட், டை போன்றவற்றை வழங்குகிறது. எங்கள் பள்ளியின் கட்டமைப்பே மாறிவிட்டது. இப்போது, 28 மாற்றுத்திறனாளி மாணவர்கள் உட்பட 270 பேர் படிக்கின்றனர்.
எங்கள் பள்ளியில், பிரேயரை முக்கிய இடமாகப் பயன்படுத்துகிறோம். அங்கு தினமும் பழமொழி, சுதந்திரப் போராட்ட வரலாறு, தலைவர்கள் அறிமுகம், ஒழுக்கப் போதனைகளைக் கற்பிக்கிறோம். வடநாட்டு மாணவர்கள், காமராஜரைப் பற்றி உரை நிகழ்த்தும் அளவுக்குத் தயாராகிவிட்டனர். முக்கியத் தலைவர்கள் பிறந்த நாளை, விமரிசையாகக் கொண்டாடுகிறோம்.
மாணவர்களுக்கு யோகா, கராத்தே, செஸ் உள்ளிட்ட விளையாட்டுப் பயிற்சிகளை அளித்து வருகிறோம். 'குட்டி கமாண்டோஸ்' என்ற படையை உருவாக்கியுள்ளேன். அவர்கள், பிரத்யேக ஜெர்கின் அணிந்துகொண்டு அதிகாலையில் விசில் அடித்துக்கொண்டே ஊருக்குள் போவார்கள். யாராவது திறந்தவெளியில் மலம் கழித்தால், சுகாதாரக் கேடுகள் பற்றி அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்.
அவர்கள் முயற்சியால், தற்போது தொண்டு நிறுவனம் ஒன்று, பொதுக்கழிப்பறை கட்டுவதற்கான பணியைத் தொடங்கி உள்ளது. கிரீன் கமாண்டோஸ் படையை உருவாக்கி வருகிறோம். முதற்கட்டமாக பிளாஸ்டிக் இல்லாத பள்ளிக்கூடமாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம்.
அதோடு மரம் நடுதல், தோட்டப்பயிர் செய்தல் போன்றவற்றை மாணவர்களை ஈடுபடுத்தி அவர்களை ஊக்குவிக்க உள்ளோம்.” என்றார்.
இதற்கு முன்னர், ஆசிரியை ஸதி வேலைபார்த்த மற்ற பள்ளிகளிலும், பல மேம்பாட்டுப் பணிகளைச் செய்துள்ளார். இவர், கடந்த 2016ஆம் ஆண்டு கோவையில் சிறந்த பள்ளியாக ஆட்சியர் விருதும், 2017இல் தமிழகத்தில் சிறந்த பள்ளிக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதும் பெற்றுள்ளார்.
