தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஐ.ஏ.எஸ். ஆன ரிக் ஷாக்காரர் மகன்

ஐ.ஏ.எஸ். ஆன ரிக் ஷாக்காரர் மகன்

ஐ.ஏ.எஸ். ஆன ரிக் ஷாக்காரர் மகன்


PUBLISHED ON : செப் 03, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 03, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

21 வயதிலேயே தேர்ச்சி பெற்று, இந்தியாவின் இளம்வயது ஐ.ஏ.எஸ். என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் அன்சார் ஷேக்.

மிகுந்த வறுமைக்கிடையில், இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார் அன்சார். எல்லா சோதனைகளையும் சாதனைகளாக மாற்றிய தனது அனுபவத்தைப் பற்றி அன்சார் கூறியதிலிருந்து...

'மகாராஷ்டிர மாநிலத்தின் வறட்சிப் பகுதியான ஜால்னா மாவட்டத்தைச் சேர்ந்தவன். அப்பா

ரிக் ஷா ஒட்டுநர். வருமானம் மிகக் குறைவு. வீட்டில் மின்சாரம் இல்லை. மிகுந்த வறுமை. பள்ளியில் வழங்கும் மதிய உணவுதான் எனக்கான அன்றைய உணவு. ஒருநாள், மதிய உணவில் புழு கிடந்தது. ஆனாலும், பசி வயிற்றைப் பிசைந்ததால், அதைத் தூக்கிப்போட்டுவிட்டு சாப்பிட்டேன்.

அண்டைவீட்டார், எங்கள் குடும்பக் கஷ்டத்தைப் பார்த்து, எனது படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போகச் சொன்னார்கள். எனது தந்தையும் என் படிப்பை நிறுத்தும்படி ஆசிரியரிடம் கோரினார். ஆனால், ஆசிரியர் என் திறமையைப் பற்றி எடுத்துக்கூறி, படிப்பைத் தொடர வைத்தார்.

நன்றாகப் படித்து பிளஸ் 2வில் 91 சதவீத மதிப்பெண் பெற்றேன். பின்னர், பி.ஏ. அரசியல் அறிவியல் பிரிவில் சேர்ந்தேன். கல்லூரிக்குச் செல்வதற்கு, எனக்கு இரண்டு சட்டை, இரண்டு பேன்ட்டுகள்தான் இருந்தன.

ஒருமுறை என் தந்தை அரசாங்க வீடு திட்டத்துக்காக விண்ணப்பித்தார். அதிகாரி பெரும் தொகையை லஞ்சமாகக் கேட்டார். என் மனதில் இது பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர், யு.பி.எஸ்.சி. தேர்வெழுத, பயிற்சி மையத்தில் சேர முடிவெடுத்தேன்.

புனேவில் உள்ள பயிற்சி அகாதெமியில், ரூ.70 ஆயிரம் கேட்டனர். அகாதெமி தலைவரிடம் என் நிலைமையைச் சொன்னேன். இரக்கமுற்ற அவர், பாதிப் பணத்தைக் கட்டினால் போதும் என்றார். வீட்டை விற்றுப் பணம் கட்டினோம்.

அந்த அகாதெமியில் நான்தான் இளையவன். கேள்வி மேல் கேள்வி கேட்பேன். எல்லோரும் சிரிப்பார்கள். புத்தகம் வாங்கக் காசின்றி, நகல் எடுத்துப் படித்தேன்.

முதல் முயற்சியிலேயே, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். பிரதானத் தேர்வுக்காகக் காத்திருந்தபோது, என் தங்கையின் கணவர் இறந்துவிட்டார். குடும்பத்துக்கு இன்னொரு சுமை ஏற்பட்டது. ஆனால், குடும்பத்தினர் என்னைத் தொடர்ந்து ஊக்குவித்தனர். குடிமைப்பணி தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்திய அளவில் 361வது ரேங்க் பெற்று, நான் ஐ.ஏ.எஸ். ஆகத் தேர்ச்சி பெற்றேன். முதலில் எனது பெற்றோர் இதை நம்ப முடியாமல் அதிர்ச்சியடைந்தனர். இன்று ஊரே மகிழ்ச்சியாக உள்ளது.

இதற்கு முன்னர், 2013இல் ரோமன் சாய்னி என்பவர், 22 வயதில் ஐ.ஏ.எஸ். ஆனதே, இளம்வயது சாதனையாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us