தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சூடிக்கொடுத்த சுடர்க்கொடி!

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி!

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி!


PUBLISHED ON : செப் 03, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 03, 2018


Follow on Google
அ நிறம் | அளவு

ஆண்டாள், கோதை, நாச்சியார், சூடிக்கொடுத்த சுடர்க்கொடி... இவை அனைத்தும் ஒருவரையே குறிக்கின்றன. தமிழ்ப் பக்தி இலக்கியத்தின் மிகச்சிறந்த பாடல்களில் சிலவற்றை எழுதிய பெரும்புலவர், பெரும்பக்தர் அவர்.

ஆழ்வார்கள் பன்னிருவர். அவர்களில், ஆண்டாள் மட்டும்தான் பெண்.

பொதுவாகவே தமிழ் இலக்கியத்தில் பெண்பாற்புலவர்கள் குறைவு. சங்க இலக்கியத்தில் ஔவையார், காக்கைப்பாடினியார், காவற்பெண்டு, வெள்ளைவீதியார் போன்றோரைக் காண்கிறோம், பின்னர் சைவத்திருமுறைகளைப் பாடிய புலவர்களில் காரைக்கால் அம்மையார், ஆழ்வார்கள் மத்தியில் ஆண்டாள் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

அதேசமயம், எழுத்துத்திறனில் ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை. ஆண்டாளின் பாடல்களே அதற்குச் சிறந்த சான்று. திருமால் மீது வைத்திருக்கும் அன்பைச் செழுமையான பாடல்களாக அற்புதமான சொற்களைக் கோத்துத் தந்திருக்கிறார் அவர். அப்பாடல்களில் வெளிப்படும் அழுத்தமான உணர்வுகளுக்காகவே, இன்றும் ஆண்டாளின் பாடல்கள் பரவலாக வாசிக்கப்படுகின்றன.

வில்லிபுத்தூரில் பிறந்தவர் ஆண்டாள்; பன்னிரு ஆழ்வார்களில் சிறப்பிடம் பெற்றவரான 'பெரியாழ்வார்' இவரை ஒரு துளசிச்செடியின் அருகில் கண்டெடுத்து வளர்த்ததாக நம்பிக்கை.

பெரியாழ்வார் அவ்வூரில் எழுந்தருளியிருக்கும் திருமாலுக்குப் பூக்களைத் தொடுத்து மாலையாக்கிச் சமர்ப்பிக்கும் திருத்தொண்டைச் செய்து கொண்டிருந்தார். அப்படி அவர் தொடுத்த மாலைகளை ஆண்டாள் அணிந்து பார்த்தாள், அதன்பிறகே அவை திருமாலுக்குச் சூட்டப்பட்டன. அதனால்தான் அவரைச் 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' என்று அழைக்கிறார்கள்.

ஆண்டாள், இரண்டு நூல்களில் மொத்தம் 173 பாடல்களை எழுதினார். அவை: திருப்பாவை, நாச்சியார் திருமொழி.

'நாச்சியார்' என்பது ஆண்டாளின் சிறப்புப்பெயர்களில் ஒன்று. இறைவனைப்பற்றி நாச்சியார் எழுதிய திருப்பாடல்களின் தொகுப்பு என்பதால், அதை 'நாச்சியார் திருமொழி' என்கிறோம்.

ஆண்டாளின் பாடல்கள் தமிழகத்தில் மட்டுமன்றிப் பிற மாநிலங்களில், அதாவது, தமிழ் தெரியாதவர்கள் மத்தியிலும் பாடப்படுகின்றன. தெலுங்கில் ஆண்டாளின் வரலாற்றை 'ஆமுக்தமால்யதா' என்ற பெயரில் எழுதியிருக்கிறார் கிருஷ்ணதேவராயர்.

நினைவிற்கு

1. ஆண்டாளுக்குரிய பிற பெயர்கள் என்னென்ன?

_____________________

2. ஆண்டாள் எழுதிய நூல்கள் யாவை?

_____________________

3. ஆண்டாள் யாரைப் பற்றிப் பாடினார்?

_____________________

- என். சொக்கன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us