PUBLISHED ON : டிச 31, 2018

குழந்தைகளுக்கு கல்வியும் விளையாட்டும் முக்கியமானவை. எனவே, பள்ளிகளும் விளையாடுமிடங்களும் எல்லா குழந்தைகளும் பங்குபெறும் வகையில் இருக்கவேண்டியது அவசியம். குழந்தைகளுக்கான விளையாட்டுப் பூங்காவில் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் இருப்பு கணக்கில் கொள்ளப்படுவதே இல்லை.
2005ஆம் ஆண்டு பெங்களூருவில் இருக்கும் ஒரு பூங்காவிற்கு தனது மகனை விளையாட அழைத்துச் சென்ற கவிதா கிருஷ்ணமூர்த்தி, இந்த பாரபட்சத்தை உணர்ந்தார். அப்பெரிய பூங்காவில் விளையாடும் குழந்தைகளில் ஒரு மாற்றுத்திறனாளி குழந்தைகூட இல்லை என்பதை உணர்ந்தார். அப்போதுதான் பூங்காக்களின் வடிவமைப்பிலேயே இவ்விஷயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். இதன் தொடர்ச்சியாக அவர் உருவாக்கிய அரசு சாரா தொண்டு நிறுவனம்தான் கிலிகிலி (Kilikili).
பெங்களூரு, மங்களூர், நாக்பூர் ஆகிய நகரங்களில், சிறப்புக் குழந்தைகளும் பங்குபெறும் வகையிலான 5 விளையாட்டுப் பூங்காக்கள், இந்நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன.
இப்போது சென்னை சாந்தோமில் சிறப்புக் குழந்தைகளுக்கான சென்சரி பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது. சாந்தோம் 4வது ட்ரஸ்ட் லிங்க் சாலையில் அமைந்துள்ள இப்பூங்கா, 1,529 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
“குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தெரபிஸ்டுகள், மாற்றுத்திறனாளிகள், துறை சார்ந்தவர்கள் போன்றோரிடம் பல முறை பேசியே பூங்காவில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்தோம்” என்கிறார் கவிதா.
இங்கு பார்வைத் திறன் சவாலுடைய குழந்தைகள் தொட்டு உணரத்தக்க ஓவியங்கள், சக்கர நாற்காலியோடு அமர்ந்து ஆடத்தக்க ஊஞ்சல்கள் அமைக்கப்பட்டுள்ளன. புலன் உணர்வு சிக்கல்கள் கொண்ட ஆட்டிசம் போன்ற குறைபாடு உடைய குழந்தைகள் நடைப்பயிற்சி மேற்கொள்ள, மண், கூழாங்கற்கள், மரம், நார், கான்கிரீட் போன்ற பொருட்களால் நடைபாதை அமைக்கப்பட்டிருக்கிறது.
பூங்கா முழுவதுமே கீழே விழுந்தாலும் காயம்படாத வகையில் ரப்பர் தரை. விதவிதமாக ஓசை எழுப்பும் அபூர்வமான பொருட்களும் இப்பூங்காவில் உள்ளன. இதுபோன்றதொரு பூங்கா ஏற்கெனவே மதுரையில் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
