PUBLISHED ON : நவ 28, 2016

ஒரு சிற்றூர் இருந்தது. அந்த ஊருக்கு வெளியே, ஓர் ஆறு இருந்தது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக, ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது.
இரண்டு பெரியவர்கள், பாலத்தின் மீது நடந்துகொண்டே, சுழித்தோடும் நீரை வேடிக்கை பார்த்தார்கள்.
'இப்படி ஒரு வெள்ளத்தைப் பார்த்து எத்தனை காலமாச்சு?' என்றார் ஒருவர்.
'நீ சொல்வது சரிதான். கடந்த பத்து ஆண்டுகளாக, இந்த ஆற்றில் வெள்ளமே வரலே. கிணறுகளில் நீர் வற்றி, பயிர்வைக்க முடியாமல் எவ்வளவு கஷ்டப்பட்டோம். இனி அந்தக் கவலை இல்லை. நிம்மதியாகப் பயிர் வைக்கலாம்' என்றார் மற்றொருவர்.
அவர்கள் கடந்து சென்ற சிறிதுநேரம் கழித்து, அதே பாலத்தின் வழியாக வந்தான் கார்த்தி. பள்ளிக்கூடத்தில் இருந்து சுமந்து வந்த புத்தகப் பையை, அந்த பாலத்தின் ஓர் ஓரத்தில் வைத்தான். தடுப்புச் சுவரைப் பிடித்துக்கொண்டு, ஆற்றை வேடிக்கை பார்க்கத் தொடங்கினான். புது வெள்ளம் என்பதால், நீர் இன்னும் செம்மண் நிறத்திலேயே இருந்தது.
நீரில் யாரோ விட்டெறிந்த பிளாஸ்டிக் பந்து, நைந்துபோன பாய், பிய்ந்துபோன ஒற்றைச் செருப்பு, கிழிந்த துணி என, அத்தனையும் மிதந்து வந்தது ஆற்றில்.
ஆற்றில் ஓடும் பொருட்களைப் பார்த்ததும், கார்த்திக்கு, எதையாவது எடுத்து நீரில் போட வேண்டும் போல் இருந்தது. அது மிதந்தோடும் அழகை வேடிக்கை பார்க்க வேண்டும் போல் தோன்றியது.
கீழே சுற்றும்முற்றும் பார்த்தான். பாலத்தின் ஓரத்தில் மரத்துண்டு ஒன்று கிடந்தது. அதை எடுத்து மகிழ்ச்சியாய் ஆற்றில் விட்டெறிந்தான். அது நீரின் ஓட்டத்துக்குத் தகுந்தாற்போல் மேலும், கீழுமாய்ப் புரண்டு ஓடியது.
அடுத்து, எதை எடுத்துப் போடுவது என்று சுற்றும்முற்றும் தேடினான். உடைந்த செங்கல் துண்டு ஒன்று இருப்பது தெரிந்தது. மகிழ்ச்சியுடன் அதை எடுத்து, ஆற்றில் வீசுவதற்காகப் போனான். அந்நேரம் பார்த்து,'டேய் கார்த்தி! நிறுத்துடா! நிறுத்துடா!' என்றபடியே அருகில் வந்தான் அவனுடைய வகுப்புத் தோழன் செழியன்.
'என்னடா கையில்? என்ன செய்யப்போறே?'
'கல்லு! விளையாடப் போறேன்?' என்றான்.'
'கல்லில் என்ன விளையாட்டு? அதை எதுக்கு ஆற்றில் போடப்போறே?' செழியனின் முகம் மாறியது.
'சும்மாதான். ஜாலியா இருக்கும் இல்ல. ஓணானை அடிக்கிற மாதிரி, இதுவும் ஒரு விளையாட்டுதான். உனக்குத் தெரியாதா? வேணும்னா இந்தா, இந்தக் கல்லை நீயே போடு.' சிரித்துக்கொண்டே சொன்னான் கார்த்தி.
'ஓணானை நாம் அடிக்கிறதே தப்புதான்டா. நிழலில் அது பாட்டுக்கு உட்கார்ந்திருக்கும். அதைப்போய் நாம் அடிக்கிறது பாவம். அதைவிடப் பெரிய பாவம் ஆற்றில் கல் போடுவது.'
'டேய் என்னடா நீ? சீரியசா பேசிட்டே போறே! ஆற்றுக்கு உயிரா இருக்கு? அது தண்ணீர்தானே? அதில் கல் போட்டால் என்ன? மண் போட்டால் என்ன?'
கையை உயர்த்தி கல்லை வீசப்போனவனின் கரத்தைப் பிடித்துக் கொண்டான் செழியன்.
'கல்லை ஆற்றில் போடாத கார்த்தி. நாம் குடிநீருக்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கோம். நம் அம்மாவெல்லாம் எவ்ளோ தூரம் போய் தண்ணீரை குடங்களில் எடுத்துட்டு வந்தாங்க.. அதையெல்லாம் மறந்துட்டியா நீ?'
'அதுக்கென்னடா இப்போ? இப்பதான் மழை வந்துடுச்சே? இனி தண்ணீருக்கு கஷ்டமிருக்காதே. நான் கல் போட்டால், என்ன ஆகிடப் போகுது?'
'மழை வந்தால் மட்டும் போதாது கார்த்தி. பெய்யும் நீரை நாம் பாதுகாக்கணும். இந்த ஆறு, வேறொரு ஊரில் உள்ள ஏரிக்கோ, குளத்துக்கோ போய் பயிருக்கும் குடிநீருக்கும்தான் பயன்படப்போகுது. அப்படிப்போகும் நீரை, நாம் கல்லையும் மண்ணையும் போட்டு அடைச்சி வீணாக்கலாமா?'.
'நான் ஒரு கல்லுதானேடா போடப்போறேன். அதுக்கே ஆறு அடைத்துக் கொள்ளுமா என்ன?' என்றான் கார்த்தி.
'நீ ஒரு கல்லுதான் போடப்போறே! ஆனால், நம் ஊரில் இருக்கும் ஒவ்வொருவரும் தினம் ஒரு கல்லாய் போட்டால், என்னாகும் ஆறு? யோசிச்சுப் பாரு?'
செழியன் சொன்னதை காதில் வாங்கிக் கொண்டு, சிந்தித்துப் பார்த்தான் கார்த்தி. 'அந்த ஊர் மக்கள் ஒவ்வொருவரும், ஒரு கல் எடுத்து வந்து ஆற்றில் போட்டு விட்டுப் போவது போல் அவன் கற்பனை விரிந்தது. இப்படிச் சில ஆண்டுகளில் போடப்பட்ட கல், மலை போல் குவிந்து மேடாய்க் காட்சியளித்தது. அப்போது பார்த்து, ஆற்றில் இதே போன்றதொரு மழை பெய்து நீர் பெருக்கெடுத்து ஓடி வந்தது. ஓடி வந்த நீர் போவதற்கு வழியின்றி கற்குவியல் அடைத்துக் கொண்டிருந்தது.
நேராகப் போக வேண்டிய நீர், செல்வதற்கு வழியின்றி, இவர்களின் ஊருக்குள் புகுந்து விட்டது. வீடுகளில் நீர் புகுந்து மக்கள் அவதிக்கு ஆளானார்கள்.'
கற்பனையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான் கார்த்தி. 'சாரிடா! என்னை மன்னிச்சிடு. ஆற்றைச் சேதப்படுத்தினால், என்ன பயங்கரம் விளையும்னு எனக்குப் புரிஞ்சுபோச்சு. இனிமேல் நான் மட்டுமல்ல, வேறு யாரையும் எதையும் ஆற்றில் போடவிட மாட்டேன்... இது உறுதி.' என்றான் கார்த்தி.
'பரவாயில்லைடா! மழையும், ஆற்று நீரும் நமக்கு எப்பவாச்சும்தான் கிடைக்குது. அதை நாம் பாழ்படுத்தக் கூடாது, பாதுகாக்கணும். இதை நீ புரிஞ்சுகிட்ட பிறகு, எதுக்கு மன்னிப்பெல்லாம்? வா வீட்டுக்குப் போகலாம்...'
இருவரும் புத்தகப் பையை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றார்கள்.
போகும் முன், கார்த்தி ஆற்றை ஒரு நிமிடம் திரும்பிப் பார்த்தான். அது இவனைப் பார்த்துப் புன்னகைப்பது போல் இருந்தது. பதிலுக்கு அவனும் சிரித்தான்.
இ.எஸ்.லலிதாமதி
