PUBLISHED ON : நவ 28, 2016

அகளங்கன் என்னும் அரசன் இருந்தான். நிறைய பணம் கொடுத்து, அபூர்வமாய் ஒரு சேலையை நெய்யச் சொன்னான். அந்தச் சேலையை ஔவையாருக்கு பரிசாகக் கொடுத்தான். அதை உடுத்திக்கொண்டு ஔவை, அரச சபைக்குள் நுழைந்தார். ஏதாவது சொல்லி, ஔவையை பாட வைக்க வேண்டும் என்று நினைத்தான் அரசன். அதனால், 'தாயே! சேலை மிகவும் உயர்ந்தது, உடுத்துவதற்கு வசதியாக இருக்கிறதல்லவா?' என்று கேட்டான்.
உடனே ஔவையார், 'அகளங்கா, நீ வாங்கித் தந்த நூற்சேலை, நல்ல வேலைப்பாடு கொண்டதுதான்; கட்டுவதற்கு சுகமானதுதான்; விலை மதிக்க முடியாததுதான். ஆனாலும் நூலால் நெய்யப்படுகிற சேலை நாலு மாதத்தில் கிழிந்தும் நைந்தும் போகும். ஆனால், சொல்லால் நெய்யப்படுகிற என் பாடல் கிழியாது; என்றும் நிலைத்திருக்கும்' என்றார்.
அந்தப் பாடல்...
நூற்றும்பத் தாயிரம்
பொன்பெறினும் நூற்சேலை
நால்த் திங்கள் நாளினில்
நைந்துவிடும் மாற்றலரைப்
பொன்றப் பொருதடக்கைப்
போர்வேல் அகளங்கா
என்றும் கிழியாதென் பாட்டு
