PUBLISHED ON : மார் 26, 2018

நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் ஐ.நா. ஏற்பாடு செய்திருந்த அறிவியல் மாநாட்டில், ரோபோ சோபியா சிறப்பாக உரையாற்றியுள்ளது. மனித வடிவிலிருக்கும் ரோபோவை ஹ்யூமனாய்டு (Humanoid) என்கின்றனர். ஹாங்காங்கில் தயாரிக்கப்பட்டுள்ள சோபியாவுக்கு, செளதி அரேபியா குடியுரிமை வழங்கி கெளரவித்துள்ளது.
தற்போது, உலகின் பல இடங்களுக்கும் செளதி அரசப் பிரதிநிதியாகச் சென்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாகவே ஐ.நா.வின் அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டது. பொதுச்சேவைகளில் தொழில்நுட்பத்தின் தேவை, அவசியம் பற்றிப் பேசிய சோபியா, தன் பேச்சின் நடுவில் ஆங்காங்கு நகைச்சுவைத் துணுக்குகளையும் இணைத்து, பார்வையாளர்களை மகிழ்வித்தது.
கல்வி, மருத்துவம் போன்ற துறைகளிலும் தொலைதூரப் பகுதிகளை இணைப்பதிலும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் எந்த அளவுக்கு நேபாளத்திற்குப் பயனளிக்கும் என்பது குறித்து விரிவாகப் பேசிய சோபியாவிற்கு, பார்வையாளர்களின் ஒருமித்த வரவேற்புக் கிடைத்தது. கூடியிருந்த மக்களை 'நமஸ்தே' என்று சொல்லி வணங்கி, தன் உரையை ஆரம்பித்த சோபியா 'தன்யவாத்' என்று நன்றி சொல்லி முடித்தபோது அதன் பேச்சுத் திறனை கண்டு மக்கள் மகிழ்ந்தனர்.
