PUBLISHED ON : செப் 05, 2016

வயல்வரப்புகளில், சாலையோரங்களில் படர்ந்து வளரும் ஒரு வகை குட்டைச் செடிதான் தொட்டால் சிணுங்கி. குண்டு குண்டாய் ஊதா நிறப் பூவுடன், பார்க்க அழகாக இருக்கும். இந்தச் செடியைப் பார்க்கும் யாரும் இதை தொடாமல் போக மாட்டார்கள். தொட்டால், என்னை ஏன் தொடுகிறாய் என்பது போல் இதன் இலைகள் சட்டென்று சுருங்கிக் கொள்ளும். இப்படி சுருங்கிக் கொள்வதால் அதையே இதற்கு காரணப் பெயராகவும் வைத்து விட்டார்கள்.
மற்ற தாவரங்களின் இலைகள் தொட்டால் சுருங்குவதில்லை. இது மட்டும் ஏன் முன் கோபி மாதிரி சுருங்கிக் கொள்கிறது? இந்த நிகழ்வில் உள்ள அறிவியல் என்ன?
தொடும்பொழுது, செல்களில் உள்ள நீர் அளவில் மாற்றம் ஏற்படுவதால் தொட்டால் சிணுங்கி இலைகள் சுருங்குகின்றன. இதுதான் அறிவியல் காரணம்.
அமெரிக்கா இதன் தாயகம். தற்போது உலகம் முழுக்க பரவி இருக்கிறது.
சுமாராக 15 அடி வரை படர்ந்து வளரும். இதன் பூக்கள் கோடையில் மலரும். இதன் அறிவியல் பெயர் மைமோசா புடிகா (Mimosa pudica). லத்தீன் மொழியில் புடிகா என்றால் நாணம், வெட்கம் என்பதாகும். ஆங்கிலத்தில் சென்சிடிவ் பிளான்ட் (Sensitive plant), ஷேம் பிளான்ட் (Shame plant), ஹம்பிள் பிளான்ட் (humble plant) என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
இந்தத் தாவரம் கரும்பு, மக்காச்சோளம், வாழை, தக்காளி போன்ற பயிர்களில் ஊடுருவி வளர்ந்து அவற்றின் வளர்ச்சியை தடுக்கிறது.
சில நாடுகளில் இது, கால் நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுகிறது. இவற்றில் சில வகை, நச்சுத்தன்மை வாய்ந்தவை.
ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் பாரம்பரிய மருந்து பொருள் தயாரிப்பில், தொட்டால் சிணுங்கி பயன்படுத்தப்படுகிறது.
