PUBLISHED ON : செப் 05, 2016

நமக்கெல்லாம வெங்காயம் தெரியும். வெங்காயத்துக்கு மேலே வளரும் இலைதான் வெங்காயத்தாள் என்றும் தெரியும். அந்த வெங்காயத்தாளில் என்னென்ன நன்மைகள் அடங்கி இருக்கின்றன என்பது மட்டும் பெரும்பாலும் தெரியாது. அதை தெரிந்து கொள்வோம்!
வெங்காயத்தாளில் ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில் அதிக அளவில் கந்தக சத்து (sulphur) நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ, சி,கே, பி2, செம்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், மாங்கனீசு போன்ற கனிமங்கள் நிறைந்திருக்கின்றன. நார் சத்தும் உள்ளது.
வெங்காயத்தாள் கொழுப்பைக் கரைக்கிறது. இதயத்துக்கு ஆரோக்கியத்தை தருகிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சரியாக வைத்திருக்கச் செய்கிறது. பெருங்குடலில் ஏற்படக்கூடிய புற்று நோயை தடுக்கிறது. பசியைத் தூண்டுகிறது.
கண் பார்வைக்கும் நல்லது.
நம் ஊரில் பொரியல், சாம்பார், ஃபிரைட் ரைஸ், பச்சடி வகைகளில் வெங்காயத்தாளை பயன்படுத்துகிறார்கள். வெங்காயத்தாள் சீன மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இதற்கு ஆங்கிலத்தில் ஸ்காலியன் (Scallion), கிரீன் ஆனியன் (green onion), ஸ்பிரிங் ஆனியன் (spring onion) என்று பல பெயர்கள். அஸ்கோலோனியன் (askolonion) என்ற கிரேக்க சொல்லில் இருந்து ஸ்காலியன் வந்தது. இந்தியில் ஹரா பைஸ் (hara pyaz), போலந்து நாட்டில் சிசிபியர் (szczypior), பிலிபைன்ஸ் சிபுயாஸ் நா முரா (sibuyas na mura) ஸ்பெயின் சிபோலேட்டா (Cebolleta) என்றும் அழைக்கப்படுகிறது.
