PUBLISHED ON : நவ 14, 2016

தனி நபராக, ஒரு காட்டை உருவாக்கியவர், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 'ஜாதவ் பயேங்' (Jadav Payeng). அசாம் மாநிலம், பிரம்மபுத்திரா நதியின் நடுவே, ஜோர்ஹாட் (Jorhat) என்ற இடத்தில் உள்ள, 'கோகிலாமுக்' (Kokilamukh) பகுதியில், மிகப் பெரிய வனத்தை உருவாக்கியவர்தான் இவர். கடந்த 36 ஆண்டுகளாக, 1,360 ஏக்கர் பரப்புள்ள ஒரு மணல்திட்டை காடாகச் செழித்து வளர செய்துள்ளார்.
தாக்கம்
பிரம்மபுத்திரா நதியில், 1979ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில், பாம்புகள் அதிக அளவில் அடித்து வரப்பட்டன. வெள்ளம் வடிந்தபின், பல ஊர்வன இனங்கள் இறந்து கிடந்தன. இந்தச் சம்பவம், அப்போது 16 வயதுடைய ஜாதவ் பயேங்கிற்கு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மரங்கள் இன்றி அதிகரித்த புவி வெப்பத்தால், இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது என்பதை அவர் தெரிந்துகொண்டார்.
ஆரம்பம்
1980ம் ஆண்டு 'கோகிலாமுக்' பகுதியில், 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூகக் காடுகள் வளர்ப்பு' திட்டத்தின்கீழ் வனத்துறையினர், தொழிலாளர்கள் இணைந்து, மரக் கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. அந்த இடத்தில் மரக்கன்றுகளை பராமரித்துக் கொள்ள அனுமதி கேட்டு ஜாதவ் அங்கேயே தங்கிவிட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதை அப்படியே மறந்துவிட்டனர்.
உருவானது காடு!
அந்த மணல் திட்டிலேயே வாழ ஆரம்பித்த ஜாதவ், அங்கு மூங்கில் கன்றுகளை முதலில் நட்டு வளர்க்கத் தொடங்கினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த மணல் திட்டு மூங்கில் புதரானது. அதன் பிறகு மரக்கன்றுகளைச் சேகரித்து நட்டார். அந்த மரக்கன்றுகள் மண்ணில் சரியாக வளரவில்லை. தனது ஊரில் இருந்து சிவப்பு எறும்புகளைக் கொண்டு வந்து, அந்த மணல் திட்டில் விட்டார். அடுத்த சில ஆண்டுகளில், மண் பண்பட்டு, தாவரங்களும், உயிரினங்களும் செழிக்க ஆரம்பித்தன.
உலகிற்கு தெரிந்தது!
2008ம் ஆண்டு, அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து வெளியேறிய காட்டு யானைகள், 'கோகிலாமுக்' காட்டுக்குள் நுழைந்தன. அப்போதுதான் எல்லோருக்கும் இந்த காட்டைப் பற்றித் தெரிய வந்தது. தற்போது, இந்தக் காட்டில் தேக்கு, அகில், சந்தனம், கருங்காலி, ஆச்சா போன்ற மரங்களும், 740 ஏக்கர் (300 ஹெக்டேர்) பரப்பளவில், மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும், பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன.
ஒரு தனி மனிதரால் ஒரு காட்டை உருவாக்க முடிகிறது என்றால், நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது நட்டு வளர்க்கலாம்.
* ஆற்றின் நடுவில் உள்ள மணல்திட்டின் மீது, தனி மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் காடு இதுதான்.
* உள்ளூர் மக்கள் இந்தக் காட்டை 'மொலாய்' காடுகள் என்று அழைக்கிறார்கள். அதுதான் பயேங்கின் செல்லப் பெயர்.
* இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான, 'பத்மஸ்ரீ' விருது, 2015ம் ஆண்டில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
* புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், 2012ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு பாராட்டு விழாவில் இவருக்கு, 'இந்தியாவின் காட்டு மனிதன்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
- ப.கோபாலகிருஷ்ணன்
“எந்த ஒரு மண்ணையும் செழிக்க வைக்கும் மாய வித்தை, எறும்பைப் போன்ற சிற்றுயிர்களிடம் ஒளிந்துள்ளது. அவை மண்ணின் தன்மையையே உருமாற்றக் கூடியவை. இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை”
- ஜாதவ் பயேங்

