
எல்லாவற்றையும் பூமி ஈர்க்குமென்றால், அதனுடைய எடைக்கு அதிகமாக இருக்கும் பொருட்களை எப்படி ஈர்க்கும்?
கே. முனீஸ்வரி, 11ம் வகுப்பு, அரசு பெண்கள் பள்ளி, ஆண்டிப்பட்டி.
இயற்பியல் நமக்கு கற்பிக்கும் அதிசய உண்மை என்னவென்றால், பூமி மட்டுமல்ல; நிறை உள்ள எல்லா பொருட்களுக்கும் ஈர்ப்பு சக்தி உண்டு. நிறை உடைய இரண்டு பொருட்கள், ஒன்றை ஒன்று அதன் நிறை விகிதத்துக்கு ஏற்ப, கவர்ச்சி செய்யும் என்பதுதான், நவீன அறிவியல். அதாவது, உங்களுக்கும் எனக்கும் நிறை உண்டு. எனவே, உங்களுக்கும், எனக்கும்கூட பூமி போல ஈர்ப்பு சக்தி உண்டு.
நாமும், பூமியை நம் பக்கம் கவர்ந்து இழுக்கிறோம்; பூமியும், நம்மை அதன் பக்கம் கவர்ந்து இழுக்கிறது. இழுபறி விளையாட்டு போல நடக்கும் இந்தப் போட்டியில், ஒருபக்கம் நம்மைப் போல, பல கோடி மடங்கு நிறை உடைய பூமியும், மறுபக்கம் சுமார் எழுபது கிலோ எடை உடைய நாமும் இருந்து, இழுபறிக் கயிற்றைப் பிடித்து இழுத்தால், நமது இழுப்பு, கண்ணுக்குப் புலப்படக்கூடச் செய்யாது அல்லவா? எனவேதான், நமது இழுப்பு புலப்படுவதில்லை, பூமி கவர்ந்து இழுக்கிறது என கூறுகிறோம்.
சூரியன், பூமி எனக் கொண்டால், சூரியன் பூமியை பிடித்து இழுக்கும். அதேசமயம், சூரிய நிறையில் வெறும் மூன்று லட்சத்தில் ஒரு பங்கே உடைய பூமி, மறுபுறத்தில் பிடித்து இழுக்கும். இதில் பூமியின் கவர்ச்சி விசை மிகக் குறைவு என்றாலும் கணிசமானது.
விண்வெளியில், விண்வெளி வீரர்கள் மெதுவாக வேலை பார்க்கவும், நடக்கவும் செய்கிறார்களே ஏன்?
ஜ. லோகேஷ்வரன், 11ம் வகுப்பு, எஸ்.ஜெ.எஸ்.வி. மெட்ரிக் பள்ளி, விழுப்புரம்.
இயற்பியல் விதிகளின் விளையாட்டு இது! எடுத்துக்காட்டாக, திருகாணி (Screw - ஸ்க்ரூ) ஒரு குறிப்பிட்ட திசையில் திருகும்போது, நியுட்டனின் மூன்றாம் விதிப்படி, எதிர்திசையில் உங்கள் மீது விசை படியும். எனவே, நீங்கள் எதிர்ப்புறமாக திரும்பவேண்டிவரும். பூமியில் நின்று இவ்வாறு திருகும்போது, தரை நம் மீது செலுத்தும் எதிர்விசை காரணமாக, நாம் திரும்புவதில்லை.
விண்வெளியில் நம்மால் தரையில் நிற்க முடியாது. அங்கே, தரை நம் மீது பூமியில் உள்ளது போன்ற எதிர் வினை ஏற்படாது. எனவே, திருகாணியைத் திருகும்போது, மறு கையால் விண்வெளி நிலையத்தை பிடித்தபடி நாம் எதிர்புறமாக திரும்பாமல், நம்மைப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
நடக்கும்போதும், வேகவேகமாக நடந்தால், எதிர் சுவரில் போய் வேகமாக முட்டிக்கொள்வார்கள். எனவேதான், மெதுவாக நடந்து, கைப்பிடி கொண்டு, வேண்டிய இடத்தில் நிற்க முடிகிறது. எனவேதான், விண்வெளி நிலையத்தில் எல்லாம், மெதுவான இயக்கத்தில் (Slow motion -- ஸ்லோ மோஷன்) நடப்பது போலான தோற்றம் தெரிகிறது.
மாமிச உணவுகள் செரிமானம் ஆகிவிடுகின்றன. அதுபோல, உடல் உள்ளுறுப்புகளும் மாமிசம்தானே! பிறகு ஏன் அவை மட்டும் செரிமானம் ஆவதில்லை?
பி. பாலா, 9ம் வகுப்பு, தி சப் அர்பன் மெட்ரிக், ராம்நகர், கோவை.
நமது விரலை வெட்டி அதனை உண்டால், அது குடலுக்குள் செல்லும்போது, அதுவும் செரிமானம் ஆகிவிடும். குடலும் ஓர் உறுப்புதானே, அது ஏன் செரிமானம் ஆவதில்லை என, நாம் வியக்கலாம்.
குடலின் உள்ளே குறிப்பிட்ட ஒரு ஜவ்வு பூச்சு உள்ளது. செரிமானத்திற்குப் பயன்படும் ஒருவகை அமிலம், இந்த ஜவ்வை கடந்து செல்ல முடியாது. இந்த ஜவ்வு சுரப்பது நின்றுபோனால், புளிகரைசல் வைத்த அலுமினிய பாத்திரத்தில் ஓட்டை விழுவதை போல, குடலை குடலே தின்றுவிடும்!
அதி உயர் மின்சாரத்தை, ஒரு ஃப்யூஸ் கேரியரில் இருக்கும் சின்னக் கம்பி, எப்படி கையாள்கிறது?
க.விஷ்வப்ரியா, 4ம் வகுப்பு, லட்சுமிராம் வித்யாலயா, வத்தலக்குண்டு.
மின்சாரக் கம்பியின் உலோகத்திலுள்ள அடர்த்தியின் அளவைப் பொறுத்து, மின்சாரம் பாய்வதில் தடை ஏற்படும். அவ்வாறு தடை ஏற்படும்போது, அந்தக் கம்பி வெப்பமடையும். வெப்பத்தில் எளிதில் உருகாத, செம்பு போன்ற உலோகத்தால் அந்தக் கம்பி செய்யப்பட்டு இருக்கும். ஃப்யூஸ் கேரியர் குறைவான வெப்பநிலையில் உருகிவிடும் தன்மை உடைய உலோகத்தில் செய்யப்பட்டு இருக்கும்.
வெள்ளி, தகரம், ஜிங்க் முதலியன, இதற்குப் பயன்படுத்தும் உலோகங்கள் ஆகும். ஏதாவது, பழுதின் காரணமாக, மின்கம்பியில் வழக்கத்தைவிட கூடுதல் மின்சாரம் பாய்ந்தால், ஃப்யூஸ் கேரியர் வழியாக செல்லும்போது, ஃப்யூஸ் கம்பி உருகிவிடும். அதன் காரணமாக, மின் இணைப்பு துண்டிக்கப்படும். இதனால், மின்சாதனங்கள் கூடுதல் மின் அழுத்தத்தால் பழுதடையாமல் பாதுகாக்கப்படுகின்றன.

