PUBLISHED ON : ஜன 06, 2020
'ஒளி அளாவ அமைந்தனை' என்று சூரியனைப்பார்த்துப் பேசுகிறார் பாரதிதாசன்.
'அளாவுதல்' என்ற சொல்லின் பொருள், கலத்தல். சூரியனுடைய ஒளி உலகில் எங்கெங்கும் சென்று கலக்கிறதாம்!
குழந்தைகள் ஒழுங்காகச் சாப்பிடமாட்டார்கள். உணவைத் தங்களுடைய பிஞ்சுக்கைகளால் அளாவுவார்கள். அப்படிக் குழந்தைகள் அளாவிய கூழ், அமுதத்தைவிட இனியது என்கிறார் திருவள்ளுவர்:
'அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்
சிறு கை அளாவிய கூழ்.'
கம்பராமாயணத்தில், 'மஞ்சு அளாவிய மாணிக்கப் பாறை' என்றொரு வரி வருகிறது. மலையுச்சியில் உள்ள மாணிக்கப் பாறைகளில் மேகங்கள் சென்று கலக்கின்றனவாம்.
இதேபோல், 'வானளாவிய மலை' என்கிற விவரிப்பைக் கேட்டிருப்பீர்கள். 'வான்+அளாவிய', அதாவது, வானத்தையே சென்று தொடுகிற அளவுக்கு உயரமான மலை.
சில நிகழ்வுகள் 'உலகளாவிய வரவேற்பைப் பெற்றன' என்பார்கள். 'உலகு+அளாவிய', அதாவது, உலகெங்கும் அந்த நிகழ்வுகள் நன்கு ஏற்கப்பட்டுள்ளன.
'அளாவிய' என்ற சொல்லை 'அளாய' என்று சுருக்கிச் சொல்வதும் உண்டு. எடுத்துக்காட்டாக, நாலடியாரில் ஒரு பாடலில் 'பாலோடு அளாய நீர்' என்ற பயன்பாடு வருகிறது.
இதன் இன்னொரு வடிவம், 'அளவுதல்'. திருவருட்பாவில் வள்ளலார் இறைவனிடம் இவ்வாறு பேசுகிறார், 'தேங்காய்ப்பால், சர்க்கரைச்சாறு, வாழைப்பழம், பசுநெய், நல்ல தேன், பலாச்சுளை, மாம்பழம், மற்ற பழங்களையெல்லாம் வடித்து அளவி ஏழைக்கு அளித்தீர்களே!'
அளாவுதல் என்ற சொல்லுக்குக் கலந்து பேசுதல், விசாரித்தல் என்ற பொருளையும் சொல்கிறார்கள். இதையே 'அளவளாவுதல்' என்று சொல்லும் வழக்கமும் உள்ளது.
எடுத்துக்காட்டாக, விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்களுடன் அவர் நன்கு அளவளாவினார்.
குளிர்காலங்களில் குளிப்பதற்காக நீரைச் சூடாக்குவார்கள். சில நேரங்களில், அந்தச் சூடு நாம் எதிர்பார்ப்பதைவிட அதிகமாகிவிடும்.
அந்த நேரத்தில், வெந்நீரோடு குளிர்ந்த நீரைக் கலந்து அதன் வெப்பநிலையைக் குறைப்பார்கள். இதை 'விளாவுதல்' என்பார்கள். 'வெந்நீர் விளாவி வெச்சிருக்கேன்' என்று பேச்சுமொழியில் சொல்வார்கள்.
இதேபோல், மோரை நீர்க்கச்செய்வதற்காக அதில் நீரூற்றுவதற்கும் 'விளாவுதல்' என்ற சொல் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, 'வெய்யில்ல ரொம்பக் களைச்சுப்போய் வந்திருக்கீங்க, கொஞ்சம் மோர் விளாவிக் கொடுக்கட்டுமா?'
ஆக, 'விளாவுதல்' என்ற சொல்லும் 'கலத்தல்' என்ற பொருளில்தான் பயன்படுகிறது. 'கடல் கொதித்தால் விளாவ நீர் எங்கே?' என்று ஒரு பழமொழிகூட இருக்கிறது.
'அளைதல்' என்ற சொல்லுக்கும் 'கலத்தல்' என்ற பொருளுண்டு. ஆனால், அது இன்னும் கொஞ்சம் நுட்பமான கலத்தல், அதாவது, கையைக் கொண்டு கலத்தல்.
கண்ணனைப் பற்றிய பாடலில் பெரியாழ்வார், தன் பாசுரத்தில், 'வெண்ணெய் அளைந்த குணுங்கு' என்று சுவையாக எழுதுகிறார். மேலும், 'கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அளைகின்றான்' என்றும் குறிப்பிடுகிறார்.
அளாவுதல், விளாவுதல், அளைதல் இப்படிப் பொருள் தொடர்புள்ள பல இனிய சொற்கள் தமிழில் அளாவியிருக்கின்றன.
- என். சொக்கன்
