PUBLISHED ON : நவ 05, 2018

நீங்கள் புதிதாக ஒரு பள்ளிக்கு மாற்றப்படுகிறீர்கள். அங்கே பழைய நண்பர்கள் யாரும் இல்லை. புதிய பள்ளியில் எல்லா வசதிகள் இருந்தாலும், இணக்கமான நண்பர்களை புதிய இடத்தில் அவ்வளவு எளிதில் பெற முடியாது இல்லையா? இதை நினைத்து சில நாட்கள் வருத்தப்படலாம். ஆனால், சில மாதங்களில் நம்மை அறியாமல் நாமே புதிய இடத்தில் நம்மைப் பொருத்திக் கொள்வோம். இது விலங்குகளுக்குப் பொருந்துமா?
அமெரிக்க வட கலிஃபோர்னியாவில் இருக்கும், 'மிஸ்டர் ஜீ' என்ற செம்மறி ஆட்டின் கதையைக் கேட்டால், ஆச்சரியப்படுவீர்கள்.
சியாரா பியாக் (Ciara Fiack) என்று கால்நடை மருத்துவர், கைவிடப்பட்ட கால்நடைகளைக் காப்பாற்றி வரும், தனியார் கால்நடைப் பூங்காவில் பணியாற்றுகிறார்.
அங்கு, 'மிஸ்டர் ஜீ' என்ற செம்மறி ஆடு, உணவு உண்ண மறுத்தது. இந்த ஆடு உணவு உண்ண ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறது என்பது பற்றி சியாராவிற்குப் புரியவில்லை. நோய் பாதிப்பு இருக்குமோ என்று இரத்த பரிசோதனை செய்தார். அப்படியும் எதுவும் இல்லை.
பூங்காவிற்கு வந்து ஐந்து நாட்களாக உண்ணாமல் போராட்டம் செய்தது. இதுகுறித்து பல பேர்களிடம் ஆலோசனை கேட்டார் சியாரா.
செம்மறி ஆட்டை அழைத்து வந்தபோது நடந்த சம்பவங்களை ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்தார். ஆடு கொண்டுவரப்பட்ட இடத்தில் ஜெல்லிபீன் என்ற கழுதையும் இருந்தது நினைவிற்கு வந்தது. அந்த ஜெல்லிபீன் கழுதை வேறு ஒரு பூங்காவிற்குச் சென்றது. அந்தப் பூங்காவின் பொறுப்பாளர்களிடம் பேசி, இவரது பூங்காவுக்கு அந்தக் கழுதையைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார் சியாரா.
600 ஏக்கர் நிலத்தின் ஏதோ ஒரு முனையில், ஜெல்லிபீன் கழுதை வந்திருப்பதை மோப்ப சக்தியால் கண்டுபிடித்து, துள்ளிக் குதித்து வெளியே ஓடிவந்தது செம்மறி ஆடு.
இந்தச் சம்பவம் தமக்குப் பல புரிதலைகளைக் கொடுத்ததாகத் தெரிவித்தார் சியாரா. மிஸ்டர் ஜீ ஆடு, உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டது.
அந்தப் பூங்காவில் இவ்விரு விலங்குகளின் நட்பைப் பற்றி பேசாதவர்கள் யாரும் இல்லை. விலங்குகள், தங்களுடைய நண்பனை விட்டுப் பிரிந்தால், எப்படி நடந்துகொள்ளும் என்பதைப் பல ஆராய்ச்சியாளர்களுக்கு இந்தச் சம்பவம் புரியவைத்தது.
இது கதையல்ல, நிஜம். இப்படிப் பல உயிரினங்கள் விநோத நண்பர்களோடு வாழ்ந்து வருவது பதிவுசெய்யப்பட்டு வருகின்றன. உங்கள் அருகில் இப்படி ஏதேனும் நடந்துள்ளதா?
- காரா
