PUBLISHED ON : நவ 05, 2018

“ஹேப்பி தீபாவளி மிஸ்!”
உமா மிஸ் மகிழ்ச்சியோடு சிரித்தார். வகுப்புகள் முடிந்து கிளம்பும் நேரம். ஒவ்வொருவரும் வாழ்த்துச் சொல்லிக்கொண்டோம். இந்த முறை வரிசையாக நான்கு நாட்கள் விடுமுறை என்பதால், பல திட்டங்கள் தீட்டி வைத்திருந்தேன். குறிப்பாக, நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும் என்பது எண்ணம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பட்டாசு, குதூகலங்கள் நடுவே படிக்கமுடியுமா? ஆனால், அதையும் மீறி கவனம் செலுத்தவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால், ஒருசில நிமிடங்களுக்கு மேல் கவனம் குவிய மாட்டேன் என்கிறது. பாடப் புத்தகம் படித்தாலும் இதே நிலைதானே?
“அப்படி இல்லை. பாடப் புத்தகத்தை பலரும் தலையெழுத்தே என்று படிக்கிறார்கள். அதனால், வேகம் வராது, கவனம் குவியாது. ஆனால், கதைப் புத்தகங்கள் அப்படி இல்லை. நான் பல நாள் சோறு தண்ணி இல்லாமல் 'பொன்னியின் செல்வன்' அஞ்சு வால்யூமும் படிச்சிருக்கேன் தெரியுமா?”
“சுவாரசியமா இருந்தா கவனம் தானே குவியுமா மிஸ்?”
“சுவாரசியமா ஒரு புத்தகம் இருக்கணும்ங்கறது முக்கியம் தான். அதேசமயம் எந்தப் புத்தகத்தையும் சுவாரசியமாகப் படிக்க முடியும். அது பாடப் புத்தகமாக இருந்தாலும் சரி. சின்னச் சின்ன பயிற்சிகள் இருந்தா போதும். வெளிநாட்டுல இதுக்குன்னே ஒருசில முறைகளைப் பின்பற்றி செயல்படுறாங்க.
உதாரணமா, தியானம். நம்ம ஊர்ல அதை ஆன்மிகத்தோட தொடர்புபடுத்தி, கெட்டவார்த்தை மாதிரி நினைக்கறாங்க. ஆனால், அதைத்தான் வெளிநாட்டுக்காரங்க 'மைண்ட்ஃபுல்னஸ்' (Mindfulness) என்று சொல்லி மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்கறாங்க. மனத்தை அமைதிப்படுத்துவது எப்படி, தொடர்ந்து தறிகெட்டு ஓடும் எண்ணங்களைக் குவிப்பது எப்படி, ஒரே ஒரு விஷயத்தில், கவனத்தைக் குவிப்பது எப்படி என்றெல்லாம் சொல்லித் தராங்க.
மாணவர்களுடைய கல்வி மேம்பாட்டுல தியானத்தினால் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தை ஆய்வு ரீதியாக நிரூபிச்சு இருக்காங்க. நம்ம இந்திய மரபுல இருப்பதாலேயே அவை பிற்போக்கானவை என்று நினைப்பது மிகவும் தப்பு. அதில் உள்ள வளமான பகுதிகளை எடுத்து நவீன வாழ்க்கைக்கு ஏற்ப மாற்றியமைப்பதுதான் புத்திசாலித்தனம்.”
“ஓ! தியானத்துக்கு அவ்வளவு பவர் உண்டா மிஸ்?”
“நிச்சயமா. இசைக்கும் இதேபோல் மனத்தை அமைதிப்படுத்தும் சக்தி உண்டு. பல பள்ளிகளில், ஒரு வகுப்புக்கும் அடுத்த வகுப்புக்கும் இடையே, குறைந்தது பத்து நிமிஷமாவது கிட்டார் வாசிக்கறது, பியானோ வாசிக்கறது நடைபெறுது. வகுப்பு ஒரு சுமை அல்ல, அது ரம்மியமானது, புத்துணர்ச்சி மிக்கதுன்னு புரியவைக்கற முயற்சி இது. ஹெவி மெட்டல் கருவிகளாக இல்லாமல், மிருதுவான இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால் மாணவர்கள் மத்தியில் ஏற்படும் விளைவுகளும் அளவிடப்பட்டு இருக்கு. முதலில், வகுப்புகளுக்கு இடையே இடைவெளி என்பதே பெரிய ரிலீஃப். ஒவ்வொரு வகுப்பும் தொடர்ச்சியாகப் பாடங்களை மாணவர்கள் புத்தியில் திணிக்கும்போது, அவர்களால் அவற்றைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. கவனம் குறைந்துபோய்விடுகிறது.
ஒவ்வொரு வயதிலும் சராசரியாக எவ்வளவு நேரம் கவனம் செலுத்த முடியும் என்பதைப் பற்றி ஒரு வாய்ப்பாடே சொல்லப்படுகிறது. அதாவது, இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் வரை ஒருவரால் சராசரியாக கவனத்தைக் குவிக்க முடியும். இது வயதுக்கு ஏற்ப அமையும்.”
“எப்படி மிஸ்?”
“உனக்கு என்ன வயது? பதினோரு வயசா? அப்படியானால் 11 x 2 = 22
நிமிடம். அதிகபட்சம் 11 x 5 = 55
நிமிடங்கள். அதாவது, ஒரு சமயத்துல உன்னால சாதாரணமாக 22 நிமிடங்கள் வரை கவனத்தைக் குவித்து ஒரு வேலையைச் செய்ய முடியும். அதிகபட்சமாக 55 நிமிடங்கள் வரை கவனத்தைக் குவிக்க முடியும். இதேபோல், ஒவ்வொரு வயசுக்கும் கணக்குப் போடலாம்.”
“ஓ! சூப்பராக இருக்கே!”
“ஆனால், இது ஆரோக்கியமாக மனத்தை வைத்திருப்பவர்களுக்கு. டி.வி., மொமைல், கேம்ஸ் என்று கவனத்தைச் சிதற அடித்தால், அது நிரந்தரமாக பாதிப்பை ஏற்படுத்திவிடும். அப்போது இந்த அளவுக்குக்கூட கவனத்தைக் குவிக்க முடியாது. கொஞ்சம் யோசிச்சுப் பாரு. ஒரு சமயத்துல உன்னால 55 நிமிடங்கள் வரை கவனத்தைக் குவிக்க முடிந்தால், எவ்வளவு விஷயங்கள் புரியும் தெரியுமா? எவ்வளவு செய்திகள் மண்டைக்குள் ஏறும் தெரியுமா? அவ்வளவு பாடங்களும் கணிதத் தேற்றங்களும் ஞாபகம் இருக்கும் தெரியுமா? புத்திக்கு அபார திறமை உண்டு. பல பேர், வகுப்புல சொல்லிக் கொடுக்கறதை ஞாபகம் வெச்சுக்கிட்டே தேர்வை எழுதுவாங்க. அவங்களுக்கு அந்த அளவுக்கு கவன ஒருமை இருக்கும்.”
“இது நடுவுல இசை மாதிரியான ரிலீஃப் கிடைச்சா, பெரிய நிம்மதி ஏற்படும். அப்புறம், அடுத்த பாடத்துல மீண்டும் கவனத்தைக் குவிக்க முடியும். அதுதானே மிஸ் திட்டம்?”
“கரெக்ட். இசை மட்டுமல்ல, விளையாட்டும், அந்த ரிலீஃபைத் தரும். முன்பே இதைப் பத்தி பேசியிருக்கோம். இரண்டு பாடவேளைகளுக்கு இடையே பத்து நிமிடமாவது விளையாட அனுமதிக்கும் பள்ளிகள் பத்தி சொல்லியிருக்கேன். அதுவும் நல்ல உத்தி.”
“வேற உத்திகள் இருக்கா மிஸ்?”
“ஒரு புத்திசாலித்தனமான வேலையையும் மேலை நாடுகள்ல செய்யறாங்க. வழக்கமான ஆசிரியர்களின் முகங்களையே மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டு இருப்பதற்குப் பதில், கொஞ்சம் வித்தியாசமாக, அதேசமயம் பயனுடையதாக ஒருசில முயற்சிகளை எடுக்கறாங்க. உதாரணமாக, 'போலீஸ்காரரை தத்தெடு' (அடாப்ட் எ காப் - Adopt a Cop) என்று ஒரு திட்டம்.
மாணவர்களுக்கு போலீஸைக் கண்டாலே கொஞ்சம் பயம், கொஞ்சம் ஆர்வம், கொஞ்சம் தயக்கம் இருக்கும். வேற எந்த வேலை செய்யறவங்களைவிடவும் மாணவர்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் போலீஸ்தான். அதனால், அமெரிக்கப் பள்ளிகளில், ஒரு போலீஸ்காரரை ஒவ்வொரு வகுப்புக்கும் வரவழைக்கிறார்கள். அவர் மாதம் ஒருமுறை போலீஸ் உடையிலேயே பள்ளிக்கு வருவார். மாணவர்களோடு ஜாலியாக கலந்து பேசுவார். அவர்கள் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்வார். அவர்களோடு கதை படிப்பார்…காவல்துறை மீது இருக்கும் பயம் விலகி, மரியாதை பிறந்துவிடும். பிஞ்சு மனத்தில் நல்லெண்ணம் ஏற்படும்.
வேறுவிதமான வாழ்க்கை விஷயங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், கவனம் இன்னும் நன்றாகக் குவியும். அதேசமயம் புதிய செய்திகளையும் மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள். எல்லாத்துக்கும் அடிப்படை கவனம். அதை இழுத்துப் பிடித்து, ஆக்கப்பூர்வமாக மாற்றினால்தான், பயன் கிடைக்கும்.”
என் கவனம் கலையாமல், எப்படியும் இந்த தீபாவளி விடுமுறையில் நான்கு புத்தகங்களேனும் படித்துவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.
