தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஐ.ஐ.டி.நுழைவுத் தேர்வுக்கு இலவச செயலி!

ஐ.ஐ.டி.நுழைவுத் தேர்வுக்கு இலவச செயலி!

ஐ.ஐ.டி.நுழைவுத் தேர்வுக்கு இலவச செயலி!


PUBLISHED ON : நவ 05, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 05, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்கள், சமூக வலைத்தளங்களில் நேரத்தை வீணாக்குகிறார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். அதைப் பயனுள்ளதாகவும் மாற்ற முடியும் என்று நிரூபித்துள்ளார்கள் மெட்ராஸ் ஐ.ஐ.டி. மாணவர்கள். தரண் சிங் தலைமையிலான குழு, மெல்வானோ (Melvano) என்ற புதிய சமூக வலைத்தள செயலியை உருவாக்கியுளளது. உயர்கல்வியின் கனவு இடமான ஐ.ஐ.டி. பொறியியல் நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பற்றி தரண் கூறுகையில், “சமூக உறவுகளை ஏற்படுத்தி, ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்வது தான் மனிதர்களின் அடிப்படையான தேவை. இன்றைய இளைஞர்களுக்கு, அது போதிய அளவில் கிடைக்கவில்லை. ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்கள், இந்த வெற்றிடத்தை நிரப்பியதால், அவை பெரும் வெற்றி கண்டன. அதேசமயம், அவற்றால் கவனச்சிதறலும், நேர விரயமும் அதிகமாக ஏற்படுகிறது. இந்தத் தளங்களை எப்படிப் பயனுள்ளதாக மாற்ற முடியும் என்று யோசிக்க ஆரம்பித்தோம்.

அப்போது தான், ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களை ஒருங்கிணைப்பதற்காக ஒரு செயலியை உருவாக்கலாமே என்ற எண்ணம் ஏற்பட்டது. காரணம், நாட்டில் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வை ஆண்டுதோறும், 13 லட்சம் பேர் எழுதுகின்றனர்; ஆனால், அவர்களில், 52 சதவீத மாணவர்கள், சுயமாக வந்து எழுதுபவர்கள்.

அவர்கள், எந்த நுழைவுத் தேர்வுப் பயிற்சி மையத்திலும் சென்று படித்துவிட்டு வந்து தேர்வு எழுதுவதில்லை. போதிய வசதி மற்றும் வாய்ப்புகள் இல்லாமல், பல மாணவர்கள் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு தயாரிப்புக்குப் பெரும் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு ஐ.ஐ.டி.யின் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு வழிகாட்டும் வாய்ப்பை ஏற்படுத்தித்தர முடிவு செய்தோம்.

இதற்காக, 'மெல்வானோ' என்ற செயலியை எங்கள் குழுவினர் உருவாக்கியுள்ளனர். முழுக்க முழுக்க இலவசமான இந்தச் செயலியில், எந்த மாணவரும் தம்மை இணைத்துக் கொள்ளலாம். அவர்கள் சுயமாகப் படிக்கும்போது ஏற்படும் சந்தேகங்களை இந்த தளத்தில் கேள்விகளாக எழுப்பலாம்.

பேராசிரியர்கள் உடனடியாக பதில் அளிப்பார்கள். அத்துடன், ஒத்த சிந்தனையுள்ள மாணவர்கள் இருக்கும் தளம் என்பதால், எளிதாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு உதவி கிடைக்கும்.

சுயமாகப் படிக்கும்போது, கவனச்சிதறல் பிரச்னை ஏற்படுவது வழக்கம். கேட்பதற்கு, கலந்துரையாடுவதற்கு யாரும் இல்லை என்பதால், கவனச்சிதறல் ஏற்படுவது சாதாரணமே. ஆனால், இந்தச் செயலி வழியாகச் சமூகக் குழுவில் தம்மை இணைத்துகொண்டால், அந்தப் பிரச்னை பெருமளவில் குறையும். காரணம், முழுக்க முழுக்க, ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்காகத் தயாராகும் குறிக்கோளுக்காகவே, ஒரு சமூகக்குழு செயற்படும்போது, மாணவர் ஆர்வத்துடன் கலந்துரையாடலில் பங்கேற்றுப் படிப்பார்கள்.

கூடுதலாக, தாம் இன்னொருவருக்கு உதவுகிறோம் என்ற எண்ணம் ஏற்படும்போது, மாணவர்களுக்கு மனநிறைவு கூடுகிறது. பிறருக்குச் சொல்லித் தருவதால், இன்னும் தெளிவு கிடைக்கும்.

பேராசிரியர்களிடம் எங்கள் திட்டத்தைச் சொன்னபோது, பெரும் வரவேற்பு அளித்தார்கள். மாணவர்களின் படிப்புக்கு தங்களாலான உதவியைக் கண்டிப்பாகச் செய்வதாக உறுதி அளித்துள்ளார்கள்.

ஒரு பேராசிரியரால் 50 லிருந்து 100 மாணவர்கள் வரை கையாள முடியும். தற்போதைக்குச் தலைசிறந்த 50 மெட்ராஸ் ஐ.ஐ.டி. பேராசிரியர்களுடன் செயலியைத் தொடங்கியுள்ளோம். விரைவிலேயே நாட்டின் மற்ற முன்னணி ஐ.ஐ.டி. பேராசிரியர்களும் செயலியில் இணைக்கப்பட உள்ளனர்.

'மெல்வானோ' செயலி திட்டத்துக்காக, சமீபத்தில் நடந்த 'கிரேசிபீ' இன் தேசிய அளவிலான 'ஹெட்நெக்ஸ்ட்' ஸ்டார்ட்அப் போட்டியில், மூன்று லட்சம் ரூபாயுடன் முதல் பரிசை வென்றுள்ளோம்.” என்றார்.

இன்னும் இரண்டு வாரங்களில் இந்தச் செயலியை வெளியிட உள்ளனர், தரண் தலைமையிலான குழுவினர். ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் இதை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us