PUBLISHED ON : நவ 05, 2018

ஹைதராபாத்தை சேர்ந்த ஹசன் அலிக்கு, 11 வயது ஆகிறது. எல்லா பிள்ளைகளையும்போல காலையில் வேக வேகமாகக் கிளம்பி பள்ளிக்கூடத்துக்கு ஓடுகிறான். மாலை வீட்டுக்கு வந்ததும், கொஞ்சநேரம் விளையாட்டு. பின்னர் ஹோம்வொர்க். இப்படிச் சராசரி பிள்ளையாக ஹசன் இருப்பதைப் பார்த்து, அவனை சாதாரணமாக எடை போட்டுவிடக் கூடாது. பொறியியல் கல்லூரி இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியராகவும் பணி செய்து வருகிறான் ஹசன் என்றால், நம்ப முடிகிறதா?
11 வயதே ஆன சிறுவன், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு நன்கு பாடம் எடுக்கிறான் என்பதை நம்ப முடியாவிட்டாலும், அதுதான் கடந்த ஓராண்டாக நடந்துவரும் அதிசயம். வரும் 2020க்குள், குறைந்தது ஆயிரம் இன்ஜினீயர்களுக்காவது பாடம் எடுத்துவிட வேண்டும் என்பது ஹசனின் விருப்பம்.
“நான் யூடியூப் வீடியோக்களின் வாயிலாக, உலக நடப்புகளையும் நிலவரங்களையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். அப்போது, வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியப் பொறியாளர்கள் பெரும்பாலானோருக்கு, சாதாரணமான வேலைகளே கிடைப்பது தெரியவந்தது. சாதாரண வேலை பார்ப்பதற்கு, பொறியியல் ஏன் படிக்க வேண்டும்? என்ன காரணத்தால், அவர்களால் படிப்புக்கு ஏற்ற வேலையில் சேர முடிவதில்லை என்பதைச் சிந்தித்தேன். நான் மேற்கொண்ட ஆய்வில், அவர்களுக்குத் தொடர்புத்திறனும், தொழில்நுட்ப அறிவும் போதிய அளவில் இல்லை என்று தெரியவந்தது.
எனக்கு வடிவமைப்பில் சிறுவயதிலிருந்தே ஆர்வம். அதனால், தகவல்தொடர்பு மற்றும் தொழில்நுட்பப் பாடங்களைக் கற்றுக்கொண்டேன். இதையடுத்து, எனது வீட்டுக்கு அருகில் உள்ள பொறியியல் மாணவர்களுக்கான பயிற்சி மையத்துக்குச் சென்று, எனது ஆர்வத்தைச் சொன்னேன். முதலில் சிரித்தார்கள். பின்பு நான் கற்றுக்கொண்டதைத் தெரிவித்தபோது, ஆச்சரியமடைந்தார்கள். எனினும், சிறிய பையன் வகுப்பெடுத்தால், மாணவர்கள் படிப்பார்களா என்று யோசித்தார்கள். நான் இலவசமாக வகுப்புகளை எடுக்க முன்வந்தேன்.
கடந்த ஓராண்டாக, தினமும் பாடங்களை நடத்தி வருகிறேன். பள்ளிக்கூடத்திலிருந்து 3 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவேன். அதன் பின்னர், 6 மணிக்குப் பயிற்சி மையத்துக்குச் செல்வேன். மெக்கானிக்கல், சிவில் மற்றும் எலெக்ட்ரிகல் இன்ஜினீயர்களுக்குப் பாடங்களை நடத்துகிறேன். திறமையான பொறியாளர்களை உருவாக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.” என்கிறார் ஹசன்.
இதுதொடர்பாக, ஹசனிடம் படிக்கும் சிவில் இன்ஜினீயர் மாணவியான சுஷ்மா கூறும்போது, “நான் இங்கே ஒன்றரை மாதங்களாக வருகிறேன். சிவில் இன்ஜினீயரிங் தொடர்பான மென்பொருள் ஒன்றைக் கற்றுக்கொள்ள வந்தேன். ஹசன் தான் எனக்குப் பாடம் எடுக்கிறார். என்னால், அவரிடமிருந்து சிறப்பாகக் கற்றுக்கொள்ள முடிகிறது. விரிவாகவும், முழுமையாகவும் எனக்குச் சொல்லித் தருகிறார்” என்று தெரிவித்தார்.
