தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வலி மிகுதல் -7: முற்றியலுகரத்துக்கு ஒற்று வரும்

வலி மிகுதல் -7: முற்றியலுகரத்துக்கு ஒற்று வரும்

வலி மிகுதல் -7: முற்றியலுகரத்துக்கு ஒற்று வரும்


PUBLISHED ON : நவ 05, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 05, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தனிக்குறில் எழுத்தைத் தொடர்ந்து 'கு சு டு து பு று' ஆகிய உகர வல்லின உயிர்மெய்களில் ஏதேனும் ஒன்று வந்தால், அது முற்றியலுகரம் ஆகிவிடும். அதனால்தான், 'தனிக்குற்றெழுத்து அல்லாத' ஒன்றின்பின் வரும் கு சு டு து பு று எழுத்துகளே குற்றியலுகரம் ஆகும்.

தனிக்குறில் எழுத்துகளை அடுத்து கு சு டு து பு று வரும் சொற்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

நாடு என்பதில், தனி நெடிலை அடுத்து 'டு' என்னும் வல்லின உகரம் வந்தது. நா என்பது தனிநெடில். அதையடுத்து 'டு' என்னும் வல்லின உயிர்மெய் உகர எழுத்து வந்தது. இது குற்றியலுகரம். பாடு, படகு, வீடு, ஆறு என, இவை எல்லாமே குற்றியலுகரங்கள்.

நடு என்பதில் தனிக்குறிலை அடுத்து 'டு' என்னும் வல்லின உகரம் வந்தது. ந என்பது தனிக் குறில் எழுத்து. அதையடுத்து 'டு' என்னும் வல்லின உயிர்மெய் உகர எழுத்து வந்தது. இதுதான் முற்றியலுகரம். படு, பகு, விடு, அறு என, இவை எல்லாமே முற்றியலுகரங்கள்.

தனிக் குறிலை அடுத்து கு சு டு து பு று ஆகிய வல்லின உயிர்மெய் உகரங்கள் மட்டுமல்ல;

ரு ணு ழு லு ளு போன்ற எந்த உகர உயிர்மெய் எழுத்து வந்தாலும், அது முற்றியலுகரம்தான்.

விழு என்பது முற்றியலுகரம். இங்கே தனிக் குறிலை அடுத்து ழு வந்தது.

இதுபோல, முற்றியலுகர ஈற்றெழுத்தை உடைய சொற்களை அடுத்து வல்லின எழுத்தில் தொடங்கும் சொல் வந்தால், பெரும்பாலும் வலி மிகும்.

தெரு + கடை = தெருக்கடை

எரு + குவியல் = எருக்குவியல்

கரு + சிதைவு = கருச்சிதைவு

நடு + காடு = நடுக்காடு

முழு + பாடம் = முழுப்பாடம்

கணு + கால் = கணுக்கால்

விழு + புண் = விழுப்புண்

பசு + கூட்டம் = பசுக்கூட்டம்

எடுத்துக்காட்டுகளில் உள்ள சொற்களில் முதலெழுத்து குறிலெழுத்தாக இருக்கிறது. இரண்டாம் எழுத்து உகர உயிர்மெய்யாக இருக்கிறது. அவ்விரண்டு எழுத்துகளும் சேர்ந்து வரும் சொற்களாக இருக்கையில், வருமொழி வல்லினத்தில் தொடங்கும் சொல் வந்தது. அதனால் அங்கே வலி மிகுந்தது.

- மகுடேசுவரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us