தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கேள்விச் செல்வம்

கேள்விச் செல்வம்

கேள்விச் செல்வம்


PUBLISHED ON : நவ 05, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 05, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கேள்வி' என்றால் என்ன?

வகுப்பறையில், ஆசிரியர் மாணவர்களிடம் கேட்பது கேள்வி. அதற்கு, மாணவர்கள் சொல்வது பதில்.

இதேபோல், தேர்வின்போது கேள்வித்தாள் தரப்படும். மாணவர்கள் அந்தக் கேள்விகளுக்குப் பதில் எழுதவேண்டும்.

பள்ளிக்கு வெளியிலும் கேள்வி - பதில் உண்டு. கடைக்குச் சென்று, ''இந்தப் பேனா என்ன விலை?'' என்று கேள்வி கேட்கிறோம். ''ஐந்து ரூபாய்'' என்று பதில் வருகிறது.

கேள்விகளுக்குப் பின்னால், '?' என்ற குறி இடம்பெறுகிறது. ஆகவே, அதைக் கேள்விக்குறி என்றே அழைக்கிறோம்.

இதுவரை நாம் பார்த்த 'கேள்வி'கள் அனைத்தும், ஆங்கிலத்தில் 'Question' என்று அழைக்கப்படுபவை. 'Answer' எனப்படும் பதிலைப் பெறும் நோக்கத்துடன் கேட்கப்படுபவை.

தமிழில், 'கேள்வி' என்ற சொல்லின் பொருள் இத்துடன் நின்றுவிடுவதில்லை. இன்னும் அகன்று விரிந்து ஆழமாகச் செல்கிறது, ஓர் உயர்ந்த நோக்கத்தைச் சுட்டுகிறது.

திருக்குறளில் 'கேள்வி' என்ற பெயரில் ஓர் அதிகாரமே உள்ளது; அதன் முதல் குறள்:

'செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம், அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை.'

ஆனால், இந்தக் குறளில் 'கேள்வி' என்ற சொல்லே இல்லையே; அப்படியானால், திருவள்ளுவர் என்ன சொல்ல வருகிறார்?

செல்வங்களிலெல்லாம் மிகச்சிறந்த செல்வம், செவியால் 'கேட்கப்படுகிற' செல்வம்தான் என்கிறார் திருவள்ளுவர். இதைத்தான் 'கேள்வி' என்கிறோம்.

'கேள்', 'கேட்டல்' என்ற சொற்களிலிருந்துதான் 'கேள்வி' வருகிறது; இதன் பொருள், நல்ல விஷயங்களைப் பிறரிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்தல்.

சும்மா கேட்டால் போதாது; அதிலிருக்கும் விஷயங்களை நுட்பமாகப் புரிந்துகொள்ள வேண்டும். இப்படிப்பட்டவர்களை 'நுணங்கிய கேள்வியர்' என்கிறார் திருவள்ளுவர்.

கேள்வியராவது எப்படி?

நாள்தோறும் மூன்று வேளை வயிற்றுக்குச் சோறு சாப்பிடுகிறோமல்லவா? அதுபோல, செவிக்கும் சாப்பாடு போடவேண்டும். அதாவது, நல்ல விஷயங்களை, சான்றோருடைய அறிவுரைகளைத் தொடர்ந்து கேட்கவேண்டும்.

இன்னும் சொல்லப்போனால், 'செவிக்கு உணவு' இல்லாதபோதுதான், நாம் வயிற்றுக்கு உணவு தேடவேண்டும் என்கிறார் வள்ளுவர். இதன் பொருள், எந்நேரமும் புதியவற்றைக் கேட்டுத் தெரிந்துகொள்வதில் ஆர்வத்துடன் இருக்கவேண்டும். நம்முடைய பெற்றோர், சகோதரர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், பல துறைகளைச் சார்ந்த அறிஞர்கள் என, எல்லோரிடமிருந்தும் பலவற்றைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

கேட்டால் போதுமா? வாசிக்கவேண்டியதில்லையா?

வாசிப்பதும் சிறப்புதான். ஆனால், இவ்வுலகில் எத்தனையோ துறைகள், எத்தனையோ தலைப்புகள், எத்தனையோ நூல்கள் உள்ளன. அவை அனைத்தையும் ஒருவர் வாசிப்பது சாத்தியமில்லை. ஆகவே, நம்மைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து அவர்களுடைய அறிவைக் கேட்டுத் தெரிந்துகொள்வது அதிக நன்மை தரும்.

நம் நாட்டில் எத்தனையோ பாமர மக்கள் படிக்கத் தெரியாதவர்களாக உள்ளனர். படிப்பறிவற்ற அவர்களும் நல்ல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

கேள்விச் செல்வத்தை அலட்சியப்படுத்தக்கூடாது. தன்னால் இயன்றவரை நல்ல விஷயங்களைக் கேட்கவேண்டும். நாம் எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்கு அவை நமக்கு நன்மை பயக்கும்.

- என். சொக்கன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us