PUBLISHED ON : ஆக 15, 2016

நான்கு சட்டங்களுக்குள் அடைத்துவைக்கப்படும் புகைப்படங்கள் பேசுமா? மோனலிசா போன்ற ஓவியங்கள் என்றால் பேசும். பல நூறு வருடங்களாக, எல்லோராலும் பேசப்படும் அந்த ஓவியத்தை வரைந்தவர், இத்தாலி நாட்டைச் சேர்ந்த லியனார்டோ டா வின்சி (Leonardo da Vinci).
ஓவியத்திற்கு அவர் முதலில் வைத்த பெயர் மடோனா லிசா (Madonna lisa). அதன் சுருக்கம் மோனலிசா (Monalisa).
அந்த ஓவியத்துக்கு மாடல் வேலை செய்த பெண்ணின் பெயர் லிசா கிரார்தினி (Lisa Gherardini). அப்போது அவரின் வயது 24. இரண்டு குழந்தைகளின் தாய்.
மோனலிசா ஓவியம் தைல வண்ணம் கொண்டு வரையப்பட்டது (ஆயில் பெயின்டிங் - Oil painting).
இது கி.பி. 1503ல் இருந்து கி.பி. 1506ஆம் ஆண்டிற்குள் வரையப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த ஓவியம், இரண்டாம் உலகப் போரின்போது, ஒரு பெட்டியில் வைத்து பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டது. போர் முடிந்த பிறகு, மறுபடியும் காட்சிக்கு வைக்கப்பட்டது. அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் மோனலிசா ஓவியம் எடுத்துச் செல்லப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டது.
ஓவியத்தில் இருக்கும் பெண்ணிற்குப் புருவங்கள் இல்லை. இது காலப்போக்கில் அழிந்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். அல்லது டாவின்சி ஓவியத்தை முழுமையாக வரையாமல் புருவத்தை விட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. டா வின்சியின் பெயர், கையெழுத்து, வருடம் இந்த ஓவியத்தில் இல்லை.
ஓவியத்தில் எது இருந்தாலும் இல்லா விட்டாலும் பல நூறு வருடங்களாய் அது பேசப்படுகிறது என்பது மட்டுமே நிஜம்.
